தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு குடந்தை கீழ்க்கோட்டம் நாகேஸ்வரர் திருக்கோயில்

வேறு பெயர்கள் :

குடந்தை கீழ்க்கோட்டமுடைய நாயனார், வில்வவனநாதர், குடந்தைக் கீழ் கோட்டத்து கூத்தனார், ஸ்ரீவில்வனேசர், ஸ்ரீபாஸ்கரேஸ்வரர்

ஊர் :

கும்பகோணம்

வட்டம் :

கும்பகோணம்

மாவட்டம் :

தஞ்சாவூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

திருநாகேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

பெரியநாயகி

தலமரம் :

வில்வம்

திருக்குளம் / ஆறு :

சூர்ய புஷ்கரணி தீர்த்தம், சிங்கமுக தீர்த்தம், நாகதீர்த்தம்

ஆகமம் :

பூசைக்காலம் :

உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம்

திருவிழாக்கள் :

பிரதோஷ வழிபாடு, மகாமகம் தீர்த்தவாரி, புரட்டாசி நவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனிப் பெருவிழா, சித்திரை மாதம் சூரியப் பூஜை

தலவரலாறு :

பூவுலகைத் தாங்கும் ஆதிசேஷன் ஒருமுறை பாரம் தாங்காமல் சிவபெருமானிடம் முறையிட்டான். உலகைத் தாங்கும் சக்தியை வேண்டினான். சிவபெருமானும் பிரளயக் காலத்தில் அமுதக்குடத்திலிருந்து வில்வம் விழுந்த இடத்தில் இலிங்கம் நிறுவி பூசனை செய்து வர சக்தி கிடைக்கும் என்று அருளினார். மேலும் ஆயிரம் தலைகளில் தாங்கும் பாரம் ஓரே தலையில் தாங்குமாறு சக்தி பெறுவாய் என்று கூறினார். அவ்வாறே ஆதிசேஷனும் குடந்தையில் அமுதக்குடத்திலிருந்து வில்வம் விழுந்த இடத்தில் இலிங்கத்தை நிறுவி பூசை செய்து சக்தியைப் பெற்றான். வில்வம் விழுந்ததால் இவ்விடம் வில்வவனம் எனப்பட்டது. ஆதிசேஷன் பூசனை செய்ததால் இறைவன் நாகேஸ்வரர் எனப்பட்டார். மேலும் ராகு, கேது இவற்றால் ஏற்படும் தோஷங்களும் இங்கு வந்து வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் கருவறை மேற்குப்புற தேவகோட்டத்தில் உள்ள உமையொரு பாகனை வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர் என்பதுவும் நம்பிக்கை.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

அப்பக்குடத்தான், கஜேந்திரவரதன், படிக்காசுநாதர் கோயில்கள்

சுருக்கம் :

தேவாரப்பாடல் பெற்ற காவிரித்தலம் இது. தேவாரப்பபாடல் பெற்ற 274 தலங்களில் இத்தலம் 90-வது தலமாகும். திருநாவுக்கரசர் பாடியுள்ளார். மேலும் இக்கோயில் பல்லவர் காலத்தில் மண்டளியாக இருந்து சோழர்காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்கிறது. ஆதிசேஷன் பூசை செய்ததால் நாகேஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்று என்பர். குடந்தைக் கீழ்கோட்டமுடைய நாயனார் என்று கல்வெட்டுகளில் இறைவன் குறிப்பிடப்படுகிறார். இக்கோயிலின் கட்டட அமைப்பு நன்கு வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டது. எனவே சித்திரை மாதத்தில் 11, 12, 13 ஆகிய நாட்களில் சூரியனின் ஒளி கருவறையின்மீது நன்கு விழுகிறது. இங்குள்ள நடராச மண்டபம், "பேரம்பலம்" எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது; இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்) சக்கரம் கண்டு மகிழத் தக்கது, இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது; பெயரே ஆனந்தத் தாண்டவ நடராசசபை அல்லவா? நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன. 'பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்' என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலை, இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டி, சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். நாகேஸ்வரர் உயரமான ஆவுடையாருடன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். ஆனால் பாணம் சிறியதாக அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள பிரளயக் கால உருத்திரர் சிற்பம் மிகவும் புகழ் பெற்றது. இக்கோயிலுக்குள் மகாகாளி சிறுகோயிலும், ருத்ர தாண்டவமாடும் வீரபத்திரர் சிறுகோயிலும் உள்ளன.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முதலாம் ஆதித்த சோழன், முதலாம் பராந்தக சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

குடந்தைக் கீழ்கோட்டம் நாகேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை 14, 15/1908, 223, 224, 225, 226, 227, 228, 229, 230, 232, 233, 234, 235, 236, 237, 238, 240, 241, 242, 243, 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 254, 255, 256, 257, 258, 259, 260/1911 மற்றும் தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதி 3, 12, 13, 19 ஆகியவற்றிலும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள குடந்தை கல்வெட்டுகள் என்னும் நூலிலும் வெளியாகியுள்ளது. இக்கோயில் கல்வெட்டுகள் முதலாம் பராந்தகன், கோப்பரகேசரி, இராஜகேசரி வர்மன், சுந்தரசோழன், ஆதித்த கரிகாலன், முதலாம் இராஜேந்திரன், இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராஜராஜன், பாண்டியன் மாறஞ்சடையன், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் ஆகிய மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவையாகும். இக்கல்வெட்டுகள் இக்கோயிலின் இறைவர் திருக்கீழ்க்கோட்டமுடையாருக்கு விளக்கெரிக்க அளிக்கப்பட்ட சாவாமூவாப் பேராடுகள் கொடை, திருவமுது அளிக்க நிலம் மற்றும் பொன் கொடை, காசு கொடை, ஆழ்வான் திருப்புறம்பியமுடையான் ஆன செம்பியன் பல்லவரையன் என்பான், கீழ்க்கோட்டமுடையார் கோயிலின் கிழக்குத் திருச்சுற்று மாளிகையில், தன் பெயரில் திருப்புறம்பியமுடையாரெனும் இறைவனை எழுந்தருளச் செய்தான். அவ்விறைவனுக்குப் பூசை, திருவமுது, திருவிளக்குகள் இவைகளுக்கும், பூசை செய்யும் நம்பிமார்களுக்கு நிமந்தத்திற்கும், திருக்கீழ்க்கோட்டமுடையாருக்கு மகரதோரணம் செய்து அளிப்பதற்கும் ஆகிய திருப்பணிகளுக்குக் கோயிற் பாண்டாரத்தில் 17,000 காசுகள் அளித்துள்ளான். இக்கல்வெட்டு நாகேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தின் வடக்குப்புறச் சுவரிலுள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 35-வது ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும்.ஆதித்த கரிகாலனின் 10-ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டொன்று, கோயில் மயிலையான் மதுராந்தக மூவேந்த வேளான் என்பவன் திருக்கீழ்க்கோட்டமுடையார்க்கு விளக்கெரிக்க தொண்ணூற்றாறு ஆடு கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. அவ்வாடுகளை மன்றாடிகள் சிலர் தாம் ஏற்றுக்கொண்டு நெய் அளித்திருக்கின்றனர். பிராணன் குட்டேறன், கங்கன் ஆகிய மன்றாடிகள் பெயர் குறிக்கப்படுகிறது. இக்கோயிலில் அறச்சாலையொன்று இருந்த குறிப்பையும் இக்கல்வெட்டு தருகிறது. இம்மன்னனின் மற்றொரு கல்வெட்டு குடந்தைக் கீழ்க்கோட்டத்து மூல அவைப் பெருமக்கள், இங்கணாட்டைச் சேர்ந்த சிற்றிங்கணுடையான் கோயின் மயிலையான் ஆன பராந்தக மூவேந்த வேளானுக்கு நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலம், வேதம் வல்லவர்கள் இருபது பேருக்கும், சிவயோகிகள் ஐவருக்கும் உணவு படைக்க அளிக்கப்பட்ட நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. உத்தமசோழனின் தேவியும் முத்தரையரின் மகளுமான வீரநாராயணியார் இக்கோயிலில் ஒரு நொந்தா விளக்கெரிக்க தொண்ணூற்று ஆறு ஆடுகள் அளித்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது. இதனைப் பெற்றுக்கொண்டு கொற்றவன் தேறிலன் என்பான் அரைவிளக்கும், அயல் அஞ்சி பள்ளியும், அயல் அஞ்சி பழைநூரும் ஆகிய இருவரும் அரை விளக்கும் எரிக்க ஒத்துக்கொண்டனரென்ற செய்தியும் கோயில் கருவறையின் வடக்குச்சுவரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. முதலாம் பராந்தகச் சோழனின் 40-வது ஆட்சியாண்டு கல்வெட்டொன்று மாடிலன் பட்டன் மகாதேவன் நாராயணன் என்பான் திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு நொந்தா விளக்குக்கும், சூரிய தேவற்கு சிதாரிக்கும், கற்பூர விளக்குக்கும் வகை செய்ததைக் குறிக்கிறது. அதற்காக 30 மஞ்சாடிப் பொன் கொடுத்து அதன்மூலம் நிலம் வாங்கித் தந்ததைக் குறிக்கிறது. பராந்தகனின் 38-வது ஆட்சியாண்டைக் குறிப்பிடும் மற்றொரு கல்வெட்டு, திருநறையூர் நாட்டு ஐய்யாற்றைச் சேர்ந்த, மைஞ்சன் கவையன் என்பவன் நொந்தா விளக்கு ஒன்று எரிக்கத் தொண்ணூற்றாறு ஆடு கொடுத்ததையும், அதனை பெற்றுக் கொண்ட மன்றாடி நாகன் படுகன் அரை விளக்கும், மன்றாடி சாத்தன் அரை விளக்கும் எரிக்க ஒப்புக் கொண்டனர் என்று தெரிவிக்கிறது. முதலாம் இராஜேந்திரனின் 8-ஆம் ஆட்சியாண்டில், வேளான் மல்லியான் உண்ணா நங்கை திருக்கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் தாம் எடுப்பித்த சந்திரசேகர தேவருக்கு அமுதுபடிக்கும், திருவிளக்குக்கும் ஏற்பாடு செய்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.

சுவரோவியங்கள் :

நடராசர் சிறுகோயிலில் சிறிய கருவறையில் ஊர்த்துவதாண்டவ நடராசர் ஓவியம் உள்ளது.

சிற்பங்கள் :

கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. தேவகோட்டங்களில் முறையே தெற்கில் தென்முகக்கடவுள், மேற்கில் மாதொரு பாகன், வடக்கில் நான்முகன், மற்றும் அர்த்தமண்டப வெளிப்புறக் கோட்டத்தில் துர்க்கையும் உள்ளனர். மேலும் சுவர்ப்பகுதியில் உள்ள கோட்டப்பகுதியில் மிகவும் எழில் வாய்ந்த ஆண், பெண் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இவை சீனிவாசநல்லூர் குறங்கநாதர் கோயில் சிற்பங்களைப் போன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தளங்களில் வடக்கில் நான்முகனும், தெற்கில் வீணைமீட்டும் பெருமானும், மேற்கில் திருமால் அமர்ந்த நிலையிலும் காட்டப்பட்டுள்ளனர். மேலும் ஆடல்மகள், மத்தளம் வாசிக்கும் பெண், துறவியர், புத்தர் போன்ற சிற்பங்களும் தளப்பகுதியில் அமைந்துள்ளன. இரண்டாவது தளத்தில் தற்காலத்தில் வடிவமைக்கப்பட்ட சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. நந்தி மண்டபத்தில் நந்தி சிற்பம் உள்ளது. ஆனந்த தாண்டவர தேர் கோயிலில் குதிரை, யானை ஆகியவை தேரை இழுத்துச் செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இராஜகோபுரத்தில் பிச்சை ஏற்கும் பெருமான், காலனை வதைத்த பெருமான் ஆகிய சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் இருதளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. நாற்கரமுள்ள நாகரபாணியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை சதுர வடிவமானது. மேலும் கருவறையைத் தொடர்ந்து இடைநாழிகை எனப்படும் அந்தராளம் காணப்படுகிறது. அந்தராளம் என்பது கருவறைக்கும் அர்த்தமண்டபத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியாகும். அந்தராளத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து முகமண்டபம் காணப்படுகிறது. அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்தில் பிரதிபந்த அதிட்டானம் என்று அழைக்கப்படுகிறது. தாங்குதளத்தில் குமுதப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுவர்ப்பகுதியிலும் கல்வெட்டுகள் உள்ளன. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுக்கு இடையே கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயில் ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. கருவறையைச்சுற்றிலும் வெளிப்புறமாக மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது (மூன்று பிரகாரம்). கருவறை விமானத்தின் தளத்தின் மீது எழிலார்ந்த கல் சிற்பங்கள் மற்றும் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மகா மண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தினையடுத்து நந்தி மண்டபம் உள்ளது. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயண புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. தேவகோட்டங்களில் முறையே தெற்கில் தென்முகக்கடவுள், மேற்கில் மாதொரு பாகன், வடக்கில் நான்முகன், மற்றும் அர்த்தமண்டப வெளிப்புறக் கோட்டத்தில் துர்க்கையும் உள்ளனர். மேலும் சுவர்ப்பகுதியில் உள்ள கோட்டப்பகுதியில் மிகவும் எழில் வாய்ந்த ஆண், பெண் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இவை சீனிவாசநல்லூர் குறங்கநாதர் கோயில் சிற்பங்களைப் போன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம் :

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோயில், கும்பகோணம்-612 001, தஞ்சாவூர்

தொலைபேசி :

0435-2430386

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00 -12.30முதல் மாலை 4.30-9.00 வரை

செல்லும் வழி :

கும்பகோணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை – தஞ்சை பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் பெருமளவில் உள்ளன. மகாமக குளம் நிறுத்தம் அல்லது உச்சிப் பிள்ளையார் கோயில் நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்லலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

கும்பகோணம், மயிலாடுதுறை

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

கும்பகோணம், மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி

தங்கும் வசதி :

கும்பகோணம், தஞ்சாவூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:45(இந்திய நேரம்)