தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

அக்னீஸ்வரர், தீவண்ணநாதர்

ஊர் :

திருக்கொள்ளிக்காடு

வட்டம் :

திருத்துறைப்பூண்டி

மாவட்டம் :

திருவாரூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

ஸ்ரீஅக்னீஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தீவண்ணநாதர்

தாயார் / அம்மன் பெயர் :

பஞ்சின்மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி

தலமரம் :

வன்னி, கொன்றை, ஊமத்தை

திருக்குளம் / ஆறு :

அக்னிதீர்த்தம்

ஆகமம் :

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தலவரலாறு :

சனிபகவான் தன்னைக் கண்டு மனிதர்களும் தேவர்களும் பயப்படுவதை அறிந்து மிகவும் மனம் வருந்தினார். ஈசனை நோக்கி இத்தலத்தில் தவம் புரிந்தார். சிவபெருமானும் அக்னி வடிவில் தோன்றி சனிபகவானை பொங்கு சனியாக மாற்றினார். மேலும் இத்தலத்தில் சிவனையும், சனியையும் வணங்குபவர்களது சனிதோஷம் விலகும் என்று அருள்பாலித்தார். எனவே இத்தலத்தில் சனீஸ்வரன் குபேரமூலையில் இருந்து அனைவர்க்கும் செல்வவளங்களை வாரி வழங்குவதாக தலவரலாறு கூறுகிறது. நளனும் திருநள்ளாற்றில் அவரைக் கண்டு வணங்கிய பிறகு இத்தலத்திற்கு வந்து வணங்கி இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

பொன்வைத்த நாதர் கோயில், சாட்சி நாதர் கோயில்

சுருக்கம் :

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலம். கொள்ளிக்காடர் என்று பதிகத்தில் இறைவனை சம்பந்தர் அழைக்கிறார். தீவண்ணநாதர் என்று வடமொழியில் இறைவனுக்கு மற்றுமொரு பெயர் உள்ளது. இங்குள்ள தேவியை பஞ்சின் மெல்லடியாள் என்று சம்பந்தர் கூறுகிறார். எனவே அம்மனும் இத்தலத்தில் அப்பெயரிலேயே அழைக்கப்படுகிறாள். சனிபகவானுக்குரிய சிறப்புத் தலமாக இத்தலம் விளங்குகிறது. திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ள திருக்கொள்ளிக்காடு பண்டு அடர்ந்த வனமாக அமைந்துள்ளது. நளனோடு இத்தலம் தொடர்படுத்தப்படுகிறது. இத்தலத்தில் முருகன் கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார். இது தனிச்சிறப்பாகும். நவக்கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளன.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு / செப்பேடு :

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

சதுரவடிவமான கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள தேவக்கோட்டங்களில் வடக்கில் நான்முகன், தெற்கில் ஆலமர்ச் செல்வன், கிழக்கில் அண்ணாமலையாரும் உள்ளனர். அர்த்தமண்டபக் கோட்டங்களில் முறையே தெற்கில் கணபதியும் காட்டப்பட்டுள்ளனர். பைரவர், நவக்கிரகம், மகாலட்சுமி, சனீஸ்வரன் ஆகியோருக்கு தனி சிறுகோயில்கள் அமைந்துள்ளன. முகமண்டபத்தில் நந்தி சிற்பமும், நால்வர் சிற்பங்களும் உள்ளன.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் எளிய அமைப்புடையது. கருவறை விமானம் ஒரு தளமுடையது. தாங்குதளத்திலிருந்து கூரைவரை கற்றளியாகவும், விமானம் சுதையாகவும் தற்போது அமைந்துள்ளது. எளிய அமைப்புள்ள தாங்குதளத்தைப் பெற்றுள்ளது. தாங்குதளத்திற்கு கீழே உபபீடம் எனப்படும் கருவறை விமானத்தின் உயரத்தை அதிகரிக்கும் தளம் காணப்படுகிறது. உபபீடத்தைத் தொடர்ந்து தாங்குதளம் உபானம், ஜகதி, உருளைக்குமுதம் ஆகிய உறுப்புகளைப் பெற்றும் பாதகண்டத்தில் யாளி வரிசையைப் பெற்றும் பிரதிபந்த அதிட்டானமாக விளங்குகிறது. பிரதிபந்த அதிட்டானம் என்பது அதிட்டானத்தில் அதாவது தாங்குதளத்தில் புடைப்புச் சிற்பங்களைக் கொண்டிருத்தலாகும். கருவறை விமானத்தின் சுவர்ப்பகுதிகளில் அரைத்தூண்களுக்கிடையே கோட்டங்கள் அமைந்துள்ளன. கோட்டங்கள் மகரத்தோரணம் எனப்படும் அலங்கார வளைவுகளைப் பெற்றுள்ளன. மகரத்தோரணத்தின் நடுவே புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தேவகோட்டங்களில் இறையுருவங்கள் வடிக்கப்பெற்றுள்ளன. சுதையாலான விமானம் வட்டவடிவமாக காட்சியளிக்கிறது. கருவறை சதுரவடிவமானது. இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். கருவறை மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையின் இடதுபுறம் அம்மன் திருமுன் காணப்படுகின்றது. அர்த்தமண்டபம், முகமண்டபம் அமைந்துள்ளது. கோபுரங்கள் இடம் பெறவில்லை. முகமண்டபத்தில் நந்தி சிற்பமும், நால்வர் சிற்பங்களும் அமைந்துள்ளன.

அமைவிடம் :

அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு-610 205, திருவாரூர்

தொலைபேசி :

04369 - 237454

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00-12.00 முதல் மாலை 5.00-8.00 வரை

செல்லும் வழி :

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் கச்சனம் அமைந்துள்ளது. கச்சனத்திலிருந்து மேற்கே 8 கி.மீ. தூரம் சென்றால் திருக்கொள்ளிக்காட்டை அடையலாம்.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

கச்சனம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

திருநெல்லிக்கா

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி, சென்னை மீனம்பாக்கம்

தங்கும் வசதி :

திருவாரூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:49(இந்திய நேரம்)