தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

tamilnadu_temples_new

அருள்மிகு திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

கோமுக்தீஸ்வரர், மாசிலாமணி ஈஸ்வரர், நந்தி நகர், நவகோடி சித்தர்புரம்

ஊர் :

திருவாவடுதுறை

வட்டம் :

திருவாவடுதுறை

மாவட்டம் :

நாகப்பட்டினம்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

கோமுக்தீஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

தாயார் / அம்மன் பெயர் :

ஒப்பில்லா முலைநாயகி

தலமரம் :

படர்அரசு

திருக்குளம் / ஆறு :

கோமுக்தி, கைவல்ய, பத்மதீர்த்தம்

ஆகமம் :

காமீகம்

பூசைக்காலம் :

உஷைக்காலம், காலை சந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்தசாமம்

திருவிழாக்கள் :

புரட்டாசியில் பிரம்மோற்சவம், மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம்

தலவரலாறு :

கைலாயத்தில் ஒருசமயம் சிவனும் உமையும் சொக்காட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிவன் தானே தொடர்ந்து வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டார். இதனால் அம்பாள் கோபம் கொள்ளவே சிவன் அவளை பூலோகத்தில் பசுவாக பிறக்கும்படி சபித்து விட்டார். இத்தலத்தில் சுயம்புமூர்த்தியாக உள்ள இலிங்கத்தை பசு தனது கொம்புகளால் குத்தி வெளிக்கொணர்ந்து வழிபட்டு தனது சாபம் நீங்க வேண்டியது. இறைவனும் அருள்பாலித்து அணைத்துக் கொண்டார். கோவாகிய பசுவிற்கு முக்தி அளித்ததால் கோமுக்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார்.

பாதுகாக்கும் நிறுவனம் :

திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இக்கோயில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

நாகை காயாகரோணம், தான்தோன்றீஸ்வரர், நீலகண்டேஸ்வரர், பல்லவனேஸ்வரர் கோயில்கள்

சுருக்கம் :

தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் 36-வது தலம் இது. முதலாம் பராந்தக சோழனால் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டது. அதிட்டானம் முதல் கலசம் வரை கற்றளியாக்க அம்மன்னன் ஆவடுதுறை அரனுக்கு அய்ந்நூறு பொன்கழஞ்சுகள் கொடையளித்துள்ள செய்தி இங்குள்ள அவனது மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. சிதம்பரம் கோயிலுக்கு பொன் வேய்ந்த பராந்தகன் பொன்னை அளித்து திருவாவடுதுறைக் கோயிலை கற்றளியாக்கியுள்ளான். தேவார மூவராலும் பாடல்பெற்ற இத்தலம் முற்காலச் சோழர் தம் கட்டடக்கலைக்கும், சிற்பத்திறனுக்கும் மிகச்சிறந்த சான்றாகத் திகழ்கிறது. திருவாவடுதுறை ஆதினத்தின் கீழ் உள்ள இக்கோயில் அம்மன் பசு வடிவில் சிவனை வழிபெற்ற தலபுராணம் உடையது. 44 அடி உயர மிகப்பெரிய நந்தி இங்குள்ளது. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையான திருமந்திரம இயற்றிய திருமூலர் சமாதி அடைந்த தலம் இதுதான். அணைத்தபிரான் என்னும் சிவன் உமையை அணைத்தபடி உள்ள சிற்பம் ஒன்று இங்குள்ளது. புத்திரப்பேறு, தம்பதியர் இடையே வேறுபாடு ஆகியவற்றிற்கு இப்பிரானை வழிபடுகின்றனர்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தக சோழன்

கல்வெட்டு / செப்பேடு :

இக்கோயிலின் உள்ள கல்வெட்டுகளில் முதலாம் பராந்தகனின் 3-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டே காலத்தால் முந்தியது. அக்கல்வெட்டில் கண்டப்படை முதல் கலசம் வரை முழுவதும் கற்றளியாக்க 500 பொன் கழஞ்சு கொடையாக கொடுத்துள்ளான். எனவே அதற்கு முன்னர் இக்கோயில் பாடல் பெற்ற தலமாக இருந்த போதிலும் மண்டளியாகவே இருந்துள்ளது என்பது தெரியவருகிறது.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் இராமாயணப் புடைப்புச் சிற்பங்கள் சிறிய சதுர வடிவில் காணப்படுகின்றன. அர்த்தமண்டப தென்புறக் கோட்டத்தில் கணபதியும், வடபுறக் கோட்டத்தில் துர்க்கையும் அமைந்துள்ளனர். கணபதியை அடுத்து பஞ்சரக்கோட்டத்தில் அகத்திமுனிவர் சிற்பம் அமைந்துள்ளது. தென்புற தேவகோட்டத்தில் ஆலமர்செல்வன் உள்ளார். மேற்குப்புற தேவகோட்டத்தில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சிற்பங்களை அமைத்த சிற்பியின் சிறுவடிவமும் அந்தந்த சிற்பங்களின் அருகிலேயே கல்வெட்டோடு காட்டப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பு. நந்தி மண்டபத்தில் மிகப்பெரிய நந்தி அமைந்து்ள்ளது. கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அன்னை ஒப்பில்லாமுலை நாயகிக்கு தனி திருமுன் அமைந்துள்ளது.

கோயிலின் அமைப்பு :

இக்கோயில் இருதளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. நாற்கரமுள்ள நாகரபாணியில் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை சதுர வடிவமானது. மேலும் கருவறையைத் தொடர்ந்து இடைநாழிகை எனப்படும் அந்தராளம் காணப்படுகிறது. அந்தராளம் என்பது கருவறைக்கும் அர்த்தமண்டபத்திற்கும் இடையில் காணப்படும் இடைவெளியாகும். அந்தராளத்தைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தைத் தொடர்ந்து முகமண்டபம் காணப்படுகிறது. அமைக்கப்பட்டுள்ளது. தாங்குதளத்தில் பிரதிபந்த அதிட்டானம் என்று அழைக்கப்படுகிறது. தாங்குதளத்தில் குமுதப்பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சுவர்ப்பகுதியிலும் கல்வெட்டுகள் உள்ளன. சுவர்ப்பகுதியில் அரைத்தூண்களுக்கு இடையே கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேவகோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. இக்கோயில் ராஜகோபுரத்தைக் கொண்டுள்ளது. கருவறையைச்சுற்றிலும் வெளிப்புறமாக மூன்று திருச்சுற்றுக்களைக் கொண்டுள்ளது (மூன்று பிரகாரம்). கருவறை விமானத்தின் தளத்தின் மீது எழிலார்ந்த சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மகா மண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தினையடுத்து நந்தி மண்டபம் உள்ளது.

அமைவிடம் :

அருள்மிகு கோமுக்தீஸ்வரர் கோயில், திருவாவடுதுறை ஆதீனம், திருவாவடுதுறை-609 803. நாகப்பட்டினம் மாவட்டம்

தொலைபேசி :

04364-232055

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 6.00 -12.00முதல் மாலை 4.00-8.00 வரை

செல்லும் வழி :

கும்பகோணத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

கும்பகோணம், மயிலாடுதுறை

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

நரசிங்கம் பேட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம் :

திருச்சி

தங்கும் வசதி :

கும்பகோணம், தஞ்சாவூர் விடுதிகள்

குறிச்சொற்கள் :

சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:45(இந்திய நேரம்)