தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021341-உரிச்சொல்

  • 4.1 உரிச்சொல்

    உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் பயின்று வராத சொற்களாகும்.

    உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் உரிய சொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்கும்.


    4.1.1 உரிச்சொல்லின் பொது இலக்கணம்

    உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார்,

    பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
    ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
    ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்

    என்று தமது நன்னூலில் (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.

    1.
    உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.
    2.
    ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம்; ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
    3.
    உரிச்சொல், பெயர்ச்சொற்களோடும் வினைச்சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.
    4.
    உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.

    எடுத்துக்காட்டு:
    நனி பேதை
    -
    நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச் சொல்லோடு சேர்ந்து வந்தது.
    நனி
    = மிகுதி, பேதை = அறிவற்றவன்
    சாலத் தின்றான்
    -
    சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து வந்தது.
    சால = மிகவும்
    மல்லல் ஞாலம்
    -
    மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்.
    கடி மலர்

    கடி நகர்

    -
    கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர்.
    காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.

    4.1.2 உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்

    உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும்.

    அவை :
    1.
    குணப் பண்பு
    2.
    தொழிற் பண்பு

    உரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்னர்க் கண்டோம். அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது குணப்பண்பு ஆகும்.

    எடுத்துக்காட்டு:

    மாதர் வாள் முகம்

    இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை உணர்த்துகிறது.

    (மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)

    இமிழ் கடல்

    இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 15:37:57(இந்திய நேரம்)