தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இலக்கணமும் அகராதியும்

  • 4.3 இலக்கணமும் அகராதியும்

    தமிழ்க் கல்வி கற்ற சிலரே இலக்கண நூல்கள் படைத்தும் அவற்றிற்கு உரையெழுதியும் வந்துள்ளனர். சிற்சில அகராதிகளும் இந்த நூற்றாண்டில் தொகுக்கப் பெற்றன.

    4.3.1 இலக்கண நூல்கள்

    முத்துவீரப்ப உபாத்தியாயர், விபுலாநந்தர், அரசஞ் சண்முகனார் போன்றோர் இலக்கண நூல்கள் பலவற்றை இயற்றினார்கள்.

    • முத்துவீரப்ப உபாத்தியாயர்

    வித்துவானாக இருந்த இவர், ஐந்திலக்கணம் பற்றிய முத்துவீரியம் என்ற நூலைப் பாடியுள்ளார். சூத்திரயாப்பில் இந்நூல் அமைந்துள்ளது.

    • விபுலாநந்தர்

    இலக்கியம், சமயம், தத்துவ ஞானம், அறிவியல், இசை என்ற பல்துறைகளில் வல்ல விபுலாநந்தர் நாடகத்தின் இலக்கணமும் நாட்டியத்தின் இலக்கணமுமாக உள்ள மரபுகளைத் திரட்டி மதங்க சூளாமணி என்ற நூலைத் தந்துள்ளார். அரபத்த நாவலர் பரத நாட்டியத்தைச் செய்யுள் வடிவில் தந்து உள்ளார். இவர் எழுதிய யாழ்நூல் தமிழ் இசையைப் பற்றிய ஒரு கருவூலம் ஆகும்.


    விபுலாநந்தர் வில்யாழ் மயில்யாழ்

    • அரசஞ் சண்முகனார்

    மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சார்ந்த புலவர் அரசஞ் சண்முகனார் இலக்கணம், இலக்கியம், சித்தாந்தம், சோதிடம் ஆகிய துறைகளில் வல்லவர். திருக்குறளில் ஆராய்ச்சி செய்த இவர், தொல்காப்பியப் பாயிர விருத்தி பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.

    4.3.2 அகராதிகள்

    சிவ சுப்பிரமணியக் கவிராயர் எழுதிய நாமதீப நிகண்டு; வேதகிரி முதலியார் இயற்றிய - வேதகிரியார் சூடாமணி நிகண்டு, தொகைப் பெயர் விளக்கம் ஆகியவை; சுப்பிரமணிய தேசிகர் எழுதிய கந்த சுவாமியம்; முத்துச்சாமி பிள்ளையின் நாநார்த்த தீபிகை; வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றிய சிந்தாமணி நிகண்டு, கோபாலசாமி நாயக்கர் தொகுத்த அபிதானத்தனிச் செய்யுள் நிகண்டு, அருணாசல நாவலர் தொகுத்த விரிவு நிகண்டு என்பன இந்நூற்றாண்டில் அச்சேறிய நிகண்டுகளாம். இவை தவிர ஆசிரியர் பெயர் அறியப்படாத ஆரிய நிகண்டு, பொதிய நிகண்டு, ஒளவை நிகண்டு என்ற நூல்களும் உள்ளன. மருத்துவத்துறை சார்ந்த அகத்தியர் நிகண்டு, போகர் நிகண்டு, வான நூல் பற்றிய கால நிகண்டு, காரக நிகண்டு என்பன இந்நூற்றாண்டினவே.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 11:50:10(இந்திய நேரம்)