தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்

  • 5.2 மரபுக்கவிதையும் புதுக்கவிதையும்

    20ஆம் நூற்றாண்டில் மரபு சார்ந்த கவிதைகளையும் வடிவங்களையும் உரைநடை பின்னுக்குத் தள்ளி விட்டது. எனினும் செய்யுள் நூல்கள் இயற்றப்படாமலில்லை. நாடு விடுதலையை நோக்கி, முன்னேறிய அதே வேளையில் காந்திய இலக்கியம், பொதுவுடைமை இலக்கியம், பெரியாரியம், குழந்தை இலக்கியம் முதலான துறைகள் மரபு சார்ந்து வளர்ந்தன. அதே வேளையில் பாரதி தொடங்கி வைத்த ‘வசன கவிதை’ சற்று உருமாறி ‘புதுக்கவிதை’ என்ற பெயர் கொண்டு புகழ் பெற்றது. படிமம், குறியீடு என்பவற்றை உட்கொண்டு, பல்வேறு மேனாட்டு இலக்கியக் கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையில் பல்வேறு கவிஞர்களால் புதுக்கவிதை இயற்றப்பெற்றது. இனி இவற்றின் வளர்ச்சி பற்றிக் காண்போம்.

    5.2.1 மரபுக் கவிதை

    நான்கு வகைப் பாக்களைக் கொண்டு, பழைய, புதிய வடிவங்களில் அமைக்கப்பெற்ற நூல்கள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

    • திரு.வி. கலியாண சுந்தரனார்

    சமயத் துறையில் தெளிவான அறிவைப் பெற்றிருந்த திரு.வி. கலியாண சுந்தரனார் அவர்கள் 1942ஆம் ஆண்டு முதல் பல செய்யுள் நூல்கள் எழுதத் துவங்கினர். திருமால் அருள் வேட்டல், முருகன் அருள் வேட்டல், சமரச தீபம், கிறிஸ்து மொழிக் குறள், சிவன் அருள் வேட்டல் என்ற நூல்களில் ஆழ்வார் நாயன்மார்களின் பாடல்களையும் அருட்பாவையும் பின்பற்றி எழுதியுள்ளார். புதுமை வேட்டல், பொதுமை வேட்டல் என்ற நூல்களில் சாதி வேறுபாடுகள் அற்ற புதிய சமுதாயத்தை வரவேற்கும் நெஞ்சத்தைக் காட்டுகிறார். ஏறத்தாழ 15 செய்யுள் நூல்களைத் திரு.வி.க எழுதியுள்ளார். ‘உரைநடையை விட அவரது செய்யுள் நூல்களில் எளிமை, தூய்மை, பொதுமைப் பண்புகள் நிறைந்திருந்தன’ என்கிறார் மு.வரதராசனார்.

    • மகாகவி பாரதியார்

    நெல்லை மாவட்டம் எட்டையபுரத்தில் தோன்றிய பாரதி, சுப்ரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். இவர் பண்டிதர் தமிழைப் பாமரர் தமிழாக்கியவர்; தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் ஊட்டியவர்; தேசபக்தி, தெய்வபக்தி என்ற இரண்டும் இருகண்களாகப் போற்றியவர்; கண்ணன், சக்தி புகழ் பாடியவர்; பெண்மைக்கு ஏற்றம் தந்து போற்றியவர்.

    பாரதியின் கவிதையிலே ஷெல்லியின் கற்பனை, வோர்ட்ஸ்வொர்த்தின் கடவுட் கொள்கை, பிரௌனிங்கின் வாழ்வு நோக்கு, டென்னிசனின் கவிதை எளிமை என்பவற்றைக் காணலாம். முறையாகச் சங்கீதம் கற்றதால் தம் பாடல்களுக்குத் தாமே மெட்டமைத்துப் பாடியுள்ளார். தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு, காவடிச்சிந்து, கிளிக்கண்ணி, நொண்டிச்சிந்து என மனங்கவரும் இசை வடிவங்களைத் தந்தவர். சித்தர் பாடல் மெட்டுக்களையும், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டுக்களையும் பின்பற்றிப் பாடியுள்ளார். தெருவில் ஊசி விற்கும் பெண்கள் பாடும் பாட்டு, மாவு இடிக்கும் பெண்கள் பாடும் பாட்டு, வண்டிக்காரன் பாடும் பாட்டு, பண்டாரங்கள் பாடும் பாட்டு, குடுகுடுப்பைக்காரன் பாட்டு என அவர் தம் கவனித்த இசை வடிவங்களை எல்லாம் தம் பாடல்களில் கையாளத் தவறவில்லை.

    விநாயகர் நான்மணி மாலை, தசாங்கம் என்பன பழைய மரபை ஒட்டிப் பாடப்பெற்றவை. குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் என்பன சிறு காப்பியங்கள். பாஞ்சாலியின் துன்பத்தில் பாரதத்தாயின் துன்பத்தைக் கண்டவர். வாழ்க்கையில் தாம் கடைப்பிடித்த புரட்சி, சீர்திருத்தம் என்பவற்றைப் பாடல்களில் கையாளப் பாரதி தவறவில்லை. உரைநடையில் அமைந்த பாட்டுப் போன்ற கருத்துக் கோவைகளும் கற்பனைச் சொல் ஓவியங்களும் பல இவரால் படைக்கப்பட்டன. “தெளிவாக அறிதல், தெளிவாக மொழிதல், கற்பவரின் உள்ளத்தைக் களிப்பித்து உருக்குதல்” என்பன இவர் தம் கவிதைப் பண்புகள். பக்திப்பாடல், தேசியப் பாடல், பெண் விடுதலைப் பாடல், தலைவர்களைப் போற்றிப் பாடியது எனப் பலவகைப் பாடல்களைப் பாரதி பாடியிருந்தாலும் அவர்க்குப் புகழை தேடித்தந்தது தேசபக்தி பாடல்களே!

    சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
                                 துஞ்சிடோம் - இனி- அஞ்சிடோம்
    எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்
                                 ஏற்குமோ-தெய்வம் - பார்க்குமோ?
    வந்தே மாதரம் என்றுயிர் போம்வரை
                             வாழ்த்துவோம்- முடி தாழ்த்துவோம்

    என்பது அவரது கவிதைத் திறத்திற்கு ஒரு சிறு சான்று.

    • புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


    பாரதிதாசன்

    புரட்சிக் கவிஞர் என்று புகழ்பெற்று விளங்கும் பாரதிதாசன் கனக சுப்பு ரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்டவர். பாரதியார் அரசியல் காரணத்தால் புதுச்சேரியில் தங்கியிருந்த காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகி, அவரது அன்பையும் பாராட்டையும் பெற்றார். தமது பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டார்.

    முதல் முதலில் வெளியான அவரது கவிதைத் தொகுப்பு பாரதிதாசன் கவிதைகள் ஆகும். பாண்டியன் பரிசு, தமிழச்சியின் கத்தி, வீரத்தாய், எதிர்பாராத முத்தம், காதலா கடமையா, சஞ்சீவி பர்வதத்தின் சாரல், குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு எனப் பல படைப்புகளை அவர் தந்துள்ளார். தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ் இனம் என்ற உணர்ச்சி மேலோங்கத் தமிழ் இயக்கம் என்ற தொகுதியைப் படைத்துள்ளார்.

    பாரதிதாசனுடைய நடை அவர் உள்ளம் போலவே வேகம் மிகுந்தது. எல்லோரும் வழங்கும் எளிய சொற்களிலேயே வேகத்தையும் ஆற்றலையும் ஊட்டுவார். பழைய மரபாக வந்த எளிய விருத்தங்கள், சிந்து மெட்டுகள், சிறு சிறு கண்ணிகள் என்பவற்றையே பெரிதும் கையாண்டு உள்ளார். மூட நம்பிக்கையையும் கண்மூடிப் பழக்கங்களையும் ஆத்திரம் கொண்டு எதிர்த்தவர் பாரதிதாசன்.

    இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
    இருக்கின்றது என்பானும் இருக்கின் றானே

    எனக் கோபம் கொண்டு பாடுகிறார். புதிய உலகை அமைப்பதை,

    புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
    போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்

    என்று பாடுகிறார்.

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு

    என்று பாடியவர் பாரதிதாசன். பாட்டாளி நலம்பெறப் புரட்சியே வழி என்பதை,

    ஓடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்
        உதையப்ப ராகி விட்டால், ஓர்நொடிக்குள்
    ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
        ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப் பாநீ

    என்று கூறுகிறார்.

    • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

    தேசிக விநாயகம் பிள்ளை என்ற இயற்பெயரை உடைய இவர் நாகர்கோயிலையடுத்த தேரூரைச் சேர்ந்தவர். எளிமை, இனிமை, இசை நயம் மிக்கவை இவர் பாக்கள். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் படித்து இன்புறும் வகையில் எளிய தமிழ்ச் சொற்களையே தம் பாடல்களில் கையாண்டவர். மலரும் மாலையும், தேவியின் கவிதைகள், ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்பவற்றைப் பாடியுள்ளார். உமர்கய்யாம் பாரசீக மொழியில் பாடியதை தமிழில் உமர்கய்யாம் பாடல்கள் என மொழிபெயர்த்துள்ளார். இவரது ஆசிய ஜோதி என்பது எட்வின் அர்னால்டின் ‘Light of Asia’ வின் தமிழாக்கம்.

    உள்ளத் துள்ளது கவிதை -
                              இன்ப உருவெடுப்பது கவிதை
    தெள்ளத் தெளிந்த தமிழில் -
                               உண்மை தெரிந்துரைப்பது கவிதை

    எனக் கவிதை இலக்கணம் கூறும் இவர், ஆசிய ஜோதியில்,

    பிறப்பினால் எவர்க்கும் - உலகில் பெருமை வாராதப்பா!
    சிறப்பு வேண்டுமெனில் - நல்ல செய்கை வேண்டுமப்பா!

    என்கிறார்.

    வெய்யிற் கேற்ற நிழலுண்டு - வீசும் தென்றற் காற்றுண்டு,
    கையிற் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு,
    தெய்வ கீதம் பலவுண்டு, தெரிந்து பாட நீயுண்டு,
    வையந் தருமிவ் வளமின்றி வாழும் சொக்கம் வேறுண்டோ?

    என்ற பாடல் உமர்கய்யாமின் “Here with a loaf of bread” என்ற பாடலின் தமிழாக்கம்.

    நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் ஒரு நகைச்சுவைப் பெட்டகம். நாஞ்சில் நாட்டில் நிலவிய பெண் வழிச் சொத்து முறையை இந்நூலில் கவிமணி சாடுகிறார். மாமியார் தன் மருமகளுக்கு செய்யும் கொடுமையைப் பின்வருமாறு கூறுகிறார்.

    அரிசியை நிதமும் அளந்து வைப்பாள்;
    நல்ல மிளகை நறுக்கி வைப்பாள்,
    கொல்ல மிளகைக் குறுக்கி வைப்பாள்,
    உப்பில் புளியை உருட்டி வைப்பாள்,
    கடுகையும் எண்ணிக் கணக்கிட்டு வைப்பாள்

    என்கிறார்.

    தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
         துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
    அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
        அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி

    என்ற பாடல் மலரும் மாலையில் இடம் பெற்ற எளிமையான இனிய பாடல்.

    • சுத்தானந்த பாரதி

    சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கவிதைகளும் இசைப் பாடல்களும் ஓயாமல் எழுதி வந்த துறவியார் சுத்தானந்த பாரதியார். அவருடைய பாடல்கள் பலவகை ஆனவை; நாட்டுணர்ச்சி ஊட்டும் பாடல்கள், சமய ஆர்வம் வளர்க்கும் கவிதைகள், புத்துலகக்கனவு பற்றிய பாடல்கள் என்று பலவகைக் கவிதைகளில் புதிய, பழைய மரபு வழிப்பட்ட வடிவங்கள் உண்டு. பாரத சக்தி மகாகாவியம் என்பது அவருடைய பெரிய செய்யுள் நூல்.

    பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் மாணாக்கர். ஆற்றுப்படை, தென்தில்லை உலா, தென்தில்லைக் கலம்பகம், களப்பாழ்ப் புராணம் போன்ற பல நூல்களைப் பாடினார். அவற்றுள் ஒரு தலபுராணமும், ஓர் ஆற்றுப் படையும் ஒரு கோவையும் மற்றும் சில நூல்களும் எழுதி அச்சிடப்படாமலேயே உள்ளன. நற்றிணை என்ற இலக்கியத்துக்கு அவர் எழுதிய உரைபுகழ் பெற்றது.

    இலக்குமணப்பிள்ளை என்பவர் கட்டளைக் கலித்துறை என்ற செய்யுள் வகையில் எதுகை, மோனைகள் இல்லாமல் எழுதும் முறையைப் புகுத்தினார்.

    ரா.ராகவ ஐயங்கார் புவியெழுபது, பாரிகாதை என்ற 2 நூல்களை எழுதியுள்ளார். பாரி காதை என்பது வெண்பாவால் ஆகிய ஒரு நல்ல காப்பியம்.

    வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் எழுதிய ‘நெல்லைச் சிலேடை வெண்பா’ என்ற நூல் சிலேடை, யமகம், திரிபு என்னும் சொல் அலங்காரங்களை அமைத்து எழுதப்பட்டது. மில்டன் இயற்றிய சுவர்க்க நீக்கம் என்ற நூலை விருத்தப்பாவால் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார். கோம்பி விருத்தம், அகலிகை வெண்பா என்ற செய்யுள் நூல்களையும் பாடியுள்ளார்.

    பாம்பன் குமரகுருதாச அடிகள் செந்தமிழ் என்னும் 50 தனித்தமிழ் வெண்பாவும் குமார சுவாமியம் என்னும் காப்பியமும் பாடியுள்ளார்.

    வரத நஞ்சையப்ப பிள்ளை என்பவர் தமிழரசி குறவஞ்சியையும் கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் (2 பாகம்) என்ற நூலையும் பாடினர்.

    மகாகவி என்ற பட்டம் பெற்ற அ.கு.ஆதித்தர் கடவுள் அனுபூதி, பள்ளி எழுச்சி, பரமரகசிய மாலை, கடவுள் வணக்கம், மாணவர் கடவுள் வணக்கம், தொழுகை முறை, நவரசக் கம்ப நாடகம், ஆண்டாள் பிள்ளைத் தமிழ், இரணியன் வதைப் பரணி என்ற நூல்களைப் பாடியுள்ளார்.

    ச.து.சு. யோகியார் தற்காலக் கவிஞர்களில் காவிய நடையின் சிறந்த பிரதிநிதி என்று போற்றப்படுபவர். வேகம், வேதாந்தத் தெளிவு, வீரம், உட்பொருள் கொண்டவை இவரது கவிதைகள். தமிழ்க் குமரி, அகலிகை, மேரி மக்தலேனா, காமினி, காதல் மலர்கள், முருக காவியம், கதையைக் கேளடா (நாட்டுப்புறப் பாடல்) என்ற நூல்களை இயற்றியுள்ளார்.

    5.2.2 புதுக்கவிதை

    பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகப் பிரான்சு நாட்டில் புரட்சிகரச் சமுதாயம் தோன்றியது. பாதலேர், ரிம்போ, மல்லார்மே போன்ற புரட்சிக் கவிகள் பழைய மரபுகளை விட்டுவிட்டு யாப்பு விடுதலை பெற்ற புதிய கவிதைகளைப் பாட முற்பட்டனர். அவற்றை ஆங்கிலத்தில் Free verse என்றனர். அப்புதிய போக்கைப் பின்பற்றி, சென்ற நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மன் வசன கவிதை எழுதினார். தாகூர் தம் கீதாஞ்சலியை இலக்கணம் மீறிய புதுமைக் கவிதையாகப் படைத்தார்.

    தாகூரின் கீதாஞ்சாலியையும் வால்ட் விட்மனின் புல்லின் இதழ் களையும் படித்த பாரதியார் அதே போக்கில் காட்சிகள் என்ற இலக்கணம் மீறிய புதிய கவிதைப் படைப்பைப் படைத்தார். தமிழில் அமைந்த புதுக்கவிதையின் தந்தை பாரதியாரே! அவர் பாடிய புதிய கவிதை ஒன்று இதோ:

    வெம்மைத் தெய்வமே! ஞாயிறே! ஒளிக்குன்றே!
    அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே
    மீன்களாகத் தோன் றும் விழிகளின் நாயகமே!
    பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே!
    வலிமையின் ஊற்றே! ஒளி மழையே! உயிர்க்கடலே!

    (பாரதியார் கவிதைகள், ஞாயிறு புகழ்-12, இரண்டாம் கிளை புகழ்)

    பாரதியைத் தொடர்ந்து ந.பிச்சமூர்த்தி 1934 முதல் சோதனை ரீதியான கவிதைகளை எழுதத் துவங்கினார். அவருடன் சேர்ந்து கு.ப.ராவும் வல்லிக்கண்ணனும் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தனர். இப்புதுத்துறையை அயராமல் பேணிப் பாதுகாத்துக் காலூன்றச் செய்தவர் சி.சு.செல்லப்பா. எழுத்து, மணிக்கொடி, வானம்பாடி என்ற இதழ்கள் புதுக்கவிதைக்கு வலிமை சேர்த்தன.

    • எழுத்துக் கவிஞர்கள்

    ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, க.நா.சு மூவரும் முதலில் புதுக்கவிதையை ஆங்கிலத்தில்தான் எழுதினர். பாரதியின் கவிதை கண்டு தமிழில் கவிதை படைத்தனர். சி.மணி, பசுவையா (சுந்தர ராமசாமி), தருமு சிவராமு, வைத்தீஸ்வரன், ஷண்முக சுப்பையா, நகுலன் போன்றோர் எழுத்துக் கவிஞர்கள். வடசொற்களை இவர்கள் அதிகம் கையாண்டனர். மாறுபட்ட உள்ளடக்கமும் வேறுபட்ட உணர்த்து முறையும் எழுத்துக் கவிஞர்களின் வெற்றிக்கு அடிப்படைகள்.

    • படைத்த கவிதை நூல்கள்
    ந. பிச்சமூர்த்தி
    -
    கிளிக்குஞ்சு, பூக்காரி, வழித்துணை, கிளிக்கூண்டு, பிச்சமூர்த்தி கவிதைகள்
    சி.சு. செல்லப்பா
    -
    நீ இன்று இருந்தால்? மாற்று இதயம்
    கு.ப.ரா
    -
    சிறிது வெளிச்சம்
    வல்லிக்கண்ணன்
    -
    அமர வேதனை
    புதுமைப்பித்தன்
    -
    புதுமைப்பித்தன் கவிதைகள்
    புவியரசு
    -
    புவியரசு கவிதைகள், இதுதான், மீறல், இப்போதே இப்படியே
புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 11:56:39(இந்திய நேரம்)