தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பல்லவர் காலத்துத் தமிழ்

  • 1.1 பல்லவர் காலத்துத் தமிழ்

    சங்க காலத்தை அடுத்த சங்கம் மருவிய காலம் இருண்ட காலமாகக் கருதப்பட்டது. களப்பிரர் என்ற அயலவர் தமிழகத்தில் ஊடுருவி இங்குத் தம் ஆட்சியை நிலைநிறுத்தினர். இவர்களது ஆதிக்கத்தால் சைவ, வைணவ சமயங்கள் தம் செல்வாக்கை இழந்தன. இதனால் தமிழ் இலக்கியமும் தேக்கம் அடைந்தது. எனினும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் சில சிறந்த இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் தோன்றிய நூல்களாகக் கருதப் படுகின்றன. சமண, பௌத்த சமயத்தினர் செல்வாக்குப் பெற்று விளங்கினர்.

    கி.பி. ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகளில் புத்த சமயம் வீழ்ச்சியடைந்து விட்டது. சமண சமயம் சங்க காலத்தில் நுழைந்து, களப்பிரர் காலத்தில் காலூன்றிப் பல்லவர் காலத்தில் ஆட்சிப் பீடத்தையே கைப்பற்றிவிட்டது. இதனால் தமிழ் இலக்கியமும், தமிழர் சமயங்களான சைவமும், வைணவமும் கி.பி.ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை வீழ்ச்சி அடைந்திருந்தன.

    இந்நிலையை முற்றிலும் மாற்றி அமைத்த பெருமை சைவக்குரவர் நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசரையே சாரும். சமணராக இருந்த அப்பெரியார்தான் சைவத்திற்கு மாறியதோடு அல்லாமல் மகேந்திர வர்ம பல்லவனையும் சமயம் மாற்றினார். இதுவே சைவ சமயத்தின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். சமணப் பள்ளிகள் இடிக்கப்பட்டுப் பல சைவ ஆலயங்கள் எழுப்பப்பட்டன. நாவுக்கரசர், ஞானசம்பந்தர் முதலிய சைவ நாயன்மார்கள் மட்டும் அன்றி, பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் போன்ற வைணவ ஆழ்வார்களும் பக்திப் பாடல்களைப் பாடி, பக்தியுடன் தமிழ்மொழியும் வளரத் துணை புரிந்தனர் எனலாம். கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல், பிற்காலச் சோழர் ஆட்சி தொடங்கிய பத்தாம் நூற்றாண்டு வரையுள்ள அக்காலக் கட்டத்தை, சைவ-வைணவ மறுமலர்ச்சிக் காலம் எனலாம். செந்தமிழ் நிலத்தில் சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்று வளரத் தொடங்கியது. அச்சமயங்களுடன் தமிழ்மொழியும் வளரத் தொடங்கியது. சமண, பௌத்தத் தாக்கத்தால் தமிழ்மொழியுடன் வடமொழிச் சொற்கள் சில கலந்துவிட்டன. தேவாரம், திருவாசகம் போன்ற சைவ நூல்களும், ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தமும் பக்தி இலக்கியக் காலத்தில் தமிழ் மொழிக்குக் கிடைத்த மாபெரும் இலக்கியச் செல்வங்களாகக் கருதப்படுகின்றன. இவையும், அவிநயம் போன்ற இலக்கண நூல்களும் பல்லவர் காலத்திய தமிழ்மொழியை அறிந்து கொள்ளத் துணையாக விளங்குகின்றன. சாசனம், செப்பேடு, கல்வெட்டுகள் போன்றனவும் அக்கால மக்கள் பேச்சு மொழியை அறியப் பெருந்துணை புரிகின்றன.

    1.1.1 சைவ - வைணவ இலக்கியங்கள்

    பக்தி இயக்கத்துக்குத் தொடக்கமாக ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களில் காரைக்கால் அம்மையாரும், திருமூலரும் இயற்றிய பாடல்கள் உதவின. ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய முதலாழ்வார் மூவரும் பாடிய பாசுரங்கள் அவ்வாறு உதவின. மூவர் பாடிய தேவாரப் பாடல்களும் இப்பக்தி இலக்கியக் காலத்தில் வழங்கிய தமிழ்மொழியைப் பற்றி அறியப் பேருதவியாக உள்ளன.

    சைவ இலக்கியங்கள்

    ஆசிரியர்கள்
    நூல்கள்
     
    1
    சம்பந்தர்
    திருக்கடைக்காப்பு
    1,2,3ஆம் திருமுறைகள்
    2
    அப்பர்
    தேவாரம்
    4,5,6ஆம் திருமுறைகள்
    3
    சுந்தரர்
    திருப்பாட்டு
    ஏழாம் திருமுறை
    இவை மூன்றும் தேவாரம் என்னும் பொதுப்பெயரால் குறிக்கப் படுகின்றன.
    4
    மாணிக்கவாசகர்
    திருவாசகம் திருக்கோவையார்
    8ஆம் திருமுறை
    5
    திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பதின்மர்
    திருவிசைப்பா திருப்பல்லாண்டு...
    9ஆம் திருமுறை
    6
    திருமூலர்
    திருமந்திரம்
    10ஆம் திருமுறை
    7
    திரு ஆலவாய் உடையார் முதலிய பன்னிருவர்
    திருமுகப் பாசுரம் மூத்த திருப்பதிகம்...
    11ஆம் திருமுறை
    8
    சேக்கிழார்
    பெரியபுராணம்
    12ஆம் திருமுறை

    வைணவ இலக்கியங்கள்

    ஆசிரியர்கள்
    நூல்கள்
    1
    பொய்கையாழ்வார்
    முதல் திருவந்தாதி
    2
    பூதத்தாழ்வார்
    இரண்டாம் திருவந்தாதி
    3
    பேயாழ்வார்
    மூன்றாம் திருவந்தாதி
    4
    திருப்பாணாழ்வார்
    அமலனாதிபிரான் - பதிகம்
    5
    திருமழிசையாழ்வார்
    திருச்சந்த விருத்தம் - நான்முகன் திருவந்தாதி
    6
    நம்மாழ்வார்
    திருஆசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
    7
    மதுரகவியாழ் வார்
    கண்ணிநுண் சிறுத்தாம்பு பாடல்
    8
    பெரியாழ்வார்
    பெரியாழ்வார் திருமொழி
    9
    ஆண்டாள்
    நாச்சியார் திருமொழி, திருப்பாவை
    10
    திருமங்கையாழ்வார்
    பெரிய திருமடல் போன்ற நூல்கள்
    11
    தொண்டரடிப் பொடியாழ்வார்
    திருமாலை, திருப்பள்ளியெழுச்சி
    12
    குலசேகராழ்வார்
    பெருமாள் திருமொழி
புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 17:13:01(இந்திய நேரம்)