தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2-2:4-பாரதத் தலைவர்கள்

  • 2.4 பாரதத் தலைவர்கள்

    பாரத விடுதலைப் போரில் பங்கு பெற்று அரிய தியாகங்களைச் செய்த தலைவர்கள் பலர். அவர்கள் தாய் நாட்டின் மீதுள்ள பற்றினால், அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று விரும்பினார்கள். அதனால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல துன்பங்களை அனுபவித்தார்கள். இத்தகைய தேசியத் தலைவர்களைப் பற்றியும் பாரதியார் பாடியுள்ளார்.

    பாரதியார் தலைவர்களைப் பற்றிப் பாடியதன் நோக்கம் என்ன? தாய்நாட்டிற்காகத் தொண்டு செய்த தலைவர்களின் தன்னல மற்ற தியாகத்தை இளைய தலைமுறையினர் உணரவும், அதைப் பின்பற்றவுமே அவர்களைப் பற்றிப் பாடுகிறார்.

    2.4.1 மகாத்மா காந்தி

    ‘பாரதபிதா’ என்றும் ‘மகாத்மா’ என்றும் பாரத மக்களால் அழைக்கப்பட்டு மகிழும் பெருமைக்கு உரியவர் காந்தி அடிகளார். அவர் இலண்டனில், பாரிஸ்டர் பட்டம் பெற்றார். பின்னர் தென் ஆப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றினார். அப்பொழுது அந்நியர் ஆட்சியின் கொடுமையிலிருந்து நாடுகள் விடுதலை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.

    1919இல் இந்தியாவுக்குத் திரும்பியதும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார். இந்திய மக்களை ஒன்று திரட்டி, அமைதியான வழியில் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்தினார். 1947இல் இந்தியா விடுதலை அடைந்தது. உலகில் பல நாடுகள் வன்முறையினால், போரினால் விடுதலை அடைந்தன. ஆனால், காந்தி அடிகளாரின் அறவழிப் போராட்டத்தினால், இந்தியா கத்தியின்றி ரத்தமின்றி விடுதலை பெற்றது. இது உலக வரலாற்றில் வேறு எந்த நாட்டிலும் நிகழாத சிறப்பு வாய்ந்த செயல். இதைப் பாரதியார்.   

    பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்
         அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
    அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
         அறவழியென்று நீ அறிந்தாய்
    நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை
          நெறியினால் . . . . . . . .

    (தேசியத் தலைவர்கள் - மகாத்மா காந்தி - 5)

    (ஒத்துழையாமை - ஒத்துழைப்புத் தர மறுப்பது (Non co-operation)

    என்று கூறிக் காந்திஜி கடைப்பிடித்த ஒத்துழையாமை இயக்கத்தைப் பாராட்டுகிறார். இத்தகைய அரிய செயலை - தியாகத்தை, தொண்டைச் செய்த காத்மாவைப் பாரதியார் பலவகையில் பாராட்டுகிறார்.

    வாழ்க நீ, எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
    தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
    பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசம் தன்னை
    வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா ! நீ வாழ்க;வாழ்க!

    (தேசியத் தலைவர்கள் - 1)

    எம் தலைவராகிய காந்தி அடிகளாரே நீங்கள் வாழ்க! நீடுழி வாழ்க! இந்த உலகத்திலுள்ள நாடுகளிலே இந்தியா அந்நியருக்கு அடிமையாகித் தாழ்ந்த நிலையில் இருந்தது. அவ்வாறு பாழாகி இருந்த பாரத தேசத்தை வாழ்விக்க வந்த காந்தி அடிகளாரே! நீங்கள் வாழ்க! வாழ்க! எனப் பாராட்டுகிறார் பாரதி. இந்திய தேசத்திற்கு மகாத்மா காந்தி எத்தகைய பெரியசேவையைச் செய்தார் என்பதைக் குறிப்பிடுகிறார் பாரதி.

    2.4.2 குரு கோவிந்தர்

    காந்தியடிகளைப் போன்று இந்திய விடுதலைப் போரில் கலந்து கொண்டு தியாகங்கள் செய்த குரு கோவிந்தர், தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரம்பிள்ளை போன்ற தலைவர்களையும் பாரதியார் பாடியுள்ளார்.

    குருகோவிந்தர் சீக்கியர்களின் பத்தாவது குருவாக விளங்கியவர். அவர் சீக்கிய மக்களை, சாதி பேதங்களை எல்லாம் கைவிடச் செய்து ஒரே அணியில் திரட்டினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட இலக்கிய நெஞ்சினரான பாரதிக்குக் குரு கோவிந்தரின் வீரவாழ்வும் தியாக வாழ்வும் புதிய எழுச்சி ஊட்டின. குரு கோவிந்தரின் வீரத்தைப் போற்றுவதன் மூலம் அஞ்சா நெஞ்சமும் தியாக மனப்பான்மையும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று எண்ணினார் பாரதி. ஆகவே ‘குரு கோவிந்த சிம்ஹ’ என்ற தலைப்பில் ஒரு பாடலை எழுதினார். அப் பாடல் குரு கோவிந்தர் தம் சீடர்களிடம்.

    ஒன்றாம் கடவுள், உலகிடைத் தோன்றிய
         மானிடரெல்லாம் சோதரர் . . .
              பிரிவுகள் துடைப்பீர்

    (குரு கோவிந்தர் 178-183)

    (சோதரர் = சகோதரர், உடன்பிறந்தவர்)

    என்று கூறுவதாக அமைந்துள்ளது. தன்னலமற்ற பெரியோர்களைப் பற்றிப் பாடுவதன் மூலம் அத்தகைய தலைவர்களின் தலைமையின் கீழ் இந்திய மக்களை ஒன்றுபடச் செய்ய வேண்டும், விடுதலை இயக்கத்தில் முழு மூச்சுடன் ஈடுபட வைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம்.

    2.4.3 தாதாபாய் நவுரோஜி

    பாரத நாட்டுப் பெண்கள் வயிற்றில் கல்வியாளர் தாதாபாய் நவுரோஜியைப் போன்ற புதல்வர்கள் பிறக்க வேண்டும் என்று வேண்டுகிறார் பாரதியார். அதைப் போன்று நாட்டுப்பற்று உடைய புதல்வர்கள் தோன்ற வேண்டும் என்பதே பாரதியின் ஆசை. தனி ஒரு மனிதனால் இத்தகைய அரிய செயலைச் செய்ய இயலாது. நல்ல தலைமை இருந்தால் தான் தன்னலமற்ற தொண்டர்கள் உருவாக முடியும் என்று பாரதியார் கருதினார். தாதாபாய் நவுரோஜியின் ‘ஸ்வராஜ்ய முழக்கம்’ பாரதியைப் பெரிதும் கவர்ந்தது. அவருடைய புரட்சி மனப்பான்மையை எண்ணிப் பரவசமடைந்த பாரதியார், "தாதாபாய் நவுரோஜி சொல்லி இருக்கும் சுய அரசாட்சிக்கு மார்க்கம் உத்தேசித்துப் பார்ப்போமாகில், இதுவரையில் அனுசரித்து வந்த விண்ணப்பமும் கெஞ்சலும் தொலைந்து புதிய கட்சியின் கொள்கையாகிய நமக்கு நாமே துணை என்னும் கொள்கையையே கொண்டு பாடுபட வேண்டும்" என்று ‘இந்தியா‘ என்ற பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்தியாவில் எந்த மாநிலத் தலைவர்களாக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு பாராட்டும் பண்புடையவர் பாரதியார். ஏனென்றால் விடுதலை இயக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடந்தால் போதாது. இந்தியா முழுவதும் பரவலாக, நாடு தழுவிய போராட்டமாக அமைய வேண்டும், அனைத்து மக்களின் தன்னலமற்ற சேவை நாட்டுக்குத் தேவை என்று சுட்டிக்காட்டினார் பாரதியார்.

    2.4.4 பாலகங்காதர திலகர்

    ‘சுயராஜ்யம்’ நமது பிறப்புரிமை என்ற கொள்கைக்காகவே உழைத்தவர் பாலகங்காதர திலகர். பாரதியார் பாலகங்காதர திலகரிடம் மிகுந்த ஈடுபாடுடையவர், அவரையே தம் அரசியல் குருவாகக் கொண்டிருந்தார். பாலகங்காதர திலகர் சென்னைக்கு வருகை தந்த போது அவருடைய பேச்சைக் கேட்ட சென்னை நகர மக்கள் பரவசமடைந்தனர். பாரதியார் அவரைத் துன்பமாகிய கடலைக் கடக்க உதவும் தோணியாகவும் சோர்வாகிய பேயை ஓட்டும் சூழ்ச்சியாகவும் உருவகப்படுத்திப் பாடுகிறார்.

    துன்ப மென்னுங் கடலைக் கடக்குந் தோணி அவன் பெயர்
    சோர்வென்னும் பேயை யோட்டும் சூழ்ச்சி அவன் பெயர்.

    (வாழ்க திலகன் நாமம் - 3)

    (தோணி - படகு, சூழ்ச்சி- உபாயம், திட்டம்)

    என்றும்,

    துஞ்சு மட்டுமிப் பாரத நாட்டிற்கே
         தொண்டி ழைக்கத் துணிந்தவர் யாவரும்
    அஞ்செழுத்தினைச் சைவர் மொழிதல் போல்
         அன்பொ டோது பெயருடை யாரியன்

    (திலகர் முனிவர் கோன் - 3)

    என்றும் புகழ்ந்து பாடுகிறார் பாரதியார்.

    (அஞ்செழுத்து - ‘சிவனை வணங்குகிறேன்’ என்ற பொருள் தரும் நமசிவாய என்னும் ஐந்து எழுத்துத் தொடர்; சைவர் - சிவபெருமானைத் தெய்வமாக வழிபடுபவர்)

    2.4.5 வ.உ. சிதம்பரம் பிள்ளை

    பாரதியார் வ.உ. சிதம்பரம் பிள்ளையிடம் மிகுந்த அன்பு கொண்டவர். வ.உ.சிதம்பரம் பிள்ளை வெள்ளையரை எதிர்த்து ‘சுதேசி கப்பல் கம்பெனி’ ஒன்றை நடத்தினார். அவர் வெள்ளையரை எதிர்த்துப் போராடியதால் சிறையில் வைக்கப்பட்டார்; சிறையில் செக்கிழுத்துப் புண்பட்டார். அவரைப் பார்த்து,

    கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ
    வருந்தலை என் கேண்மைக் கோவே!

    (வ.உ.சி. க்கு வாழ்த்து - 2)

    (வருந்தலை= வருந்தாதீர், கேண்மை = நட்பு, உறவு, கோ = தலைவன்)

    என்று பாரதியார் பாடிய பாடல், இந்தியா விடுதலை அடையும் நாள் அண்மையில் உள்ளது என்று அவருக்கு ஆறுதல் கூறுவது போல் உள்ளது. கேளாத கதை என்று அவர் கூறுவது ‘இந்தியா பெறப் போகும் விடுதலை’ என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்ஙனம் நாட்டில் உள்ள நல்ல தலைவர்களைப் பற்றிப் பாடினார் பாரதியார். இத்தகைய தலைவர்களின் கீழ் போராடினால் விடுதலை நிச்சயம் கிட்டும் என்ற உணர்வை மக்களிடையே உருவாக்க இடைவிடாமல் முயற்சி செய்தார் பாரதியார்.

    மேலும், "பாரதியார் தூத்துக்குடிக் கம்பெனி (வ.உ.சி. அவர்கள் துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி) நமது முதற் பெருந்தொழில் முயற்சி. இதைக் கைவிட்டு விட்டால் நம்மைப் பிறகு உலகத்தில் யாரும் நம்பவே மாட்டார்கள் அரைக் காசாக இருந்தாலும் சரி, அதை அனுப்பி நமது மாதாவின் மானத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று கூறினார். தாய் நாட்டுக்காக நடத்தும் இயக்கத்திற்குத் தாராளமாக நிதி உதவி செய்ய முன் வருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:53:16(இந்திய நேரம்)