தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-திரிகடுகம்

  • 3.1 திரிகடுகம்

    காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352)

    • ஆசிரியர்

    திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

    3.1.1 நூல் அமைப்பும் சிறப்பும்

    திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது. இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

    இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. இது இல்லறத்தின் உயர்வை உணர்த்தும் வகையில் விளங்குகிறது. ‘கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி. பெய் எனப் பெய்யும் மழை’ (திரி-96) என்று இல்லறத்தில் மனையாள் பெருமை பேசப்படுகிறது.

    பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்து அதைப் பாதுகாக்கவும் முற்படுகின்றனர் மக்கள். தம்மையே புகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தக்கார் துணையைப் பெறுதல் முடியாது. அதனால் அவர்தம் செல்வம் குறையும். காரணமின்றியே பலரையும் சினந்துரைப்பவரிடத்தில் உள்ள செல்வம் பகையினால் அழியும். தன் நிலை அறியாமல் பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புபவரிடத்தும் செல்வம் நில்லாமல் நீங்கும் என்பதைச் ‘செல்வம் உடைக்கும் படை’ எனக் குறிப்பிடுகிறார்.
     

    தன்னை வியந்து தருக்கலும் தாழ்வின்றிக்
    கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய
    பல்பொருள் வெஃகும் சிறுமையும் இம்மூன்றும்
    செல்வம் உடைக்கும் படை
    (திரி - 38)

    (கொன்னே = வீணாக; வெஃகுதல் = விரும்புதல்)

    மேலே கூறிய மூன்றும் செல்வத்தை முற்றிலுமாக அழிக்கும் என்ற கருத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது அல்லவா!

    அரசர் இயல்பு, அமைச்சர் இயல்பு, இளவரசன், ஒற்றர் ஆகியோர் செய்ய வேண்டுவன என்றெல்லாம் கூறப்படும் கருத்துகள் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய நோய் நீக்கும் மருந்துகளாகும்.

    தக்க வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ள நினைப்பதும், மக்கட் பேற்றை விரும்புவதும் மனித இயல்பு. ஆனால் எல்லோருக்கும் இப்பேறு கிடைப்பதில்லை அல்லவா! மக்கட் பேற்றினைப் பெறவும் மனிதன் நல்ல அறங்களைச் செய்திருக்க வேண்டும் என்று கூறி அறத்தை வலியுறுத்தும் பாடலும் திரிகடுகத்தில் உண்டு (திரி-62).

    காப்பாற்ற வேண்டியன பெண்டிர், பொருள், உணவு ஆகியவை இவை உரிய முறையில் காப்பாற்றப் படாமல் போனால் கெட்டுப்போகும் என்று காட்டுகிறது ஒரு பாடல் (திரி-47).

    நட்புக் கொள்ளத் தகுதியற்றவர், நட்புக்கொள்ள ஏற்றமுடையவர் யாரென்பதை எடுத்துச் சொல்கிறார் நல்லாதனார் (திரி-12,15).

    கல்வியின் பயன்கள் கூறப்படுவதால் கல்வியின் வலிமையும் பயனும் நமக்கு உணர்த்தப்படுகிறது.

    வாழ்வியல் உண்மைகள் பல ஆங்காங்கே வெளிப்படுவதைத் திரிகடுகத்தில் காணலாம். எப்படி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதும் பயன்தராத செயல்கள் எவை என்பதும் எடுத்துரைக்கப்படுகின்றன.

    பிறப்பு நீக்குவது வாழ்வின் முடிந்த நோக்கமாகும் என்பதையும் திரிகடுகம் எடுத்துரைக்கிறது.

    3.1.2 அறத்தின் உயர்வும் சிறப்பும்

    இளமையில் கல்வி கற்பதும், பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுதலும், சான்றோர் நெறியில் செல்வதும் உயர்ந்த அறங்களாகும். நல்லவருள் நல்லவர் எனப்படுதல், நட்பு கொள்வதில் சிறந்தவர் எனப்படுதல் ஆகியன நல்லவர் மேற்கொள்ளும் அறங்களாகும்.

    உலகிலேயே சிறந்த அறம் வறியவர்க்கு வேண்டுவன கொடுத்தல் ஆகும். வறுமை நிலையிலும் கீழான செயல்களைச் செய்யாதிருத்தல் சிறந்த அறம் ஆகும். (திரி-41)

    • இயற்கையும் அறமும்

    அறச் செயல்களுக்கும் இயற்கை நெறிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மன்னனும் மக்களும் நெறி தவறி நடந்தால் இயற்கை தன் நிலை மாறும். குடிமக்களை வருத்தி வரி வாங்கும் அரசனுடைய நாட்டில் மழை பெய்யாது. பொய் பேசுபவர் நாட்டில் மழை பெய்யாது. வலிமை வாய்ந்த இயற்கையை நெறிப்படுத்தும் ஆற்றல் அறத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது திரிகடுகம். (திரி-50)

    • அறத்திற்கு வழி வகுப்பன

    அறம் செய்தால் இன்பத்தையும் அறம் அல்லாத செயல் செய்தால் துன்பத்தையும் தரும் என்பதை எடுத்துச் சொல்லி மனிதரை நல்வழிப்படுத்துகிறது திரிகடுகம்.

    கடன்படாது வாழ்பவன், வந்த விருந்தினரைப் போற்றுபவன், ஒருவர் சொல்லியதை மறவாது மனத்தில் வைப்பவன் இம்மூவரையும் நண்பர்களாகப் பெறுவது நன்மை தருவதாகும். அது அறம் செய்ய வழிவகுப்பதாகும். (திரி-12)

    • துன்பம் பயப்பன

    மூடரோடு சேர்தல், மன உறுதி கொண்ட மனைவியை அடித்தல், பகைவர் முன்னே தம் செல்வத்தைக் காட்டுதல், பகைவருடன் நட்பு கொள்ளுதல் ஆகியன இறப்பது போன்ற துன்பத்தைத் தரும் (திரி-3).

    எனவே, அத்தகையை செயல்களை நீக்க வேண்டும் என்கிறார் நல்லாதனார்.

    3.1.3 நல்ல குடும்பப் பண்பு

    கணவன், மனைவி, மக்கள் அடங்கியது குடும்பம். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன்.

    குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்கு. பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும். அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள். ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர். இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன். செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும். வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார் (திரி-49).

    தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறது. எனவே, நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே. அவை நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் குடும்ப உறுப்பினர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லி விளக்கும் பாடலைப் பாருங்கள்.

    ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
    வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
    அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
    இம்மைக் குறுதியில் லார்

    (திரி - 49)

    (இளம்கிளை = மக்கள்; தலைமகன் = கணவன்; வைது = ஏசி; எள்ளி = இகழ்ந்து)

    3.1.4 கல்வியின் பயன்கள்

    சிறந்த கல்வியின் பயன்கள் என்னவென்று பார்ப்போமா? கற்றதன் பயன் கற்றதற்கேற்ப நடந்து கொள்ளும் போதுதான் கிடைக்கிறது. அவ்வாறு நடந்து கொள்ளாதவர்கள் கல்வியறிவைக் கைவிட்டவராவர். எனவே தான் வள்ளுவர்,

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக
    (குறள் - 391)

    என்றார்.

    முதுமைக் காலத்தும் ஆசைகளைத் துறக்காதவர்கள், வீண்மொழி பேசும் துறவிகள் ஆகியோர் கல்வியறிவைக் கைவிட்டவர் ஆவர். (திரி-17)

    நல்ல கல்வி இப்பிறவியில் மட்டுமல்லாது மறுபிறவிக்கும் பயன் கொடுக்க வல்லது. கல்வி முயன்றும், விரும்பியும் கற்க வேண்டிய ஒன்று என்பது தெளிவாகிறதல்லவா?

    • துன்பத்தைத் தருவன

    அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுதலும் சுற்றத்தார் பசித்திருக்கத் தாம் சோம்பலை மேற்கொள்வதும் கல்லாதவன் என்று ஒருவனை இகழ்தலும் இவை மூன்றும் துன்பத்தைத் தருவன.

    வருவாயில் நான்கிலொருபங்கை அறவழியில் செலவு செய்தல், எளிதில் விளங்கித் தோன்றும் சிறப்புடையவராக அமைதல், பலவற்றையும் ஆராய்ந்து நல்லவற்றைப் படித்தல் ஆகியன சான்றோர்க்கு உரிய கொள்கைகளாம். (திரி-21)

    • வீடுபேறு அடையவழி

    பற்று என்பது ஒருவனைக் கட்டும் விலங்கு; பொருள்களின் மேல் மனம் செல்லவிட்டு அப்பொருள்களை அடைய முயலும் விருப்பமே அவா; பகைவனைப் போலத் தவறாமல் தீங்கு விளைவிப்பது பொய். இந்த மூன்றையும் விலக்க வேண்டும். பற்று, அவா, பொய், ஆகியவற்றை நீக்கினால் வீடுபேறு அடையலாம் என்று கூறுகிறது. (திரி-22)

    • உயர்ந்தோர் யார்?

    கடமை தவறாத அந்தணன், நெறி தவறாத மன்னன், கவலையில்லாத குடிமக்கள் ஆகியோர் உயர்ந்தோர் எனப் போற்றப்படுவர். (திரி-34)

    • பிறந்தும் பிறவாதார்

    அருளில்லாதவனும், பொருளினைத் தானும் அநுபவிக்காமல் பிறர்க்கும் கொடுக்காமல் பூமியில் புதைத்து வைப்பவனும், பிறர் மனம் வருந்தும்படி பேசுகின்றவனும் ஆகிய இம்மூவரும் மக்களாய்ப் பிறந்தும் பிறவாதவர் ஆவார். (திரி-92)

    3.1.5 பிற உண்மைகள்

    அறநெறியில் ஒழுகுதல் பற்றியும், இல்லாவிடில் வரும் கேடு பற்றியும், கல்வியின் பயன்கள் பற்றியும் பார்த்தோம். இனி உலகியலில் சில உண்மைகள் கூறி மனித வாழ்வை நெறிப்படுத்தும் பணியைப் பற்றித் திரிகடுகப் பாடல்கள் சொல்வதைக் காண்போமா!

    • எச்சரிக்கையாய் இருக்க வேண்டுவன

    வாழ்க்கையில் எது குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்? பின்னால் வரவிருக்கும் முதுமைப் பருவம், நண்பரிடையே பெருந்துன்பத்தைத் தரும் பிரிவு, உடம்பைக் கரையச் செய்து வருத்துகின்ற தீராத நோய் ஆகிய மூன்றும் கள்வரை விட அஞ்சக்கூடியன. அவற்றுக்கு அஞ்சி அதனால் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதை,

    ஒருதலையான் வந்துறூஉ மூப்பும் புணர்ந்தார்க்கு
    இருதலையும் இன்னாப் பிரிவும் - உருவினை
    உள்ளுருக்கித் தின்னும் பெரும்பிணியும் இம்மூன்றும்
    கள்வரின் அஞ்சப் படும்
    (திரி-18)

    என்ற பாடல் உணர்த்துகிறது.

    • பயன் தராத செயல்கள்

    காலம் பொன்னை விட மேலானது. காலத்தை நாம் பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டும் அல்லவா? அரிய பகைவனுடன் போரிடும் முயற்சி வீண். அறிஞர் அவைக்கு அஞ்சுபவன் கற்ற நூல் யார்க்கும் பயன்படாது வழக்கைத் தீர்க்கும் திறம் இல்லாதவர் சபையில் இருப்பதும் பயனற்றதே என்று காட்டுகிறது திரிகடுகம். (திரி-10)

    ஒரு சிலர் மற்றவர் கல்வித் தகுதியை ஆராயாது குறை கூறிக் கொண்டே இருப்பர். இது போன்ற வீண் செயல் வேறெதுவும் இல்லை என்பதை மிக எளிய உவமையினால் விளக்குகிறது திரிகடுகம். ஒருவன் கல்வித் தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் உமியைக் குத்துவது போலப் பயனற்றது என்கிறது. (திரி-28)

    சிலர் வெகுண்ட பேச்சால் பிறரை வெல்லலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அது பயன் தராது என்கிறது திரிகடுகம்(28). தமக்கு வரும் துன்பம் கண்டு அஞ்சாதவரோடு கொண்ட நட்பு, விருந்தோம்பாத குணமுடைய மனைவியோடிருப்பது, நற்குணமில்லாதவர் அருகில் குடியிருப்பது ஆகியவை பயனற்றவை என்றும் காட்டுகிறது (திரி-63)

    தன்மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?
    2.
    திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருள்கள் யாவை?
    3.
    ஒருவன் கல்வித்தகுதியை ஆராயாது குற்றம் கருதுதல் ____________ குத்துவது போலப் பயன் அற்றது. (நிரப்புக.)
புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 12:18:10(இந்திய நேரம்)