தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-இன்னா நாற்பது

  • 4.1 இன்னா நாற்பது

    இன்னா நாற்பது, துன்பம் தருவனவற்றைத் தொகுத்துத் தருகிறது. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கருத்திற்குப் பின்னும் ‘இன்னா’என எடுத்துக் கூறுவதாலும் நாற்பது பாடல்களைக் கொண்டிருப்பதாலும் ‘இன்னா நாற்பது’ என்ற பெயரை இந்நூல் பெற்றுள்ளது.

    4.1.1 ஆசிரியர்

    இன்னா நாற்பது நூலை இயற்றியவர் கபிலர். இவர் சங்ககாலத்துக் கபிலர் அல்லர்; பிற்காலத்தவர். இவர் சைவ, வைணவ நெறிகளைப் பொதுவாக நோக்கியவர்.

    உலகியலில் ‘இன்னாதன’ என்று தோன்றியவற்றை எல்லாம் நான்கு நான்காக ஒவ்வொரு பாடலிலும் அழகாகக் கூறியுள்ளார்.

    4.1.2 நூல் அமைப்பும், பாடுபொருளும்

    இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 பாடல்கள் உள்ளன. பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு நீதிக் கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இது ஒரு சிறந்த நீதி நூலாக விளங்குவதால், பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

    மக்கள் யாவரும் விரும்புவது இன்பமே, என்றாலும் இன்ப, துன்பங்களின் காரணங்களை அறிந்து அதற்கு ஏற்ப நடப்பதில்லை. இது எக்காலத்திற்கும் பொருந்துவதாகும். இன்பத்தின் காரணத்தை அறிந்து கொள்வதை விடத் துன்பத்தின் காரணத்தை, அறிந்து கொண்டு அதனை நீக்கி வாழ்வது அவசியம் என்பதால் இன்னா நாற்பது முதலில் படைக்கப்பட்டு, அதன் பின்னரே இனியவை நாற்பது படைக்கப்பட்டது எனக் கொள்ளலாம்.

    இந்நூலில் நல் வாழ்க்கைக்குரிய நீதிகள் கூறப்படுகின்றன. தனி மனிதனின் கடமைகள், உரிமைகள், சமுதாயத்தில் அவன் சந்திக்கின்ற பலவகையான சூழல்கள் ஆகியவற்றில் அவனுக்கு ஏற்படும் துன்பங்களைத் தொகுத்துக் கூறுகின்றார் ஆசிரியர்.

    குடும்பம் என்பது கணவன் மனைவி உறவு, அவர்கள் நடத்தும் இல்லறம், பெற்றோர், பிள்ளைகள் உறவு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. குடும்ப உறுப்பினர்களுக்குத் துன்பம் தருவன எவையெவை என்று சொல்கிறது இன்னா நாற்பது. அரசன், குடிமக்கள், உழவர், துறவிகள் என்று அவரவர் நிலையில் துன்பம் தருவன எவை என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

    கபிலரின் இன்னா நாற்பது துன்பங்களின் மூலங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. கடவுள் வாழ்த்து உட்பட 41 வெண்பாக்களிலும் 164 இன்னாதவைகளைக் கபிலர் தொகுத்துக் கூறுகிறார். தனி மனிதப் பண்புகள் செம்மைப்பட்டால், சமுதாயம் சிறந்து விளங்கும் என்ற நோக்கில் அமைந்த அறக்கருத்துகளே இந்நூல் முழுவதும் காணக்கிடக்கின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:11:43(இந்திய நேரம்)