தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-உறவு முறைகள்

  • Aranoolgal-I

    4.3 உறவு முறைகள்

    பெற்றோருக்கும் மகனுக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், சமுதாயத்திற்கும் மக்களுக்கும், இல்லறத்திலுள்ளவர்களுக்கும் துறவிகளுக்கும் இடையிலான உறவுகளில் எவை எவை தீமை தரக் கூடியன என்று பல கருத்துகளை இன்னா நாற்பது குறிப்பிடுகிறது.

    4.3.1 கணவன் மனைவி உறவில் இன்னாதவை

    கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பு கொண்டு நடத்தும் இல்லறமே நல்லறமாகும். குடும்ப உறவுகளுக்கு அடிப்படை அன்பல்லவா? அன்பில்லாத மனைவி அமைந்தால் அவள் அழகும் துன்பம் தரும் என்கிறது இன்னா நாற்பது. (இன். நாற். - 1) பிணி போன்ற மனைவி அமைவாளாயின் அதுவும் துன்பமாகும். (இன். நாற். - 13) அன்புள்ளம் கொண்ட மகளிர் பிரிவும் துன்பம் தரும் (இன். நாற். -14).
     

    சுற்றத்தார் இல்லாத மனையின் வனப்பு இன்னா
    (இன். நாற். - 1)

    (வனப்பு = அழகு)

    பொருந்தாத குலத்திலே மணம் செய்து கொள்ளல் துன்பமாகும் (இன். நாற். - 19). இளமைப் பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் தளர்ச்சி முதலாயின உண்டாதல் துன்பமாகும் (இன். நாற். - 27).

    குழந்தைகள் அடையும் நோய் துன்பம் தரும்.

    குழவிகள் உற்ற பிணி இன்னா
    (இன். நாற். - 35)

    சுற்றத்தினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் (இன். நாற்.-25) என்று குடும்பத்தில் துன்பம் தருவனவற்றைக் காட்டுகிறார்.

    4.3.2 பெற்றோர் மகன் உறவில் இன்னாதவை

    தந்தையில்லாத பிள்ளையின் அழகு துன்பமாகும். மூதுரை என்னும் நீதி நூல் ‘தந்தையொடு கல்வி போம்’ என்று தந்தையற்ற பிள்ளைக்கு ஏற்படும் இழப்பைச் சொல்கிறது. இதனைத் ‘தந்தையில்லாத புதல்வன் அழகு இன்னா’ என்று முதல் பாடலில் கூறுகிறது இன்னா நாற்பது.

    பெற்ற தாயைக் காப்பாற்றாமல் விடுதல் கொடியது.
     

    ஆங்கின்னா ஈன்றாளை ஓம்பா விடல்
    (இன். நாற். - 17)

    அறிய வேண்டுவனவற்றை அறிய இயலாத பிள்ளைகளைப் பெறல் துன்பமாகும்.

    அறிவறியா மக்கள் பெறல் இன்னா
    (இன். நாற். - 29)

    அறிவறிந்த மக்கட்பேறே சிறந்த பேறு என்பதைத் திருவள்ளுவர்
     

    பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற
    (குறள்:61)

    என்கிறார்.

    4.3.3 சமுதாயத்திற்கு இன்னா பயப்பன

    சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் பற்றி இன்னா நாற்பது என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

    மனக்குழப்பம் இன்றி வாழ்தலே மக்களுக்கு இன்பமாகும். தெளிவில்லாமல் மனம் தடுமாற்றமடைந்து வாழ்தல் மக்களுக்குத் துன்பம். மிகுந்த செல்வம் உடையவர்பால் கோபம் கொள்ளுதல் இன்னாதது (இன். நாற்.- 4), மிகுந்த வலிமை உடையார்க்குத் தீமை செய்தல் இன்னா (இன். நாற்.- 4). புலாலை விரும்பி வாழ்தல் உயிர்களுக்கு இன்னாதது (இன். நாற்.- 12) மீண்டும் ஒருமுறை இதே கருத்தைக் கபிலர் கூறுகிறார். “ஊனைத்தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா” (இன். நாற். -22).

    அழகைப் பார்த்து நாம் ரசிக்கிறோம். அழகுடையதால் ஒருவர் ரசிக்கப்படுவாரா? கண்ணோட்டம் உடையவராக இருந்தால் அவர் மற்றவர்க்கு இன்பத்தைத் தருவார். இரக்கமாகிய கண்ணோட்டம் இல்லையென்றால் அவர் அழகு சிறப்பைத் தாராது. புற அழகை விட அக அழகே சிறப்பைத் தரும். கணித விதிகளை நன்கு அறிந்தவர் சோதிடம், வான சாத்திரம் முதலியவற்றை நன்கு உணர்வர். ஆனால் கணித நுணுக்கங்களை அறியாதவர் சோதிடர் போலவும், வான நூல் வல்லவர் போலவும் தம்மைக் கருதிக் கொண்டு செய்யும் செயல்கள் அவர்க்கும் பிறர்க்கும் துன்பத்தையே தரும். இதனை இன்னா நாற்பது

    கண்இல் ஒருவன் வனப்புஇன்னா; ஆங்குஇன்னா
    எண்ணிலான் செய்யும் கணக்கு
    (இன். நாற். -16)

    (கண் = கண்ணோட்டம்; எண் = கணக்கு)

    என்று கூறும்.

    4.3.4 அரசனுக்கு இன்னாதவை

    நாட்டை ஆளும் அரசன் மக்களைக் காத்தலால் இறைவன் என்று அழைக்கப்படுவான். குடிமக்களைக் காப்பாற்றாதவனாக அரசன் இருந்தால் நாடு துன்புறும். கொடுங்கோல் மன்னன் ஆட்சியின் கீழ் வாழ்தல் துன்பம்  (இன். நாற். -3).

    வீரமில்லா அரசர் போர்க்களம் புகுதல் துன்பமே தரும். (இன். நாற். 38) மணி அணியப் பெறாத யானையில் அரசன் ஏறிச் செல்லல் நல்லதல்ல (இன். நாற். - 13). குதிரையை மணி இல்லாமல் ஏறிச் செலுத்துதல் தீமையாகும் (இன். நாற். -15).

    இதையே, மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகிறார் கபிலர். சேணம் இல்லாத குதிரையின் வெறும் முதுகில் ஏறிச் சவாரி செய்தல் துன்பம் தரும்.

    "வெறும்புறம் வெம்புரவி ஏற்றின்னா"
    (இன். நாற். -38)

    (புறம் = முதுகு)

    இக்கருத்துகள் அக்கால நம்பிக்கைகளைக் குறிக்கின்றன.

    4.3.5 குடி மக்களுக்கு இன்னாதவை

    மனிதர்க்கு ஆசை அளவோடு இருத்தல் வேண்டும். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. பேராசை பல்வகையான துன்பங்களுக்கும் காரணமாகும். எனவே மிகுந்த ஆசை உயிர்க்குத் துன்பம் தரும்.

    கள் இல்லாத ஊர் கள்ளுண்டு களிப்பவர்க்குத் துன்பம் தரும். காவல் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமாகும். (இன். நாற்.-24) காட்டாறு இடையில் உள்ள ஊரில் வாழ்தல் துன்பமாகும். (இன். நாற்.-22)குடி மக்களால் உழவர்க்கு ஏற்படும் துன்பங்கள் எவையெவை என்று இன்னா நாற்பது பட்டியலிட்டுக் காட்டுகிறது.

    தமக்குச் சொந்தமான ஏரும், எருதும் உடைய உழவர்கள் உழவுத் தொழிலைச் சிறப்பாகச் செய்வர். நல்ல மழை பெய்தால் நிலத்தை உழுது பண்படுத்த எளிதாகும். தமக்குச் சொந்தமான எருதுகள் இல்லாத உழவர்களுக்கு உரிய காலத்தில் நிலத்தை உழ முடியாது. அப்போது நிலத்தின் ஈரம் வீணாய்ப் போகும். அவ்வாறு வீணாகப் போகின்ற நிலத்தின் ஈரம் துன்பத்தைத் தரும். இதனை இன்னா நாற்பது

    எருதில் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா
    (இன். நாற். - 4)

    என்கிறது. அவர் நிலத்தில் போட்ட நல்விதைகள் முளைக்காமை இன்னா என்று மேலும் உழவர்க்கு ஏற்படும் துன்பத்தைச் சொல்கிறது.

    வேலியில்லாத கரும்புப் பயிரைக் காத்தலும் துன்பமாகும். மழைக் காலத்தில் ஒழுகுகின்ற கூரை வீட்டில் வாழ்தலும் துன்பமாகும் (இன். நாற். - 5).

    4.3.6 துறவிகளுக்கு இன்னாதவை

    இல்லறத்தில் இருப்பவர்க்கு மட்டுமன்றித் துறவிகளுக்கும் துன்பம் உண்டாம். அவை என்னவென்று பார்ப்போமா? துறவிகள், வீட்டில் இருந்து உண்ணுதல் இன்னாதது. (இன். நாற்.- 1) புலனடக்கம் இல்லாதவர் மேற்கொண்ட தவம் துன்பம் தரும். (இன். நாற்.-23) ஏனெனில் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழ இயலாதவர் செய்யத் தொடங்குதல் துன்பமாகும். இல்லறம் தொடங்கித் துறவறம் வரை மனிதனுக்கு ஏற்படும் துன்பங்களைக் கபிலர் தொகுத்துச் சொல்லியதைப் பார்த்தோம். இதற்கு மாறுபட்டவை, மனிதனுக்கு இனிமையானவை எவை என்பதைக் கூறும் இனியவை நாற்பது பற்றி இனிப் பார்க்கலாமா?



    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
    2.

    இன்னாதன என்று மொத்தம் எத்தனை கருத்துகள் இன்னா நாற்பதில் சொல்லப்படுகின்றன?

    கோடிட்ட இடத்தை நிரப்புக.

    3.
    பிறன் மனையாள் பின் நோக்கும் _______  இன்னா.
    4.
    கல்லார் உரைக்கும் __________ இன்னா.
    5.
    அறிவறியா __________ பெறல் இன்னா.
    6.
    எருதில் __________ போகு ஈரம் இன்னா.
புதுப்பிக்கபட்ட நாள் : 24-08-2017 12:25:49(இந்திய நேரம்)