தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.7

  • 6.7 ஆணவம்

    அகந்தை, செருக்கு என்னும் சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும். ஆணவம் கொண்டவர்களைத் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்றும் கூறுவார்கள்.

    ஆணவம் கொண்டவர்கள் தங்கள் ஆணவப் போக்கை அகற்றிக் கொள்ளவில்லை என்றால் வாழ்வில் இன்னல்களை அடைய நேரிடும். ‘நான்தான்’ என்னும் எண்ணம் மேம்படுதலே ஆணவத்தின் தொடக்கம். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றால் ‘நானும்’ என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆணவம் கல்வி அறிவு மிகுதியாகப் பெற்றவர்களிடமும் செல்வம் மிகுதியாகக் கொண்டவர்களிடமும் ஏற்படும்.

    6.7.1 கல்விச் செருக்கு

    கல்வியில் சிறந்து விளங்கி அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்தவர்களில் சிலருக்குக் கல்விச் செருக்கு ஏற்படுவது உண்டு. கற்றவர்களிடம் ஏற்படும் இந்தக் கல்விச் செருக்கைப் போக்குவதற்குச்  சிவப்பிரகாசர் பின்வரும் பாடல் வாயிலாக வழிகாட்டியுள்ளார்.

    கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
    அடலேறு அனைய செருக்குஆழ்த்தி - விடலே
    முனிக்கரசு கையால் முகந்து முழங்கும்
    பனிக்கடலும் உண்ணப் படும்
    (7)

    (அனையம் = போன்றவர், அடல் ஏறு = வலிமையான ஆண் சிங்கம், முனிக்கு அரசு = அகத்தியர், முகந்து = மொண்டு, முழங்கும் = ஒலிக்கும், பனிக்கடல் = குளிர்ந்த நீரைக் கொண்ட கடல்)

    முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர். அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர். அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்ச புராணம் தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார். எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது என்று நன்னெறி கூறுகிறது.

    6.7.2 செல்வச் செருக்கு

    கல்விச் செருக்கு எவ்வாறு மனிதனிடம் இருக்கக் கூடாதோ அதைப்போல, செல்வச் செருக்கும் ஒருவனிடம் இருக்கக் கூடாது என்பதைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.

    தொலையாப் பெரும்செல்வத் தோற்றத்தோம் என்று
    தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால்
    இரைக்கும்வண்டு ஊதும்மலர் ஈர்ங்கோதாய் மேரு
    வரைக்கும்வந் தன்று வளைவு
    (14)

    மேரு என்னும் மலை புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய மலை, இந்த மலை நூற்றுக்கணக்கான சிகரங்களைக் கொண்டது; பொன்மலை என்று போற்றப்படுவது; உறுதிக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுவது. இத்தகைய உறுதியான மேரு மலையைக் கூட, சிவபெருமான் வில்லாக வளைத்துக் கையில் தாங்கினார். எனவே, குறையாத செல்வத்தைக் கொண்டவன் என்று யாரும் ஆணவம் கொள்ளக்கூடாது என்று சிவப்பிரகாசர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:21:38(இந்திய நேரம்)