தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்து இலக்கண அறிமுகம்

 • 1.4 எழுத்து இலக்கண அறிமுகம்

  தமிழ் மொழியில் எழுத்து இலக்கணம் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எழுத்து இலக்கணத்தில், எழுத்தின் வகைகள், பத இலக்கணம், சந்தி இலக்கணம் ஆகியன முக்கியப் பகுதிகள் ஆகும்.

  1.4.1 எழுத்தின் வகைகள்

  தமிழ் எழுத்து இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. அவை,

  1.முதல் எழுத்து 2. சார்பு எழுத்து.

  1. முதல் எழுத்து

  மொழிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் ஆகியவை முதல் எழுத்துகள் என்று கூறப்படும்.

  உயிர் எழுத்துகள் குறில், நெடில் என்றும், மெய் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் ஒலி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

  எழுத்துகளின் பயன்பாடு நோக்கிச் சுட்டு எழுத்து, வினா எழுத்து ஆகியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

  2. சார்பு எழுத்து

  முதல் எழுத்துகளைச் சார்ந்து வருபவை சார்பு எழுத்துகள் எனப்படுகின்றன. உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பு எழுத்துகள் ஆகும்.

  எழுத்துகள் ஒலிக்கும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர். எந்த எந்த எழுத்துகள் எவ்வளவு நேரம் ஒலிக்கும் என்பதைத் தெளிவாக வரையறுத்து இலக்கண நூல்கள் கூறுகின்றன.

  மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காட்டுவது மொழி. மொழி, சொற்களால் உருவாகிறது. சொல், எழுத்துகளின் சேர்க்கை. எழுத்தின் அடிப்படை ஒலி. மனித உடலில் இருந்து ஒலி எப்படித் தோன்றுகிறது என்பதைத் தமிழ் இலக்கண நூல்கள் விளக்குகின்றன. மொழியின் அடிப்படை ஒலி என்பதால் ஒவ்வோர் எழுத்தும் எப்படிப் பிறக்கின்றன என்பது பற்றியும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளது. மூக்கு, உதடு, பல், நாக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளின் செயல்பாட்டால் உயிர் எழுத்துகளும், மெய் எழுத்துகளும் எவ்வாறு தோன்றுகின்றன என்று இலக்கண நூல்கள் துல்லியமாகக் கூறுகின்றன.

  தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடிய எழுத்துகள் இவை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே சொல்லுக்கு இறுதியில் வரக்கூடிய எழுத்துகள் பற்றியும் வரையறை செய்யப்பட்டுள்ளது. சொல்லுக்கு இடையில் ஒரு மெய் எழுத்துக்கு அடுத்து எந்த மெய் எழுத்து வரும் என்ற வரையறையும் தரப்பட்டுள்ளது.

  1.4.2 பதவியல்

  தமிழ் ஓர் ஒட்டு நிலை மொழியாகும். ஒட்டுநிலை மொழி என்பது ஒரு வேர்ச் சொல்லுடன் விகுதி, இடைநிலை, சாரியை முதலியன சேர்ந்து ஒரு சொல்லாகத் தோன்றுவது ஆகும். (இவற்றைப் பற்றி விரிவாகப் பின்னர் படிக்கலாம்) தமிழில் முன் ஒட்டுகள் இல்லை; பின் ஒட்டுகளே உள்ளன. வேர்ச் சொல்லுடன் பல உருபுகளும் சேர்ந்து சொற்கள் உருவாகும் முறை இலக்கணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

  எடுத்துக்காட்டாக

  போ என்பது ஒரு வேர்ச் சொல்லாகும். இதனுடன் வ் என்ற எதிர் கால இடைநிலையும், ஆன் என்ற ஆண்பால் ஒருமை வினைமுற்று விகுதியும் இணைந்து,

  போ + வ் + ஆன் = போவான்

  என்று ஒரு சொல் உருவாகிறது. இலக்கணத்தில் இதைப் பற்றிச் சொல்லும் பகுதிக்குப் பதவியல் என்று பெயர்.

  1.4.3 சந்தி இலக்கணம்

  தமிழில் எழுத்திலக்கணத்தில் முக்கியப் பகுதியாகவும் பெரிய பகுதியாகவும் இருப்பது சந்தி இலக்கணம் ஆகும். சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய இலக்கணம் ஆகும். இலக்கண நூல்களை இயற்றிய ஆசிரியர்கள் சந்தி இலக்கணத்தைப் புணர்ச்சி இலக்கணம் என்று கூறுவர்.

  எடுத்துக்காட்டாக

  ஓடி + போனான் = ஓடிப்போனான்

  என்று வரும்.

  இங்கு இரண்டு சொற்கள் சேரும்போது, இரண்டுக்கும் இடையில் ப் என்ற மெய் எழுத்துத் தோன்றி இருக்கிறது. இவ்வாறு இரண்டு சொற்கள் சேரும்போது பல வகையான மாற்றங்கள் ஏற்படும்.

  1.4.4 சந்தி வகைகள்

  இரண்டு சொற்கள் சேரும்போது ஏற்படும் மாற்றங்கள் நான்கு வகைகளில் அமையும்.

  1.
  கதவு + மூடியது = கதவுமூடியது - இயல்பாக இருக்கிறது.
  2.

  மாலை + பொழுது = மாலைப்பொழுது - ஒரு மெய்எழுத்துத் தோன்றியது.

  3.
  மரம் + நிழல் = மரநிழல் - ஓர் எழுத்துக் கெட்டது (அழிந்தது).
  4.

  கல் + சிலை = கற்சிலை - ல் என்ற எழுத்து ற் என்ற எழுத்தாகத் திரிந்தது (மாறியது).

  எனவே, இரண்டு சொற்கள் சேரும்போது இயல்பாக வருதல், தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய நான்கு வகைகளிலும் வரும் என அறியலாம். இங்கு இரண்டு சொற்கள் இருக்கின்றன. முதல் சொல்லை நிலைமொழி என்றும், இரண்டாம் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இந்த மாற்றங்கள் நிலைமொழியின் இறுதி எழுத்துக்கும், வருமொழியின் முதல் எழுத்துக்கும் ஏற்ப அமையும். எனவே ஒரு சொல்லின் முதல் எழுத்தையும் இறுதி எழுத்தையும் பற்றி அறிய வேண்டியது அவசியம் ஆகிறது.

  1.4.5 முதலும் இறுதியும்

  உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து ஆகிய மூன்று வகை எழுத்துகள் சொற்களில் வரும். சந்தி இலக்கணத்தில் உயிர் எழுத்து, மெய் எழுத்து என்ற இருவகை எழுத்துகளை மட்டுமே கொண்டு இலக்கணம் சொல்லப்படும். உயிர்மெய் எழுத்து, உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உருவானது ஆகும். அதை மெய் எழுத்து, உயிர் எழுத்து என்று பிரித்துக் கொண்டு சந்தி இலக்கணத்தில் பயன்படுத்த வேண்டும்.

  எடுத்துக்காட்டாக

  ல் என்ற சொல்லின் முதலில் உள்ள ப என்ற உயிர்மெய்எழுத்து,

  ப் + அ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

  பாம்பு என்ற சொல்லின் இறுதியில் உள்ள பு என்ற உயிர்மெய்எழுத்து,

  ப் + உ என்ற இரண்டு எழுத்துகள் சேர்ந்தது.

  எனவே சொற்களைப் பின்வருமாறு பிரிக்கலாம்.

  டை - உயிர் எழுத்தில் தொடங்கும் சொல்.
  மா
  டு - மெய் எழுத்தில் தொடங்கும் சொல்.
  பழம் - மெய் எழுத்தில் முடியும் சொல்.
  கிளி - உயிர் எழுத்தில் முடியும் சொல்

  இவற்றைக் கொண்டு பார்க்கும்போது சொற்கள் அமையும் விதத்தைப் பின்வருமாறு காட்டலாம். ஈறு என்னும் சொல் இறுதி அல்லது கடைசி என்னும் பொருளைக் கொண்டது.

  உயிர் ஈறு + மெய் முதல் (ஓடை + ரை)
  உயிர் ஈறு + உயிர் முதல் (மணி + டித்தது)
  மெய் ஈறு + உயிர் முதல் (பழம் + திர்ந்தது)
  மெய் ஈறு + மெய் முதல் (முள் + குத்தியது)

  1.4.6 வேற்றுமையும் அல்வழியும்

  சந்திகளில் வேற்றுமைச் சந்தி, அல்வழிச் சந்தி என்று இருவகை உண்டு. வேற்றுமை அல்லாத சந்தி அல்வழிச் சந்தி எனப்படும்.

  நாய் ஓடியது
  நாயை விரட்டினேன்
  நாய்க்கு மணி கட்டு

  இந்தச் சொற்களில் நாய் என்ற சொல்லுடன் , கு என்ற எழுத்துகள் சேர்ந்துள்ளன. நாய் என்ற சொல்லுடன் இந்த எழுத்துகள் சேர்ந்தவுடன் நாய் என்ற சொல்லின் பொருள் வேறுபடுகிறது. முதல் தொடரில் நாய் எழுவாயாக இருக்கிறது. இரண்டாம் தொடரில் நாய் என்ற சொல்லுடன் என்ற எழுத்துச் சேர்ந்தவுடன் நாய் செயப்படுபொருளாக மாறுகிறது. மூன்றாம் தொடரிலும் அவ்வாறே கு என்ற எழுத்துச் சேர்ந்தவுடன் அதன்பொருள் வேறுபடுகிறது. இவ்வாறு ஒரு பெயர்ச்சொல்லுக்குப் பின்னால் நின்று அதன் பொருளை வேறுபடுத்தும் எழுத்தை அல்லது சொல்லை வேற்றுமை என்கிறோம்.

  அவ்வாறு வேறுபடுத்துவதற்குக் காரணமாக உள்ளவற்றை வேற்றுமை உருபு என்பர். எழுவாய் வேற்றுமை முதல் விளிவேற்றுமை வரை எட்டு வகை வேற்றுமைகள் உள்ளன. அவற்றுள் முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ழாம் வேற்றுமை வரை உள்ள ஆறு வேற்றுமைகளுக்கே உருபு உள்ளது. வேற்றுமையின் இலக்கணம் பற்றிப் பின்னர் விரிவாக விளக்கப்படும்.

  நாயை + கண்டேன்

  இரண்டாம் வேற்றுமை

  கல்லால் + அடித்தேன்

  மூன்றாம் வேற்றுமை

  பசிக்கு + உணவு

  நான்காம் வேற்றுமை

  இங்குச் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேர்ந்து வந்துள்ளன. இவற்றை வேற்றுமைத் தொடர்கள் என்று கூறுவர்.

  மண் குடம்
  பொன்வளையல்

  இவையும் வேற்றுமைத் தொடர்களே. இவற்றை விரித்துப் பார்த்தால், மண்ணால் ஆகிய குடம், பொன்னால் ஆகிய வளையல் என்று வரும். இந்தத் தொடர்களில் பெயர்ச்சொற்களுக்குப் பின்னால் வரும் வேற்றுமை உருபுகள் மறைந்து வந்துள்ளன. எனவே இவை வேற்றுமைத் தொகை எனப்படும்.

  வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்தாலும், மறைந்து வந்தாலும், அது வேற்றுமைச் சந்தி எனப்படும்.

  வந்த + கண்ணன்

  (பெயர் எச்சம்)

  வந்து + போனான்

  (வினை எச்சம்)

  ஓடு + ஓடு

  (அடுக்குத்தொடர்)

  மழை + பொழிந்தது

  (எழுவாய்த்தொடர்)

  கண்ணா + செல்

  (விளித்தொடர்)

  மேலே காட்டப்பட்ட பெயர் எச்சம், வினை எச்சம், அடுக்குத் தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர் முதலியவை வேற்றுமை அல்ல என்பதால் இவற்றை அல்வழித்தொடர் என்று கூறுவர்.

  1.4.7 பெயரும் வினையும்

  சொற்கள் பெயர், வினை, இடை, உரி, என நான்கு வகைப்படும். அவற்றுள் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டும் முக்கியமானவை. இவை இரண்டும் பின்வருமாறு இணைந்து வரும்.

  பெயர் + பெயர்

  =

  சேரன் பாண்டியன்

  பெயர் + வினை

  =

  வளவன் சென்றான்

  வினை + பெயர்

  =

  சென்றான் வளவன்

  வினை + வினை

  =

  படித்துச் சென்றான்

  சந்தி இலக்கணம் பொருள் அடிப்படையிலும் பெயர்ச்சொல்லின் வகை அடிப்படையிலும் சொல்லப்படும்.

  மரப்பெயர்கள், திசைப் பெயர்கள், எண்ணுப் பெயர்கள் ஆகியவற்றையும் சுட்டி, சந்தி இலக்கணம் சொல்லப்படுகிறது.

  மரப் பெயர்

  =

  தென்னை மரம்

  திசைப் பெயர்

  =

  வட கிழக்கு

  எண்ணுப் பெயர்

  =

  சேர, சோழ, பாண்டியர்

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1.

  தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

  2.

  தமிழில் உள்ள இலக்கண நூல்களில் நான்கின் பெயரைக் கூறுக.

  3.

  தொல்காப்பியத்தில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

  4.

  முதல் எழுத்துகள் யாவை?

  5.

  சந்தி இலக்கணம் என்றால் என்ன?

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 16:03:01(இந்திய நேரம்)