தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அரசியர்

  • 2.2 அரசியர்

    அரசருடன் முடிசூடி, அத்தாணி மண்டபத்தில் அரசருடன் ஒருங்கு வீற்றிருந்து, தனி ஆணை செலுத்தும் உரிமை தமிழக அரசியர்க்கு உண்டு என்பதைக் கல்வெட்டுகள் பல கூறுகின்றன.

    பல்லவ அரசன், அரசி

    உலகுடைய பெருமாளுடன்
    ஒக்கமுடி கவித்தருளி
                   (மூன்றாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)

    ஒக்க அபிஷேகம் சூடும் உரிமையுள
    தக்க தலைமைத் தனித்தேவி
                   (இரண்டாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)
     

    என்ற கல்வெட்டுப் பகுதிகள் அரசியர் முடிசூடுவதைக் கூறுகிறது. பெண்ணரசு என்றே அவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர்.
     

    2.2.1 அரியணையில் அரசியர்

    ஆட்சிக் கட்டிலில் அரசரோடு வீற்றிருந்தனர் என்பதை,

    செம்பொன் வீர சிம்மாசனத்து
    திரிபுவன முழுதுடை யாளொடும்
    வீற்றிருந் தருளிய ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்
                (மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி)

    புவனி முழுதுடை யாளொடும் வீற்றிருந்தருளிய
    திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜதேவர்
                (இரண்டாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)
     

    என்பன போன்ற கல்வெட்டுப் பகுதிகள் கூறுகின்றன.

    ஆணையெங்கும் தனதாக்கிய ஆதிராஜன்மாதேவி
                (மூன்றாம் இராசராசன் மெய்க்கீர்த்தி)

    உடன் ஆணை திரு ஆணை
    உடன் செல்ல முடிகவித்து
                (இரண்டாம் இராசாதிராசன் மெய்க்கீர்த்தி)
     

    என்ற மெய்க்கீர்த்திப் பகுதிகளாலும் அரசியர் ஆணை செலுத்திய செய்தியை அறியலாம்.
     

    2.2.2 பல்லவ அரசியர்

    பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் மனைவி சங்கா, இராட்டிர கூட மன்னன் மகள். அவளை, பூமியைப்போலப் பொறுமை உடையவள் என்றும், இலட்சுமியைப்போல அழகுடையவள் என்றும், தாயைப் போல அன்போடு குடிமக்களைப் பாதுகாத்தாள் என்றும் கல்வெட்டுகள் கூறுகின்றன. பல்லவன் நிருபதுங்கன் மனைவி பிருதிவி மாணிக்கம் என்பவள் கங்க மன்னன் மகள். அவள் பெயரில் பிருதிவிமகாதேவி மங்கலம் என்ற ஊரே இருந்தது. வாய்க்காலுக்கும், ஏரிக்கும், ஊர்களுக்கும் பல அரசியர் பெயர்கள் இருந்தன. பல்லவன் அபராசிதன் மனைவி மாதேவடிகள் ஒரு தமிழ்ப்பெண். சாருதேவி, ரங்க பதாகை, மாறம் பாவை, காடவன் மாதேவி, வீரமா தேவி என்பவர்கள் புகழ்வாய்ந்த சில பல்லவ மன்னரின் பேரரசியர் ஆவர்.
     

    2.2.3 அரசியர் திருப்பணிகள்

    அரசியர் தனியாகக் கோயில் கட்டியுள்ளனர். இராசராசசோழன் மனைவி உலோகமாதேவி திருவையாற்றில் கட்டிய கோயில் உலோகமாதேவி ஈச்சரம் என்ற பெயரோடு விளங்குகிறது. இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு, ‘அக்கன் குந்தவையாரும் நம் பெண்டுகளும்’ கொடுத்த கொடைகளைக் கல்வெட்டில் பொறிக்க ஆணையிட்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கண்டராதித்தன் மனைவியார் செம்பியன் மாதேவி. அவர் உத்தம சோழனின் தாயார். அவர் பல கோயில்களில் திருப்பணி செய்துள்ளார். திருநல்லம் என்னும் கோனேரி ராசபுரத்தில் கோயில் எடுப்பித்து, தன் கணவன் சிவலிங்கத்தை வணங்குவது போல ஓர் அழகிய சிற்பத்தையும் செதுக்கச் செய்துள்ளார். இராசராசனின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் தேவியாருமான குந்தவையார் சைவ, வைணவ, சமணக் கோயில்கள் பலவற்றைக் கட்டியுள்ளார். தஞ்சையில் தன் தந்தையார் பெயரால் அமைந்த சுந்தரசோழ விண்ணகரத்தில் ஆதுலர் சாலை என்னும் மருத்துவ சாலையை ஏற்படுத்திக் கொடைகள் பல தந்துள்ளார்.
     

    ‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ
    குலோத்துங்கசோழ தேவர் திருத்தங்கையார்
    குந்தவையாழ்வார் ஆளுடையார்க்குத் தண்ணீர் அமுது
    செய்தருள குடிஞைக்கல் நிறை மதுராந்தகன்மாடையோடு
    ஒக்கும் பொன் ஐம்பது கழஞ்சு’

    என்பது சிதம்பரம் கல்வெட்டு.

    2.2.4 பட்டத்து அரசியர்

    அரசனது மனைவிமார்கள் பிராட்டியார், மணவாட்டி, பெண்டு, ஆழ்வி, போகியார், சாணி, தேவியார் என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளனர். அரசனின் மூத்த மனைவியார் அக்ரமகிஷி, அக்ரமகாதேவி என அழைக்கப்படுவார். முதல் இராசராசன் தேவி பெயர் தந்திசத்தி விடங்கியார். அவருக்கு உலோகமாதேவி என்றும் பெயர் உண்டு. பட்டத்துத் தேவி இறந்துவிட்டால் இன்னொருவர் பட்டத்துத் தேவி ஆவார். விக்கிரம சோழனின் பட்டத்து அரசி முக்கோக்கிழானடிகள் இறந்தவுடன் தியாக பதாகை என்பார் பட்டத்து அரசியானார். முதல் குலோத்துங்க சோழன் பட்டத்து அரசி மதுராந்தகி இறந்தவுடன் தியாகவல்லி என்பவர் பட்டத்து அரசியானார். பல சோழ அரசரின் மனைவியர் உலகமுழுதுடையாள், புவனிமுழுதுடையாள், தரணி முழுதுடையாள், அவனிமுழுதுடையாள் எனப் பெயர் பெற்றிருந்தனர். உலகமுழுதுடையாள் என்ற பெயர் பொதுப்பெயராக வழங்கியது. மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டியன் ஸ்ரீவல்லவன் ஆகியோரின் தேவிமாரும் உலகமுழுதுடையாள் என்ற பெயர் பெற்றிருந்தனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-10-2017 18:35:53(இந்திய நேரம்)