தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வரி விதித்தல்

  • 2.6 வரி விதித்தல்

    அரசாங்கம் பொருள் வருவாய் இல்லாமல் நடைபெற முடியாது. ஆட்சி இனிது நடைபெற வேண்டியும், பொது மக்களுக்குப் பலவகை நலங்கள் புரிந்து அவர்களைப் பாதுகாத்தல் பொருட்டும் அரசன் தன் நாட்டு மக்களிடம் வரி வாங்குவது இன்றியமையாததாகிறது. நில உரிமையாளராகிய காணியாளர்களும், வணிகர்களும், பல்வேறு வகையான தொழிலை மேற்கொண்டவர்களும் அரசனோ நாட்டுச் சபையோ ஊராரோ வசூலித்த வரிகளைத் தவறாமல் செலுத்தினர் என்பதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
     

    2.6.1 பலவகை வரிகள்

    அரசின் வருவாயில் நிலவரியே முதன்மை பெற்று நிலவியது. அவ்வரி, கடமை அல்லது காணிக்கடன் என்று கூறப்படும். நிலவரி நீங்கிய பிறவரிகள் குடிமை என்று கூறப்பட்ட. நிலத்தின் விளைச்சலுக்கேற்ப நெல்லாகவும், பொன் அல்லது காசு ஆகவும் வசூல் செய்தனர். பெரும்பாலும் ஆறில் ஒரு பங்கு வரியாக வசூல் செய்யப்பட்டது. நிலவரி இல்லாமல் தறியிறை, செக்கு இறை, மனை இறை, அங்காடிப் பாட்டம், தட்டாரப் பாட்டம், ஈழம்பூட்சி, வண்ணாரப் பாறை, குசக்காணம், ஓடக்கூலி, நீர்க்கூலி, நாடுகாவல், சுங்கம், தரகு, மரஇறை, இலைக்கூலம் முதலான பல வரிகள் வாங்கப் பெற்றமையைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.


    ‘நிலம் கடமையும் அந்தராயமும் வினியோகமும் தருவதான அச்சும் காரிய ஆராய்ச்சியும் வெட்டிப்பாட்டமும் பஞ்சுபீலியும் சந்துவிக்கிரகப் பேறும் வாசற்பேறும் இலாஞ்சினைப்பேறும் தறியிறையும் செக்கிறையும் தட்டொலிப்பாட்டமும் இடையர்வரியும் மீன்வரியும் பொன்வரியும் மற்றும் எப்பேற்பட்ட வரியும்’

    என்பது கல்வெட்டுத் தொடர்.

     
    2.6.2 சலுகைகள்

    தவறாமல் வரிகொடுக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப் பட்டிருந்தாலும் வெள்ளம், பஞ்சம், விளைவு இன்மை ஆகிய பல காரணங்களுக்காகப் பல இடங்களில் வரி குறைத்து சலுகை காட்டப்பட்டது. புதிய ஊர்களில் உழவர்களையும், தொழிலாளர்களையும் குடியேற்றும்போதும், விளையாத தரிசு நிலங்களைப் பண்படுத்தி உழவு செய்யும்போதும் சில ஆண்டுகட்கு வரி இல்லை என்றும், பின்னர் சில ஆண்டுகட்குக் குறைந்த வரி என்றும் நிர்ணயிக்கப்பட்டது. முதல் குலோத்துங்க சோழன் வணிகர்கட்கு இருந்த சுங்கவரியை நீக்கிச் சுங்கந்தவிர்த்த சோழன் என்று பெயர் பெற்றான். சுங்கம் இல்லாச் சோழநாடு என்று கூறப்பட்டது. வரி செலுத்தாதோர் நிலமும், பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டன. அதனால் வந்த பொருளைக் கருவூலம் ஆகிய பண்டாரத்தில் சேர்த்தனர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 21-08-2017 09:58:35(இந்திய நேரம்)