தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சமயம்

  • 4.3 சமயம்

    சமயம் பற்றிய செய்திகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக, சைவ சமயம் பற்றிய செய்திகள் பல உள்ளன.

    4.3.1 சைவம்

    சமய அடியார்களும், ஊர்களும், நிலங்களும், பல பொருள்களும் அன்று பெற்றிருந்த பெயர்கள் அவர்களின் ஆழ்ந்த சமய நம்பிக்கையையும், சமய ஈடுபாட்டையும், சமயத் தொடர்பையும் காட்டுகின்றன. மக்கள் தங்கள் குழந்தைகட்குச் சமய அடியார்கள் பெயரைக் குறிப்பாகத் தேவார மூவர், நாயன்மார் பெயர்களையே பெரும்பாலும் வைத்தனர். திருஞானசம்பந்தன், நாவுக்கரசன், ஆலாலசுந்தரன், தம்பிரான் தோழன் என்ற பெயர்களைக் கல்வெட்டில் காணுகின்றோம்.

    • இறைவன் பெயர்கள் இடல்

    மஞ்ஞகன் வயல், கணபதி வாய்க்கால், கூத்தாடும் நல்லூர் என்று வயல், வாய்க்கால், ஊர் என முடியும் பெயர்களும் சமய அடிப்படையில் எழுந்துள்ளன. ஏரி உடைப்பு ஒன்றுக்குக் கூட காளியம்மை உடைப்பு என்று பெயர் வழங்கியது. உடைப்பு என்பது ஏரியின் உடைந்த பகுதியாகும்.

    • சிவபெருமான் பிள்ளைகள்

    பிள்ளையார், முருகன், பைரவர், சேத்திரபாலர், சண்டிகேசுவரர், திருஞானசம்பந்தர் ஆகியோர் சிவபெருமானின் பிள்ளைகள் என்று அழைக்கப் பெறுவர். பிள்ளையாரை மூத்த பிள்ளையார் என்றும், முருகனை இளைய பிள்ளையார் என்றும் கல்வெட்டில் அழைப்பர். அம்மையின் ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் சிவபெருமானின் பிள்ளை ஆனார்.

    • முருகன் பெயர்கள்

    பிள்ளையார் என இவர்களை அழைக்கும் கல்வெட்டுக்கள் முருகப் பெருமானைக் குன்றம் எறிந்த பிள்ளையார், சிறைமீட்ட பெருமாள், தேவ சேனாபதி, இளைய நயினார், வேலாயுதசாமி, கந்தன், ஆறுமுகன், சுப்பிரமணியர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கின்றன. சில கல்வெட்டுகள் ‘சதா வேலுமயிலும் துணை’ என முடிகின்றன.

    4.3.2 திருமுறை விண்ணப்பம்

    வழிபாட்டின்போது தெய்வீகப் புலமையுடை அருளாளர்கள் இயற்றிய பாடல்களைப் பாடி வழிபாடு செய்வது வழக்கம். அவற்றைப் பாடுவதற்கு ஓதுவார்கள் தனியாக நியமிக்கப்பட்டிருந்தனர். சிவாலயங்களில் சைவத் திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டன. இதனைத் திருமுறை விண்ணப்பம் செய்தல் என்று கல்வெட்டுக் கூறும். வைணவக் கோயில்களில் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டன.

    • திருமுறைப் பெயர்கள்

    சைவத் திருமுறைகளில் பயின்றுவரும் பல தொடர்கள் மக்களுக்குப் பெயராக வைக்கப்பட்டிருந்தன. அம்பலத்தாடி, ஒளிவளர்விளக்கு, சீருடைக்கழல், செம்பொற்சோதி, பொன்னார் மேனியன், எடுத்தபாதம், மழலைச் சிலம்பு ஆகிய பெயர்கள் அவ்வாறு அமைந்தவை.

    4.3.3 சமயப் பொறை

    இராசராசன் மகள், திருமலையிலும், தாதாபுரத்திலும் ‘குந்தவை ஜினாலயம்’ என்ற சமணப் பள்ளிகளை ஏற்படுத்தினாள். வீரபாண்டியன் பட்டினத்தில் இருந்த பெரிய இசுலாமியப் பள்ளியை, உதயமார்த்தாண்டன் புதுப்பித்து, உதய மார்த்தாண்டப்பள்ளி என்று பேரிட்டுக் கொடை அளித்தான். சருகணியில் உள்ள சர்வேசுவரன் கோயிலான கிறித்தவ தேவாலயத்திற்குச் சேதுபதி மன்னர்கள் கொடை கொடுத்தார்கள். தமிழகத்தில் சமயப்பூசல் பெரிதாக இன்றி, மத நல்லிணக்கத்துடன் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 19:51:22(இந்திய நேரம்)