தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நிலங்கள்

  • 6.2 நிலங்கள்

    வேளாண்மைக்குப் பயன்படும் நிலத்தைப் பூமி, செய், செறு, குண்டில், அறை, தடி, துடவை, பட்டி, நன்செய், புன்செய், கருஞ்செய் என்று பல்வேறு பெயர்களில் கல்வெட்டுக் கூறுகிறது.

    நிலங்களுக்குப் பெயர்கள் வைத்திருந்தார்கள். . ‘கொற்றன் வயல் என்று பேருடைய நிலம்', ‘பூலாஞ்செய் என்று பெயர் கூவப்பட்ட நிலம்' என்ற தொடரால் அவைகளை அறியலாம்..

    • உடைமை மாறுதல்

    ஒருவருக்கு உரிமையான நிலம் அடுத்தவருக்கு விலைக்கு விற்கப்படும் பொழுது, அதன் உடைமையாளர் மாறும்போது, பெரும்பாலும் அந்நிலத்தின் பெயரும் மாற்றமடையும். ‘பண்டுடையாரையும் பழம்பேரையும் தவிர்த்து' நிலம் வாங்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன..

    • விளைநிலம்

    கமுகந்தோட்டம், மாந்தோட்டம், மஞ்சள் விளையும் பூமி, எள்ளு விளையும் பூமி, வழுதிலை கருணை விளையும் பூமி போன்று விளை பொருள்களால் நிலம் சில கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றது. வழுதிலை அல்லது வழுதுணங்காய் என்பது கத்தரிக்காயைக் குறிக்கும். கருணை என்பது ஒரு கிழங்கு வகை..

    6.2.1 நிலம் அளத்தலும் வரிமுறையும்

    நாட்டில் பயிரிடும் வேளாண்மை நிலம் எவ்வளவு என்று தெரிந்தால்தான் விளைநிலம் எவ்வளவு, அதனால் வரும் வருவாய் காணிக்கடன் எவ்வளவு என்று திட்டவட்டமாகத் தெரியும். அதனால் முதலாம் இராசராசன் (1001), முதலாம் குலோத்துங்கன் (1086), மூன்றாம் குலோத்துங்கன் (1216) ஆகியோர் காலங்களில் சோழ நாட்டில் நிலம் அளக்கப்பட்டது. .

    • நிலம் அளத்தல்

    நில அளவு செய்த அலுவலர்கள் குரவன் உலகளந்தான் இராசராச மாராயன், உலகு அளவித்த திருவடிகள் சாத்தன், உலகளந்த சோழப் பல்லவரையன், குளத்தூருடையான் உலகளந்தான் ஆன திருவரங்க தேவன் ஆகியோர் ஆவர். அளவு செய்த கோல்கள் ‘திருவுலகு அளந்த ஸ்ரீபாதக்கோல்', ‘உலகளந்த கோல்' எனப்பட்டது. இதன்மூலம் விளைநிலம் மிகச் சரியாகக் கணக்கிடப்பட்டது. ஊரின் மற்ற பகுதிகளும் அளந்து குறிக்கப்பட்டன..

    • வரிமுறை

    நிலம் ‘தரம்' வாரியாகப் பிரிக்கப்பட்டது. தரம் இல்லாத நிலங்கள் ‘தரமிலி' எனக் குறிக்கப்பட்டு வரி இல்லாமல் ஆக்கப்பட்டன. சில காரணங்களால் சில காலங்களில் நிலத்தின் தரம் கூட்டப்பட்டது; அல்லது குறைக்கப்பட்டது. பயிர் பார்த்து பயிர் நின்ற நிலத்திற்கு மட்டுமே வரி வசூலிக்கப்பட்டது. வெள்ளத்தாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்ட நிலங்கட்கு வரி குறைக்கப்பட்டது. ‘வெள்ளச்சாவி, வறட்சிச்சாவிக்கு இறை இல்லை' எனப்பட்டது. வரி நெல்லாகவும், பணமாகவும் வசூலிக்கப்பட்டது. ‘விதைத்துப் பாழ், நாற்றுப்பாழ், நட்டுப்பாழ்' ஆனால் நெல்லோ பணமோ வரியாக வசூலிக்கக் கூடாது என்று கூறப்பட்டது. நந்தவனம், கன்றுமேய் பாழ், உவர்நிலம், காடு, மானிய பூமிகள் இவைகட்கு வரியில்லை.

    புது ஊர் ஏற்படுத்தி உழவர்களைக் குடியேற்றினால் முதல் நான்காண்டுக்கு நிலவரி இல்லை; பின்னர் மூன்று ஆண்டுகட்கு மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நிலவரி வசூலிக்கப்பட்டது. தானாக நீர் பாய்ந்த நிலத்திற்கு ஒரு மாவுக்கு 12 கலம் நெல்லும், ஏற்றம் இறைத்துப் பயிர்செய்த நிலத்திற்கு ஒரு மாவுக்கு 6 கலம் நெல்லும் வரியாகப் பெறப்பட்டதாக ஒரு கல்வெட்டுக் கூறுகிறது..

    6.2.2 பயிரிடலும் விளைச்சலும்

    நில உடைமையாளர்கள் தாங்களாகவே பயிர் செய்யலாம். அல்லது பிறரைக் கொண்டு பயிர் செய்விக்கலாம். அவர்கள் உழுதுண்போர், உழுவித்துண்போர் எனப்பட்டனர். கல்வெட்டுகளில் `பயிர்செய்தும் செய்வித்தும்' `நிலம் உழுதும் உழுவித்தும்' என்றும் குறிக்கப்படுகின்றன. பயிரிடும் உரிமையைக் `காராண்மை' என்றும், நில உரிமையை `மீனாட்சி' என்றும் குறித்தனர். .

    • நிலம் திருத்துதல்

    பயிர் செய்யத் தகுதியற்ற நிலங்களைப் பயிர் நிலமாக மாற்றும் முயற்சிகள் பல நடைபெற்றுள்ளன.

    ‘பிரம்ம தேசத்துப் புறக்காலில் காடுவெட்டிப் பயிர் செய்ய ஒண்ணாது நின்ற நிலத்தைக் காடுவெட்டிக் கட்டை பறித்து மேடும் தாழ்வும் ஒக்க இட்டு ஆறும் அடைத்து பயிர்நிலமாகத் திருத்தி' அவ்வூரில் நிலம் பயிர் செய்யத் தகுதி ஆக்கியதைக் கல்வெட்டு ஒன்று விளக்குகிறது..

    (ஒண்ணாது - இயலாது, ஒக்க - சமமாக).

    வெள்ளப் பெருக்கால் அழிந்த நிலங்களையும் சரி செய்துள்ளனர்.

    ஆற்றுப் படுகையில் ஆறு உடைந்து மணலிட்டு மணல்மேடாய்க் கிடந்த நிலம்'

    `காவேரி உடைந்து மடுவாய் நீர்நிலை ஆன நிலம்'

    ஆகியவைகளைத் திருத்தி வேளாண்மைக்கு உரிய நிலங்கள் ஆக்கினர்.

    (மடு - பள்ளம்).

    • இருவகைப் பயிர்கள்

    பயிர்கள் வான் பயிர், புன்பயிர் என்று இரண்டு வகையாக அழைக்கப்பட்டன. நெல், கரும்பு, வாழை, தெங்கு, கமுகு, மா, பலா, மஞ்சள், செங்கழுநீர், கொழுந்து ஆகியவை வான் பயிர்கள் எனப்பட்டன. மானவாரி, புழுதிநெல், எள், வரகு, பருத்தி, ஆமணக்கு ஆகியவை புன்பயிர்கள் எனப்பட்டன. வான்பயிருக்கு வரி அதிகமாகவும், புன்பயிருக்கு வரி குறைவாகவும் விதிக்கப்பட்டது..

    • விளைச்சல்கள்

    ஒரு போகம் விளைவு பூ எனப்பட்டது. இது முதற்பூ, இடைப்பூ, கடைப்பூ என அழைக்கப்பட்டது. புதியதாகப் பயிர் செய்தால் வம்பு எனப்பட்டது. பருவத்திற்கு ஏற்ப குறுவை, சம்பா, கார், பசானம், தாளடி, மறு, கார்மறு என அவை அழைக்கப்பட்டன..

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1)

    உணவை உயிர் என்று பாடிய சங்கப் புலவர் யார்?

    2)

    கிணறு தோண்டுவதைப் பற்றிய பண்டைய தமிழ் நூலின் பெயர் என்ன?

    3)

    குடமுருட்டி ஆற்றின் பழைய பெயர் என்ன?

    4)

    வீரநாராயணன் ஏரியை வெட்டியது யார்?

    5)

    'நீர் மயமான வெற்றித் தூண்' என்று புகழப்பட்ட ஏரி எது?

    6)

    ஏரிகள் தூர் வாருவதை எவ்வாறு அழைப்பர்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-08-2017 17:14:43(இந்திய நேரம்)