தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாங்கியிற் கூட்டம்

  • 5.2
    பாங்கியிற் கூட்டம்

    பாங்கி (தோழி) வழியாகத் தலைவன் தலைவியைச் சேர்வது பாங்கியிற் கூட்டம் எனப்படும். தோழி, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள களவு வழிப்பட்ட காதல் ஒழுக்கத்தை முன்னுற உணர்தல், குறையுற உணர்தல், இருவரும் உள்வழி அவன்வர உணர்தல் என்னும் மூவகையில் ஏதேனும் ஒன்றாலோ, பலவற்றாலோ உணர்ந்து தெளிவாள். பின் தலைவனது வேண்டுகோளை ஏற்று, தலைவியுடன் அவன் களவு ஒழுக்கத்தைத் தொடர்ந்திட வழிவகை காண்பாள். இதுவே பாங்கியிற் கூட்டம் எனப்படும்.

    பாங்கியிற் கூட்டமானது பன்னிரு வகைப்பாடுகளை உடையது. எனினும் அவற்றை வகுத்தும் தொகுத்தும் வழங்கும்போது கீழ்வருமாறு பாகுபடுத்தியுள்ளார் நூலாசிரியரான நாற்கவிராசநம்பி.

    • இரந்து பின் நிற்றலும் சேட்படையும்.
    • மடற்கூற்றும் மடல் விலக்கும்.
    • குறைநேர்தலும் மடற்கூற்று ஒழிதலும்
    • குறை நயப்பித்தலும் மறுத்தலும்
    • குறை நயப்பித்தலும் நயத்தலும்
    • கூட்டலும், கூடலும், ஆயங்கூட்டலும், வேட்டலும்

    இவற்றுக்கான விளக்கங்களை இனிக் காண்போம்.

    • இரந்துபின் நிற்றலும் சேட்படையும்

    தலைவன், தோழியிடம் சென்று நின்று தன் குறையைத் தீர்க்க வேண்டும் என்று சொல்வது இரந்து பின் நிற்றல் எனப்படும்.

    தோழியோ தலைவனது வேண்டுகோளை உடனடியாக ஏற்காமல், மறுத்துவிடுவாள். அது சேட்படை எனப்படும். (உடன் சேர்க்காமல் தூர விடுதல் அல்லது அகற்றுதல் சேட்படை ஆகும். சேண் - நெடுந்தூரம்)

    இவ்விரு பகுதிகளையும் ஒரே கூறாக்கி இவற்றுக்கென 20 உட்பிரிவுச் செய்திகளை வழங்குகிறது அகப்பொருள் இலக்கண நூல்.

    இதனுள் தலைவன் உட்கோள் சாற்றல் முதலாக, பாங்கி ஆற்றுவித்து அகற்றுதல் ஈறாக 20 உட்பிரிவுகள் அடங்கும். அப்பிரிவுச் செய்திகளைக் கீழ்வருமாறு வரிசைப்படுத்தி விளங்கிக் கொள்ளலாம்.

    • தலைவன் தன் உள்ளத்தில் கொண்ட காதலைத் தோழியிடம் சொல்லுதல் - தோழி தங்கள் தலைவியின் குலப்பெருமை கூறி, இக்காதல் பொருந்தாது எனல்.
    • தோழி ஏதுமறியாதவள் போன்று தலைவனைப் பார்த்து, ‘நீ எந்தப் பெண்ணிடம் காதல் கொண்டாய்?’ எனல் - தலைவன் தான் காதல் கொண்ட தலைவியின் இயல்புகளை எடுத்தியம்புதல்.
    • தலைவன் ‘தலைவி இல்லாமல் என் வாழ்வு இல்லை’ எனல் - தோழி ‘உன் குறையை நீயே சென்று தலைவியிடம் சொல்’ எனல்.
    • தலைவி அறியாமை உடையவள் என்று தோழி கூறுதல் - தலைவன் அதை மறுத்து, தலைவியின் அறிவாற்றலைப் பற்றிக் கூறுதல்.
    • ‘உலக முறைப்படி சான்றோர் முன்னிலையில் தலைவியை மணந்து கொள்’ என்று தோழி அறிவுறுத்துதல் - அதுகேட்ட தலைவன் ‘போகும் என் உயிரை நீ முதலில் காப்பாற்று. பிறகு நான் நீ கூறும் முறைப்படி மணம் செய்வேன்’ எனல்.
    • தலைவன் தான் கொண்டு வந்துள்ள (கையுறை) பரிசுப் பொருள் பற்றிப் புகழ்ந்து பேசுதல் - தோழி அதை வாங்க மறுத்துப் பேசுதல்.
    • ஆற்றாமை புலப்படுத்தித் தலைவன் பேசுதல் - அது கேட்ட தோழி ‘வருந்தாதே நாளை வா’ எனல்.

    இவையாவும் முதற்பிரிவான இரந்து பின்னிற்றல், சேட்படை (சேண் + படை) என்னும் இருவகைப்பட்ட செயல்பாடுகளுக்கும் உரிய உட்பிரிவுகளாகும்.

    • மடற்கூற்றும் மடல் விலக்கும்

    தலைவன் தன் காதலைப் பலருக்கும் புலப்படுத்தி நிற்பது மடலேறுதல் எனப்படும். அவன் பனைமரப் பொருள்களால் வண்டியும் குதிரையும் போல உருவத்தைச் செய்து கொள்வான். ஒரு துணியில் தலைவியின் உருவத்தை ஓவியமாக எழுதி, கொடிபோல் கையில் பிடித்துக்கொண்டு நகரின் நடுப்பகுதியில் அக்குதிரையின் மேல் ஏறி அமர்வான். அமர்ந்து கொண்டு, தலைவன் தலைவிமீது தனக்குள்ள காதலைப் புலப்படுத்துவான். இது மடலேறுதல் ஆகும். இச்செயலைச் செய்வேன் எனத் தலைவன் கூறுவது மடற்கூற்று எனப்படும். அது வேண்டாம் என்று தோழி விலக்குவது (நீக்குவது) மடல் விலக்கு எனப்படும்.

    இந்த இரண்டாம் கூறு இரந்து குறைபெறாது வருந்திய தலைவன் மடலே பொருள் என மதித்தல் முதலாகப் பாங்கி கொண்டு நிலை கூறல் ஈறாக ஏழு செய்திப் பிரிவுகளை உடையது.

    • மடலேறுவதைத் தவிர வேறுவழி இல்லை என்று தலைவன் தனக்குள்ளே கூறிக் கொள்ளுதல்.
    • அவ்வாறு மடலேறுவது காதல் கைவிடாத இளைஞர் செயல் எனப் பொதுப்படையாகக் கூறுதல்.
    • தானும் அவ்வாறே செய்ய நேரும் என்று தன்மீது ஏற்றிக்கூறுதல்.
    • ‘நீ ஓவியமாகத் தீட்ட இயலாத பேரழகுடையவள் எங்கள் தலைவி’ எனத் தோழி கூறுதல் - ‘என்னால் தலைவியின் பேரழகை ஓவியமாக்கிட இயலும்’ என்று தலைவன்கூறுதல்.
    • மடலேறுதல் தக்கது அன்று என்று தோழி மறுத்துக் கூறுதல்.

    முதலானவையே இரண்டாம் கூறு கூறும் செய்திகளாகும். இவற்றுள் தலைவன் கூற்றாக வருவன மடற்கூற்று ஆகும். தோழி கூற்றாக வருவன மடல் விலக்கு ஆகும்.

    • குறை நேர்தலும் மடற்கூற்று ஒழிதலும்

    இது பாங்கியிற் கூட்டத்துச் செய்தியின் மூன்றாம் வகையாகும். இதனுள்ளும் இரு கூறுகள் இணைந்துள்ளன.

    குறை நேர்தல் என்றால் தலைவன் வெளிப்படுத்திய செய்திகளை உணர்ந்து அவனுக்குள்ள மனக்குறையைத் தீர்த்துவைக்கத் தோழி உடன்படுதல் ஆகும்.

    மடற்கூற்று ஒழிதல் என்பது, அவ்வாறு தோழி உடன்பட்டபின் இனி மடலேற மாட்டேன் என்று தலைவன் அச்செயலைக் கைவிடுதல் ஆகும்.

    தலைவி இளமைத் தன்மை பாங்கி தலைவனுக்கு உணர்த்துதல் முதலாகக் கிழவோன் ஆற்றல் ஈறாக அமையும் ஒன்பது செய்திகளும் இப்பிரிவுக்குரியன.

    • தோழி தலைவியின் இளமை எழிலைத் தலைவனுக்கு உணர்த்துதல்- தலைவி நஞ்சு போன்ற விழியால் என் உயிரை வருத்தினாள் எனத் தலைவன் கூறுதல்.
    • ‘தலைவியிடம் சென்று உன்னைப் பற்றிச் சொல்வதே எனக்கு எளிதான செயல் அன்று’ என்று தோழி கூறுதல் - ‘நீ என்னைப் பற்றிச் சொல்லத் தொடங்கியதுமே ஆசைமேலிட உன்பால் அன்பு காட்டுவாள் தலைவி’ என்று தலைவன் கூறுதல்.
    • ‘என்னை மறைத்து நீங்கள் இருவரும் கூடுவது எளிதன்று’ என்று தோழி நகைத்துக் கூறுதல் - ‘தோழியே! நீ ஆறுதல் கூறுவதற்குப் பதிலாகச் சிரித்துப் பேசுகிறாய். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது’ என்று தலைவன் கூறுதல்.
    • தோழி தலைவனுக்கு ஆறுதல் கூறிப் பரிசுப்பொருளை (கையுறையை) ஏற்றல் - தலைவன் தன் துன்பம் நீங்கிப் பேசுதல்.

    இவையாவும் மூன்றாம் பிரிவுக்கு உட்பட்ட செய்திகளாகும்.

    • குறை நயப்பித்தலும் மறுத்தலும்

    குறை - தலைவனுக்குள்ள மனக்குறை (தலைவியோடு சேர முடியாத நிலை)

    நயப்பித்தல் - அக்குறையை முடித்து வைக்க விரும்பும் தோழி, தலைவிக்கும் அவ்விருப்பம் உண்டாக்க முயலுதல். அதற்கேற்பப் பேசுதல்.

    மறுத்தல் - தலைவனுக்காகப் பரிந்து பேசும் தோழியின் கருத்துக்கு உடன்படாத தலைவி மறுத்துப் பேசுதல்.

    இது இறைவன் தனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு அவன் குறை உணர்த்துதல் முதலாக, கையுறை புகழ்தல் ஈறாக ஆறு செய்திப் பிரிவுகளை உடையது.

    • தலைவனுக்கு அவனது மனக்குறையைத் தீர்த்து வைப்பதாக உடன்பட்ட தோழி, அதன்பின் தலைவனது மனக்குறை இது எனத் தலைவியிடம் கூறுதல்.
    • தலைவனைப் பற்றி எதுவுமே அறியாதவள் போல, தலைவி, வேறு ஓரு கருத்தைப் புலப்படுத்திப் பேசுதல். (தோழி பேசியதற்குத் தொடர்பு இல்லாததுபோல் பதில் கூறுதல்)
    • தோழி ‘தலைவன் இங்கு வந்ததை நான் கண்டேனே!' என்று நேரடியாகப் பேசுதல்.
    • மறுபடியும் தலைவி மறுத்து மொழிதல்.
    • ‘உனக்கு நான் வேறா? என்னிடம் ஏன் மறைக்கிறாய்?' என்று தோழி கேட்டல்.
    • தலைவன் கொண்டு வந்து தந்த பரிசுப் பொருள் (கையுறை) சூடத் தக்கதே அன்றி வாடத்தக்கது அல்லவே என்று தோழி புகழ்ந்து பேசுதல்.

    இவையாவும் நான்காம் வகைப்பாட்டின் செய்திப் பிரிவுகள் ஆகும்.

    • குறை நயப்பித்தலும், நயத்தலும்

    குறை நயப்பித்தல் - தலைவனின் மனக்குறையைத் தோழி ஏற்று உடன்படுதல்.

    நயத்தல் - முதலில் மறுத்த தலைவியும் பின்னர் உடன்படுதல்.

    தலைவனது மனக்குறையைத் தீர்க்க, தோழியிடம் முதலில் மறுத்த தலைவி பின்னர் உடன்படுகிறாள். இதுவே குறை நயப்பித்தலும், நயத்தலும் என்னும் ஐந்தாம் பிரிவாகும்.

    இப்பகுதி, தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல் முதலாகக் கையுறை ஏற்றல் ஈறாக ஆறு செய்திப் பிரிவுகளை உடையது. அதற்குரிய விளக்கங்கள் வருமாறு:

    • தலைவன் தனது காமவேட்கையால் அடையும் துயரத்தை தோழி, தலைவியிடம் கூறுதல்.
    • ‘தலைவன் மீண்டும் வந்தால் என்னால் மறுக்க இயலாது’ என்று தோழி கூறுதல்.
    • ‘தலைவன் இரந்து நிற்கவில்லை; நம்மிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து நிற்கிறான் - அவனது எண்ணம் வேறு’ என்று தோழி கூறுதல்.
    • தோழி, தலைவியைக் கோபித்துக் கொள்ளுதல்.
    • தலைவி தன் மனதுக்குள் தோழியைக் கோபித்துக் கொள்ளுதல்.
    • தோழி மூலமாகத் தலைவன் கொடுத்தனுப்பிய கையுறையைத் தலைவி ஏற்றுக்கொள்ளுதல்.

    • கூட்டல்-கூடல்-ஆயங்கூட்டல்-வேட்டல்

    தலைவனது மனக்குறையைத் தீர்க்குமாறு தோழி வேண்டுவாள்; அதனை முதலில் மறுத்த தலைவி பிறகு உடன்படுவாள். அவ்வாறு உடன்பட்டபின் நிகழும் பாங்கியிற் கூட்டத்தின் செயல்பாடுகளை ஒரு கூறாக்கிக் கூட்டல், கூடல், ஆயம் கூட்டல், வேட்டல் என வரிசைப் படுத்தியுள்ளார் நாற்கவிராசநம்பி.

    கூட்டல் : தோழி தலைவனிடம் தான் குறிப்பிட்ட குறியிடத்திற்குத் தலைவியை அழைத்துச் செல்லுதல்.

    கூடல் : குறிப்பிட்ட அந்த இடத்தில் தலைவனும் தலைவியும் கூடி மகிழ்தல்.

    ஆயங்கூட்டல்: கூடி மகிழ்ந்த பிறகு தலைவியை அழைத்து வரும் தோழி அவளைக் (தோழியர்) கூட்டத்தில் சேர்த்தல்.

    வேட்டல் : தலைவனைத் தங்கள் ஊருக்கு ஒரு முறை வந்து விருந்து உண்டு மகிழ வேண்டும் என்று விரும்பி அழைத்தல்.

    இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. தோழி வழியான கூட்டத்திற்குத் தலைவி ஒப்புக்கொண்ட பின் அடுத்தடுத்து நிகழக்கூடியவை. எனவே ஒன்றாக இணைத்துக் காட்டியுள்ளார் நாற்கவிராசநம்பி. இது பாங்கியிற் கூட்டத்தின் இறுதி வகைப்பாடு ஆகும். இது பதின்மூன்று செய்திப் பிரிவுகளை உடையது.

    • தலைவி கையுறை (பரிசுப்) பொருளை ஏற்றுக் கொண்டதைத் தோழி தலைவனிடம் கூறுதல்.
    • தலைவன் வந்து சந்திப்பதற்குரிய இடத்தைத் தோழி அறிவித்தல்.
    • அந்த இடத்திற்குத் தலைவியை அழைத்துச் செல்லுதல்.
    • குறியிடத்துத் தலைவியை விட்டுவிட்டுத் தோழி திரும்புதல்.
    • தலைவி, தலைவனுக்கு முன்பாகத் தோன்றுதல்.
    • இருவரும் கூடி மகிழ்தல்.
    • தலைவியைத் தலைவன் புகழ்தல்.
    • தலைவன் தோழியர் கூடியிருக்கும் இடத்திற்குச் செல்லுமாறு தலைவியை அனுப்பி வைத்தல்.
    • பின்னர் அங்கு வந்த தோழி ஏதும் அறியாதவள் போல் தன்னிடம் உள்ள கையுறைப் பொருளைத் தலைவியிடம் காட்டுதல்.
    • தோழி தம் பாங்கியர் கூட்டத்தில் தலைவியையும் கொண்டு சேர்த்தல்.
    • திரும்பி வந்த தோழி தலைவனைப் பார்த்து ‘இனி நீ தலைவியை மறவாது இருக்க வேண்டும்’ என்று ஓம்படைக்கிளவி கூறுதல்.
    • தலைவனைத் தங்கள் ஊருக்கு வந்து தங்கிச் செல்லுமாறு தோழி வேண்டுதல். (இது பகற்குறியை நீக்கி இரவுக்குறிக்கு வழிவகுப்பது ஆகும்)
    • தலைவியும் தோழியும் விருப்பத்துடன் வழங்கும் ஊன் உணவு சிறந்தது எனத் தலைவன் கூறுதல்.

    “வெண்ணெய் போன்ற மான் கறியும், பசிய தேனும் இளகிய பொன் போன்ற தினை அரிசிச் சோறும் எம்போன்ற விருந்தினர்க்கு இனிய அமுதம் ஆகும்” என்று தஞ்சைவாணன் கோவை நூலில் ஒரு தலைவன் விருந்து விரும்பிப் பாடுகிறான்.

    தன் மதிப்பீடு : வினாக்கள்-I
    1.
    பாங்கி மதி உடன்பாட்டின் மூன்று நிலைகள் யாவை?

    2.
    குறையுற உணர்தல் - விளக்குக.

    3.
    பாங்கியிற் கூட்டம் என்றால் என்ன?

    4.
    மடல் விலக்கு - விளக்குக.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 16:21:50(இந்திய நேரம்)