தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02122-2.2 உடன்போக்கு

  • 2.2 உடன்போக்கு

    தலைவன் தலைவியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதல் உடன்போக்கு எனப்படும். தலைவி தலைவனுடன் செல்லுதல் என்பதாகவும் இச்சொல்லுக்கு பொருள் கூறலாம். இருவகைப் பொருளும் ஒரு செயலையே உணர்த்தும்.

    உடன்போக்கு நிகழ்தல்

    தலைவன் தலைவியின் காதல் மலர்ந்து வளர்ந்த களவு வாழ்க்கை ஊரார்க்குத் தெரியவரும் முன்னரே தோழி அறத்தொடு நிற்பாள். திருமணம் முடிக்க வற்புறுத்துவாள். அதற்கு மாறாக, களவு வெளிப்பட்டுவிடும் சூழலில் பலரும் அறிந்து அலர் பேசும் நிலையில் உடன்போக்கு நிகழும்.

    அகத்திணை நெறியில் களவு வாழ்க்கை கற்பாக மாறுவதற்கு இரண்டு வழிகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. ஒன்று அறத்தொடு நிற்றல். மற்றொன்று உடன்போக்கு. இவற்றுள் ஒன்று நிகழ்ந்தால் மற்றொன்று நிகழாது. அறத்தொடு நின்ற பின் உடன்போக்கு நிகழாது. அவ்வாறே உடன்போக்கின் பின்னர் அறத்தொடு நிற்பதால் பயன் ஒன்றும் இல்லை. இவ்விரண்டில் ஒன்றுதான் களவு நாடகத்தின் நிறைவுக் காட்சியாக அமையும்.

    2.2.1 உடன்போக்கின் வகைகள்

    தலைவனும் தலைவியும் ஒன்று சேர்ந்து செல்லும் உடன்போக்கு என்பது எட்டு வகைகளை உடையது. அவையாவன :

    (1) போக்கு அறிவுறுத்தல்

    :
    தலைவியை உடன் அழைத்துச் செல்லுமாறு தோழி தலைவனுக்குச் சொல்லுதல்.

    (2) போக்கு உடன்படாமை

    :
    தோழி கூறியவாறு உடன் போக்காகச் செல்வதற்குத் தலைவனும், தலைவியும் மறுத்தல்.

    (3) போக்கு உடன்படுத்தல்

    :
    உடன்போக்காக அழைத்துச் செல்வதைத் தவிர, தலைவிக்கு வேறு பாதுகாப்பும் ஆதரவும் இல்லை என்று தலைவனிடம் கூறுதல். அவ்வாறே தலைவனுடன் செல்லுவது அன்றிக் கற்பு மேம்பாட்டை நிலை நிறுத்த வேறு வழியில்லை என்று தலைவியிடம் கூறுதல். அவ்வாறு இருவரிடமும் கூறி அவ்விருவரையும் உடன்போக்கிற்கு உடன்படச் செய்தல்.

    (4) போக்கு உடன்படுதல்

    :
    தோழியின் விளக்க உரைகளைக் கேட்ட தலைவனும் தலைவியும் உடன் போக்காகச் செல்வதற்கு ஒப்புக் கொள்ளுதல்.

    (5) போக்கல்

    :
    உடன் போக்காகச் செல்வதற்கு இருவரும் உடன்பட்ட பிறகு, தலைவி தலைவனுடன் செல்வதற்குத் தோழி வழியேற்படுத்திக் கொடுத்தல்.

    (6) விலக்கல்

    :
    உடன் போக்காகச் சென்ற தலைவியின் இயலாமை (தளர்ச்சி) கண்டோர் அவள் மீது அன்பு காட்டுதல்; உடன் போக்கை விலக்கிக் கொண்டு தங்கள் இருப்பிடத்தில் தங்கிச் செல்லுமாறு கூறுதல்.

    (7) புகழ்தல்

    :
    தலைவன் உடன்போக்கில் இடைவழியில் தலைவியைப் புகழ்ந்து கூறுதல்.

    (8) தேற்றல்

    :
    இடைவழியில் இயலாமை காரணமாகத் தளர்ச்சி அடைந்து தங்கிய தலைவியிடம் தன் ஊர் அருகில்தான் உள்ளது என்று கூறித் தலைவன் அவளைத் தேற்றல்.

    மேற்கண்ட எட்டும், உடன்போக்கின் வகைகளாக அமைகின்றன. உடன் போக்காகச் செல்லுமாறு தோழி வழங்கும் அறிவுரையில் தொடங்கி, தலைவன் அவனது ஊரை நெருங்கும் நேரம் வரையிலான செயல்பாடுகளின் வகைப்பாடுகளாக மேற்கண்ட எட்டும் அமைகின்றன.

    2.2.2 உடன்போக்கின் விரிவு

    தலைவனும் தலைவியும் ஒன்றாகச் சேர்ந்து புறப்பட்டுச் செல்லும் உடன்போக்கு என்னும் நிகழ்வு மேற்கண்டவாறு எட்டு வகைப்பாடுகளை உடையது. அவ்வாறு எட்டாக அமைந்த வகைப்பாடுகளையே மேலும் விளக்கமாகவும் விரிவாகவும் கிளவிகளாகப் பிரித்துரைக்கும் போது பதினெட்டாக விரிவடைகிறது. அப்பதினெட்டையும் மேற்கண்ட எட்டு வகைகளுக்குள் அடக்கிக் காட்டுவதும் உண்டு.

    போக்கு அறிவுறுத்தலின் விரிவு

    (1) பாங்கி தலைவனுக்கு உடன்போக்கு உணர்த்துதல்.

    (2) பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்துதல்.

    போக்கு உடன்படாமையின் விரிவு

    (1) தலைமகன் மறுத்தல்.

    (2) தலைவி நாணம் அழியுமே என்று இரங்கிக் கூறுதல்.

    போக்கு உடன்படுத்தலின் விரிவு

    (1) பாங்கி தலைவனை உடன்படுத்தல்.

    (2) கற்பின் மேம்பாட்டைப் பாங்கி தலைவிக்குக் கூறல்.

    போக்கு உடன்படுதலின் விரிவு

    (1) தலைவன் போக்கு உடன்படுதல்.

    (2) தலைவி ஒருப்பட்டு (ஒப்புக்கொண்டு) எழுதல்.

    (3) தோழி சுரத்து (வழி) இயல்பு உரைத்தவழி, தலைவி சொல்லுதல்.

    போக்கலின் விரிவு

    (1) பாங்கி கையடை (அன்புப் பரிசு) கொடுத்தல்.

    (2) பாங்கி வைகிருள் (மிகுந்த இருள் பொருந்திய இடை யாமம்) விடுத்தல்.

    (3) தலைமகளைத் தலைமகன் சுரத்து உய்த்தல். (சுரம்-பாலைவழி)

    விலக்கலின் விரிவு

    (1) தலைமகன் தலைமகள் அசைவு (வருத்தம்) அறிந்து இருத்தல்.

    (2) கண்டோர் காதலின் விலக்கல். (உடன்போக்கைத் தடுத்தல்)

    புகழ்தலின் விரிவு

    (1) உவந்து அலர் (மலர்) சூட்டி உள் மகிழ்ந்து உரைத்தல்.

    (2) கண்டோர் அயிர்த்தல். (அயிர்த்தல் - ஐயமுற்றுக் கூறுதல்)

    தேற்றலின் விரிவு

    (1) தன் பதி அணிமை சாற்றல்.

    (தலைவன், தன் ஊர் அருகில் உள்ளது எனல்)

    (2) தலைவன் தன் பதி அடைந்தமை சாற்றல்.

    குறிப்பு : எட்டு வகையாக அமையும் உடன்போக்கின் வகைகளையே மேலும் விளக்கமாகவும் படிப்படியாகவும் எடுத்துரைப்பதாக இவ்விரிவுக் கிளவிகள் அமைகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:56:16(இந்திய நேரம்)