தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Do2212-2.4 மீட்சி

  • 2.4 மீட்சி

    செவிலித்தாய் தலைவியைத் தேடிச் சென்று காணாமல் திரும்பி வருதல் மீட்சி எனப்படும். உடன்போக்காகச் சென்ற தலைவனும் தலைவியும் மீண்டு வருதலையும் மீட்சி என்று குறிப்பிடுவர். இவ்விரு நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமையும் மீட்சி என்பது நான்கு வகைகளை உடையது.

    தெளித்தல்

    உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக் காணாமல் திரும்பி வந்த செவிலித்தாய் நற்றாயிடம் ‘தலைவி நெடுந்தூரம் சென்று விட்டாள்’ என்று கூறி அவளைத் தெளிவித்தல் தெளித்தல் எனப்படும். அவ்வாறே தலைவன் மீண்டு வரும்போது தலைவியினது ஊர் நெருங்கிவிட்டதனைக் கூறுதலும், தெளித்தல் ஆகும்.

    மகிழ்ச்சி

    தலைவி தலைவனுடன் திரும்பி வருவதை, அவளுக்கு முன்னே செல்லும் சிலர் தோழியிடம் சென்று கூறுவர். அது கேட்டு, தோழி மகிழ்வாள்; உடனே தோழி சென்று நற்றாயிடம் கூறுவாள். அவளும் அதைக் கேட்டு மகிழ்வாள். இவ்விரண்டும் மகிழ்ச்சி என்னும் வகையின் விளக்கங்கள் ஆகும்.

    வினாதல்

    தலைவி மீண்டு வருவதை அறிந்த நற்றாய் தன் மகளைத் தலைவன் நம் மனைக்குக் கொண்டு வருவானா அல்லது தன் நகர்க்கே கொண்டு செல்வானா என்று, வெறியாட்டு நிகழ்த்தும் வேலனிடம் கேட்பது வினாதல் எனப்படும்.

    செப்பல்

    தலைவியின் வருகையை அவளுக்கு முன் சென்றோர் தோழியிடம் கூறுதல் செப்பல் எனப்படும்.

    2.4.1 மீட்சியின் விரிவு

    மேலே நான்கு வகைப்பட்டதாக உரைக்கப்பட்ட மீட்சி என்பது ஆறு வகைப்பட்ட விரிவுக் கிளவிகளைக் கொண்டதாகும். அவையாவன :

    (1) தலைவி நெடுந்தூரம் சென்றதைச் செவிலி நற்றாயிடம் கூறுதல்.

    (2) திரும்பி வரும்போது தலைவன் தாம் தலைவியின் ஊரை நெருங்கி விட்டதைத் தலைவிக்கு கூறுதல்.

    (3) தனது வருகையைத் தோழிக்கு அறிவிக்குமாறு தனக்கு முன் செல்கின்றவரிடம் தலைவி கூறுதல்.

    (4) முன் சென்றோர் தோழிக்குத் தலைவியின் வருகையைத் தெரிவித்தல்.

    (5) தலைவியின் வருகையைத் தெரிந்துகொண்ட தோழி அதனை நற்றாய்க்குக் கூறுதல்.

    (6) தலைவியின் வருகையை உணர்ந்த நற்றாய் வேலனைப் பார்த்துத் தலைவன் தன் மகளுடன் இங்கு வருவானோ தன் நகர்க்கே செல்வானோ என்று வினவுதல்.

    இவை யாவும் மீட்சியின் விரிவுக் கிளவிகளாக அமைகின்றன.

    ஒரு வகையில் மீட்சியின் நான்கு வகைகளுக்கான விளக்கவுரைகளாகவும் இவற்றைக் கொள்ளலாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:56:23(இந்திய நேரம்)