தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D0212331-3.2 இல்வாழ்க்கை

  • 3.2 இல்வாழ்க்கை

    தலைவனும் தலைவியும் இல்லத்தின்கண் தங்கி வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் சிறப்பினைக் கூறுதல் இல்வாழ்க்கை எனப்படும். இது நால்வரது மகிழ்ச்சியை ஒன்று சேர்த்ததாக அமையும்.

    “தலைவன் மகிழ்ச்சி, தலைவி மகிழ்ச்சி, தோழி மகிழ்ச்சி, செவிலி (வளர்ப்புத் தாய்) மகிழ்ச்சி என்று இல்வாழ்க்கை நான்கு கூறுகளை உடையது” என்பது நம்பியகப் பொருள் இலக்கணமாகும்.

    3.2.1 தலைவன் மகிழ்ச்சி

    இதனைக் கிழவோன் மகிழ்ச்சி என்று இலக்கணம் குறிப்பிடும். தலைமகன் தலைவிக்கு முன்னால் தோழியைப் புகழ்ந்துரைப்பது இதற்குரிய கிளவியாக அமையும்.

    “தலைவியே ! உன் தோழி என்னை வற்புறுத்தி வரைவு மேற்கொள்ளச் செய்த அன்பு மிகுதியால் அன்றோ நமக்கு இத்தகைய இல்லற வாழ்க்கை அமைந்தது” என்று தலைவன் பாங்கியைப் புகழ்வதாக அமையும் தஞ்சைவாணன் கோவைப் பாடல் கருத்து இக்கிளவிக்கு உரிய உதாரணமாகும்.

    நின் துணைவி என்மேல் எடுத்த இயல்பின் அன்றோ பெற்றது

    - (செய்யுள்-267)

    என்பது அப்பாடலில் இடம் பெறும் தலைவன் கூற்றாகும்.

    3.2.2 தலைவி மகிழ்ச்சி

    இது கிழத்தி மகிழ்ச்சி என்று நம்பி அகப்பொருளில் உரைக்கப்பட்டுள்ளது. தலைவி தனது வருத்தம் நீங்கி மகிழ்ந்து வாழும் வாழ்க்கையைப் பற்றித் தோழியிடம் கூறுவது கிழத்தி மகிழ்ச்சியாகும். இதனைப் பெருமகள் உரைத்தல் என்னும் கிளவியாக நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுள்ளார்.

    “தோழியே ! தலைவன் எனக்குக் கொடுத்த அசோக மரத்தின் தழைகளால் ஆகிய கையுறைப் பொருளையே தெப்பமாகக் கொண்டு நான் துன்பமாகிய வெள்ளத்தை நீந்திக் கரையேறினேன்” என்று தஞ்சைவாணன் கோவைத் தலைவி கூறுவது குறிப்பிடத்தக்கது.

    3.2.3 தோழி மகிழ்ச்சி

    இது தலைமக்கள் மேற்கொண்ட இல்லற வாழ்க்கையின் போது தோழிக்கு ஏற்படும் மகிழ்ச்சியாகும். இதனைப் பாங்கி மகிழ்ச்சி என்று நம்பி அகப்பொருள் குறிப்பிடும். இது ஐந்து வகைப்பட்ட விரிவுக் கிளவிகளை உடையது. அவையாவன :-

    (1) தலைவனைப் பாங்கி வாழ்த்துதல்.

    (2) வரைவு என்னும் திருமணம் நடக்கும் நாள் வரையில் எவ்வாறு பிரிவுத் துன்பத்தைத் தாங்கிக்கொண்டு இருந்தாய் என்று தலைவியைக் கேட்டல்.

    (3) வரைவு என்னும் திருமணம் நடக்கும் நாள் வரையில் எவ்வாறு தாங்கிகொண்டு இருந்தாய் என்று தலைவனைக் கேட்டல்.

    (4) தலைமக்கள் இல்லறம் நடத்தும் இடத்திற்கு, செவிலித் தாய் வர, தோழி அவளிடம் தலைவன் தலைவியிடம் அன்பு காட்டும் சிறப்பைக் கூறுதல்.

    (5) தலைமக்கள் இல்லறம் நடத்தும் இடத்திற்கு வந்த செவிலித் தாயிடம் தலைவன் தலைவி மேற்கொள்ளும் இல்வாழ்க்கை முறை நன்று என்று தோழி கூறுதல்.

    இவ்வைந்தும், தான் விரும்பி உடனிருந்து அமைத்துக் கொடுத்த இல்வாழ்க்கையைத் தலைவனும் தலைவியும் சிறப்புடன் மேற்கொள்வதைக் கண்டு தோழி மகிழ்ந்து கூறும் செய்திப் பிரிவுகளாகும்.

    3.2.4 செவிலி மகிழ்ச்சி

    செவிலி என்னும் வளர்ப்புத் தாய் தன் வளர்ப்பு மகள் இல்லறம் நடத்தும் மணமனைக்குச் சென்று திரும்புவாள். அப்போது தலைவியும் தலைவனும் நடத்தும் இல்லறச் சிறப்பைக் கண்டு மகிழ்வாள். பின்னர் அங்கிருந்து மீண்டு வந்து தான் கண்ட மனை வாழ்க்கைச் சிறப்புகளை நற்றாயிடம் சொல்லிச் சொல்லி மகிழ்வாள். இது மூன்று பிரிவுகளாக எடுத்துக் காட்டப்படுகிறது. அவையாவன :-

    (1) மணமனைக்குச் சென்று வந்த செவிலி தலைவியின் கற்பு வாழ்க்கைச் சிறப்பை நற்றாய்க்கு உணர்த்துதல்.

    வடக்கிருந்தாள் மடப்பாவை அருந்ததியே என்று அமையும் தஞ்சைவாணன் கோவைப் பாடல் தொடர், செவிலி தலைவியின் கற்புச் சிறப்பிற்கு அருந்ததியை உதாரணம் காட்டும் பெருமைக்குரியது.

    (2) மணமனைக்குச் சென்று வந்த செவிலி தலைவியின் இனிய மனைவாழ்க்கைத் தன்மையை நற்றாய்க்கு உணர்த்துதல்.

    தான் சமைத்த நல்லுணவை இனிது எனக் கணவன் விரும்பி உண்டதால் தலைவி நுட்பமாக மகிழ்ந்தாள் என்னும் சங்க இலக்கிய மேற்கோள் (குறுந்தொகை - 167) தலைவியின் நல்ல மனை வாழ்க்கைச் சிறப்பைக் காட்டுவது ஆகும்.

    (3) மணமனைக்குச் சென்று வந்த செவிலி தலைமக்களின் காதல் சிறப்பை நற்றாய்க்கு உணர்த்துதல்.

    ‘போருக்குச் சென்றாலும் ஒரு நாள் கூடத் தலைவனது தேர் பாசறையில் தங்காது’ என்று அமையும் தஞ்சைவாணன் கோவை மேற்கோள் பாடல் கருத்து இருவரும் இல்லற வாழ்வில் காதல் மிகுந்து மகிழ்ந்து வாழ்கின்றனர் என்பதைக் குறிப்பாக உணர்த்தி நிற்பதாகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:57:35(இந்திய நேரம்)