தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.4 எஞ்சிய ஐவகைப் பிரிவுகள்

  • 3.4 எஞ்சிய ஐவகைப் பிரிவுகள்

    கற்பியலில் வகுத்துரைக்கப்பட்ட பிரிவுகள் ஆறு வகைப்படும். அவற்றுள் பரத்தையிற் பிரிவு என்பது பல்வேறு கிளவித் தொகைகளை உடையது. எனவே அது தனியொரு செய்திப்பிரிவாக இப்பாடத்தில் இடம் பெற்றது.

    எஞ்சிய ஐவகைப் பிரிவுகளும் ஒரே வகையான கிளவித் தொகை அமைப்பினை உடையன. அப்பிரிவுகளாவன :

    1.

    ஓதல் பிரிவு
    :
    தலைவன், கல்வி பயிலுதல் காரணமாகப் பிரியும் பிரிவு.

    2.

    காவல் பிரிவு
    :
    தலைவன், நாடு காத்தல் பொருட்டுப் பிரியும் பிரிவு.

    3.

    தூதிற் பிரிவு
    :
    அரசர் இருவர் தமக்குள் மாறுபட்டுப் போர் மேற்கொண்ட போது, அதனைத் தடுத்து இருவர்க்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு.

    4.

    துணைவயின் பிரிவு
    :
    தன் நண்பனாகிய அரசனுக்குப் பகை வேந்தர்களால் இடையூறு நேர்ந்தவழி அதனை நீக்கும் பொருட்டுத் தலைவன் துணையாகச் செல்லுதல்; அதற்காகப் பிரிதல்.

    5.

    பொருள்வயின் பிரிவு
    :
    தலைவன் தனது இல்லற வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரிதல்.

    3.4.1 பொதுவான கிளவிகள்

    ஓதல் பிரிவு முதலான எஞ்சிய ஐவகைப் பிரிவுகளும் தலைவனால் மேற்கொள்ளப்படும். அத்தகு சூழ்நிலைகளில் நிகழும் கிளவிகள் பொதுவானவை. அவை ஒன்பது வகைப்படும். அவையாவன :

    1.

    பிரிவு அறிவுறுத்தல்
    :
    தலைவன் ஒரு காரணம் கருதிப் பிரிந்து செல்ல இருப்பதைத் தோழி தலைவிக்கு உணர்த்துதல்.

    2.

    பிரிவு உடன்படாமை
    :
    அவ்வாறு தலைவன் பிரிய இருப்பதைத் தலைவி ஒப்புக்கொள்ளாமை.

    3.

    பிரிவு உடன்படுத்தல்
    :
    ‘சூழ்நிலை கருதித் தலைவன் பிரிந்து செல்லுதல் தவிர்க்க முடியாதது’ என்று கூறும் தோழி, தலைவியை அப்பிரிவுக்கு உடன்படச் செய்தல்.

    4.

    பிரிவு உடன்படுதல்
    :
    தொடக்கத்தில் பிரிவுக்கு உடன்படாத தலைவி பின்னர் உரிய காரணத்தைத் தோழியின் மூலமாக உணர்ந்து தலைவனின் பிரிவுக்கு உடன்படுதல்.

    5.

    பிரிவுழிக் கலங்கல்
    :
    தலைவன் பிரிந்து சென்ற பிறகு அதற்காகத் தலைவி வருந்துதல்.

    6.

    வன்புறை
    :
    அவ்வாறு பிரிவுக்கு வருந்தும் தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுதல்.

    7.

    வன்பொறை
    :
    தோழியின் ஆறுதல் மொழிகளைக் கேட்ட தலைவி, தலைவனின் பிரிவை வலிந்து பொறுத்துக் கொள்ளுதல்.

    8.

    வருவழிக் கலங்கல்
    :

    தலைவியைப் பிரிந்து சென்று செயலாற்றிய தலைவன் பணிமுடிந்து மீண்டு வரும் வழியில் தலைவியின் நிலையை எண்ணி வருந்துதல்.

    9.

    வந்துழி மகிழ்ச்சி
    :

    பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வந்த போது தலைவியும், தோழியும் மகிழ்தல்

    இவையாவும் ஓதற் பிரிவு முதலான ஐவகைப் பிரிவுகளுக்கும் உரிய பொதுவான கிளவிகள் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 04-11-2017 18:42:29(இந்திய நேரம்)