Primary tabs
-
1.0 பாட முன்னுரை
உலக மொழிகள் அனைத்திலும் சொல் பாகுபாட்டில் பெயர்ச்சொல்லே முதலாவதாகக் கூறப்படுகிறது. பெயர்ச்சொல் இலக்கணம் கூற வந்த திரேக்ஸ் என்பவர் ‘பெயர் வேற்றுமை உருபை ஏற்கும்’ என்றும், ‘ஒரு பொருளைக் குறிக்கும்’ என்றும் கூறுவார் (A Noun is a part of speech with cases, denoting a thing). ஒரு பொருளை நேரடியாகக் குறிக்கும் வகையில் அமைந்த பெயர்கள் மிகப் பலவாக எல்லா மொழிகளிலும் உள்ளன. ஆனால் அத்தகைய பெயர்களுக்குப் பதிலாக நின்று அப்பொருளை உணர்த்த வழங்கும் பெயர்கள் மிகச் சிலவாகவே எந்த ஒரு மொழியிலும் உள்ளன. இத்தகைய பெயர்களையே மொழிநூலார் (Linguists) பதிலிடு பெயர்கள் (Pronouns) என்று குறிப்பிடுகின்றனர்.
தமிழில் மூவிடப் பெயர்கள், சுட்டுப் பெயர்கள், வினாப் பெயர்கள் ஆகிய மூன்றும் பதிலிடு பெயர்கள் என்று மொழியியலாரால் கூறப்படுகின்றன. இம்மூவகைப் பெயர்களையும் பழந்தமிழ் இலக்கண நூலாசிரியராகிய தொல்காப்பியர் தனித் தொகுதியாக்கிக் கூறியுள்ளமையைத் தொல்காப்பியத்தில் காணலாம்.
பதிலிடு பெயர்கள் யாவும் வடிவில் சிறியனவாய் உள்ளன; மக்கள் நாவில் நாளும் நடமாடும் இயல்புடையனவாய் உள்ளன; கால வெள்ளத்தைக் கடந்து நிற்கும் நிலைபேறு உடையனவாய் உள்ளன. பொதுவாகப் பதிலிடு பெயர்கள் மாற்றத்திற்கு உள்ளாவதில்லை என்பர். எனினும் நீண்ட கால வரலாற்றை உடைய தமிழ்மொழியில் பதிலிடு பெயர்கள் காலந்தோறும் சிறுசிறு மாற்றங்களைக் கண்டும் சில புதிய வடிவங்களைப் பெற்றும் அதனால் சில பழைய வடிவங்களை இழந்தும் வளர்ந்து வந்திருப்பதைக் காண்கிறோம். பதிலிடு பெயர்களின் இத்தகைய வளர்ச்சியினையும் மாற்றங்களையும் பற்றிய செய்திகள் வரலாற்று நெறிமுறையில் இப்பாடத்தில் தொகுத்துத் தரப்படுகின்றன.