தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-இடைக்காலத்தில் துணைவினைகள்

  • 5.3 ஒலி மாற்றத்தின் சுற்றுச் சூழ்நிலை

        மேலே காட்டிய விதிகளை ஒப்பிட்டு நோக்கின் சில உண்மைகள் தெளிவாகும். சான்றாக, ழகர ளகர மாற்றம் எவ்விதச் சுற்றுச் சூழ் நிலையையும் அடிப்படையாகக் கொண்டது அன்று, பழந்தமிழில் அல்லது தற்கால எழுத்துத்தமிழில் ழகரம் எங்கெல்லாம் வருமோ, அங்கெல்லாம் பேச்சுத் தமிழில் (சில கிளை மொழிகளில்) ளகரமே வரக் காண்கிறோம். ழகரம் ளகரமாக மாறுவதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லை. அதாவது இன்ன சூழ்நிலையில்தான் மாறும்; வேறு சூழ்நிலையில் மாறாது என்ற நிபந்தனை இல்லை. எல்லா இடங்களிலும், எல்லாச் சூழலிலும் மாறிவரக் காண்கிறோம். இத்தகைய ஒலி மாற்றத்தை நிபந்தனையில்லா மாற்றம் (Unconditional Change) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். மேலே சில அடிப்படை விதிகளைக்     கொண்டு காட்டப்பட்ட சான்றுகள் யாவும் நிபந்தனையில்லா மாற்றங்களாகும்.

        ஆனால் ஒரு குறிப்பிட்ட சூழலின் அடிப்படையில் மட்டும் மாறிவரும் ஒலி மாற்றத்தை நிபந்தனை மாற்றம் (Conditional Change) என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இத்தகைய ஒலி மாற்றத்தைச் சான்று கொண்டு விளக்கிக் காண்போம்.

        தமிழில் யகர ஒற்றுக்குப்(மெய்க்கு) பின்னாலும், இ, ஐ ஆகிய உயிர்களுக்குப் பின்னாலும் வரும் இரட்டைத் தகர ஒற்றுகள், சகர ஒற்றுகளாக மாறுகின்றன.

        சான்று:

        யகர ஒற்றுக்குப் பின்னால்:

    காய்த்தது
    > காய்ச்சது
    வாய்த்தது
    > வாய்ச்சது

         இகர உயிருக்குப் பின்னால்:

    சிரித்தான்
    > சிரிச்சான்
    அடித்தான்
    > அடிச்சான்

        ஐகார உயிருக்குப் பின்னால்:

    அடைத்தான்
    > அடைச்சான்
    படைத்தான்
    > படைச்சான்

        இவ்வாறு இரட்டைத் தகரம், ‘ய், இ, ஐ’ என்னும் மூன்று எழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது மட்டுமே, சகரமாக மாறுகிறது. மற்ற எழுத்துகளுக்குப் பின்னால் வரும்போது மாறுவது இல்லை. ‘காத்தான், எடுத்தான், பூத்தது, ஒத்தது’ என்பன போன்ற சொற்களில் ‘அ, உ, ஊ, ஒ’ என்னும் நான்கு உயிர் எழுத்துகளுக்குப் பின்னால் வரும் இரட்டைத் தகரம், ‘காச்சான், எடுச்சான், பூச்சது, ஒச்சது’ எனச் சகரமாக மாறுவது இல்லை. யகரமோ, இகரமோ, ஐகாரமோ இருக்கும்போதுதான் இந்த ஒலிமாற்றம் நடைபெறுகிறது. எனவே இதனை ‘நிபந்தனை மாற்றம்’ என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர். இத்தகைய ஒலிமாற்றத்தை,

        என்ற விதியில் அடக்கிக் கூறலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:34:28(இந்திய நேரம்)