தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கதைக்கருக்கள்

  • 2.3 கதைக்கருக்கள்

    தன் மனத்தைக் கதை பொதி கருவூலமாக எவர் ஒருவர் ஆக்கிக் கொள்கிறாரோ அவரே எழுத்தாண்மை கொண்டவராகத் திகழ்கிறார். நாவலாசிரியர் தனக்குக் கிடைத்த கருவை விளக்கிக் காட்டவே கதைப்பின்னல், பாத்திரங்கள், பின்னணி என்று பலவற்றைக் கண்டு அமைத்துக் கொள்கிறார்.

    இராஜம் கிருஷ்ணனின் எழுத்துகளில் கையாண்டுள்ள நுவல் பொருள்கள் பலவற்றுள்ளும் முதன்மையானது சமகால மகளிரின் வாழ்க்கைச் சிக்கல்களே எனலாம். அகில உலகப் பெண்கள் ஆண்டான 1975-ற்குப் பிறகு இவரது நாவல்களில் மகளிரின் வாழ்க்கைச் சிக்கல்கள் பெண்ணுரிமை என்னும் கருத்துப் படிவம் மிகத் தீவிரமாகவும், உணர்ச்சி முனைப்போடும் வெளிப்படுகிறது. உண்மைகளைக் கண்டும், உணர்வுகளைக் கொண்டும் எழுதிய இவர் இன்றைய பொருளியல், சமூகவியல், கலையியல், அறிவியல், வாழ்க்கை நிலை என்ன என்று கண்டு சீரான வாழ்வுக்கு உரிய வேர் எது என்று சுட்டிக்காட்டுகிறார்.

    இராஜம் கிருஷ்ணன் நிகழ்காலப் பிரச்சினைகளைக் கதைக் கருவாகக் கொண்டு நாவல் படைக்கும் சமூக அக்கறை கொண்ட சிறந்த நாவலாசிரியர்.

    2.3.1 வர்க்கப் போராட்டமும் பாலியலும்

    சேற்றில் மனிதர்கள் என்ற புதினத்தில் உழவர் வாழ்வின் உழைப்பும், அவர்களின் நிலையும் எடுத்துக் காட்டப்படுகிறது. சாதீய வர்க்கப் பாகுபாட்டின் மூலம் மேல்வர்க்கம், அடித்தள வர்க்கத்தை அமுக்கி அடக்குவதும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்நாவலில் இடம் பெறும் காந்திமதி, அந்த வாழ்வின் முறைகளோடு ஒத்துப் போகாது எதிர்த்து நிற்கிறார்.

    கரிப்பு மணிகள் புதினத்திலும் இதே வர்க்கப் போராட்டம் பின்வருமாறு சித்திரிக்கப்படுகிறது.

    “பாத்திக்காட்டுல இளவயிசா ஒரு புள்ள வந்திட்டா அந்தக் காலத்துல யாரும் என்னேனும் செய்யலான்னு இருந்தது” என்று செங்கமலத்தாச்சி கூறுவதிலிருந்து உப்பளப் பெண் தொழிலாளர்களின் அவலநிலையை அறிய முடிகிறது. கூலி வேலை பார்க்கும் பெண்கள் மீது கங்காணிகளும், கான்ட்ராக்டர்களும் செய்யும் கூலிக்குறைப்பு, அடாவடித்தனங்கள் பெண்களைப் போகப் பொருளாக எண்ணி அவர்களைச் சீண்டும் இழிசெயல்கள் நிகழ்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு காண இராமசாமியின் துணையுடன் சங்கத்தில் சேர முடிவெடுக்கும் செங்கமலத்தாச்சி படைப்பு மிகவும் சிறப்பிற்குரியது. தொழிற்சங்கப் போராட்டம் என்பது, ஆண்களோடு பெண்களும் பங்கெடுக்கும்போது தான் முழுமையாக வெற்றியடையும் என்பதும் இந்நாவலில் சுட்டப்படுகிறது. இராஜம் கிருஷ்ணன் புதினங்களில் பெண்களின் மீதான ஒடுக்கு முறைகளையும், பாலியல் வன்முறைகளையும், பெண்களே உணர்ந்து அதிலிருந்து மீள்தல் தனிச்சிறப்பிற்குரியது.

    2.3.2 பால்வேறுபாடும் பெண்சிசுக் கொலையும்

    வரலாற்றில் ஆண் உயர் மதிப்பும், வரவேற்பும் பெற்றிருப்பது போல, பெண் மதிப்பும் உயர்வும் பெற்றிருக்கும் வாய்ப்பு குறைவாகவே இருந்து வருகிறது. வறுமைக்கோட்டில் வாழும் பெண்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கல்கள் ஏற்படுவதால் அவற்றை எதிர்கொள்ள இயலாத சூழலில் பெண் குழந்தைகள் பலி கொள்ளப்படுகிறார்கள். பால்வேறுபாடு காட்டி பெண்ணினம் அழிக்கப்படுகிறது.

    ஆண்களோடு பெண்களும் என்ற நாவலில் இடம்பெறும் சாரு பின்வருமாறு பேசுகிறாள்.

    “பெத்த தாய்மாருங்க பெண் குழந்தைங்கன்னா கண்ணைத் திறக்காம, எருக்கம்பால ஊத்தியோ நெல்லுமணியப் போட்டோ கொலை பண்ணுறாங்க என்னங்க கேவலம்? இதைத் தடுத்து வேரோட களைஞ்சு போடலன்னா, நாம் இந்த நூற்றாண்டில் இருக்கிறதாச் சொல்லிக்கறதில் அர்த்தமே இல்ல”

    என்று பெண்சிசுக் கொலையை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இராஜம் கிருஷ்ணன், இதே பிரச்சினையை மண்ணகத்துப் பூந்துளிகள் என்ற நாவலிலும் விரிவாகப் பேசுகிறார். தாய்ப்பாலுண்டு தவழ்ந்து வளர வேண்டிய பெண் சிசுக்களை, எருக்கம்பாலிட்டு, குழியில் போடும் அவலம் சமுதாயத்தில் நடப்பதை மண்ணகத்துப் பூந்துளிகள் என்ற புதினம் சித்திரிக்கிறது. பெண் குழந்தை சுமையாக, விரும்பத்தகாததாக, செலவாக, கவலையுடையதாக, எதிர் காலத்தில் அப்பெண்ணைத் திருமணம் செய்து வைப்பது வரை பாதுகாக்கக் கூடியதாக, மிகுந்த பொறுப்புகளுடன் வளர்க்க வேண்டிய நிலை இருப்பதால் பால்வேறுபாடு காட்டி, பெண் பிறவி தவிர்க்கப்படுகிறது என்ற சமூக உண்மையையும் மறைமுகமாக ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    இராஜம் கிருஷ்ணனின் முதல் நாவல் எது? எந்த ஆண்டு எழுதப்பட்டது?

    2.

    இராஜம் கிருஷ்ணன் எழுதிய இரண்டு வட்டார நாவல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

    3.

    ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ என்ற நாவலில் பேசப்படும் பிரச்சினை என்ன?

    4.

    இராஜம் கிருஷ்ணனின் எந்த நாவலுக்குச் சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது?

    5.

    இராஜம் கிருஷ்ணனின் எந்தக் கதை உலக மொழிகளின் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 16:49:43(இந்திய நேரம்)