தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3:3-தலைவன் பெருமைகள்

 • 3.3 தலைவன் பெருமைகள்

  தூது நூல்களில் தூது செல்லும் பொருளின் பெருமைகள் கூறப்படுவது போலத் தூது பெறும் தலைவன் பெருமைகளும் கூறப்படும். தமிழ்விடு தூது நூலில் தூது பெறும் தலைவன் ஆகிய மதுரைச் சோம சுந்தரக் கடவுளின் பெருமைகளைத் தலைவி கூறுகின்றாள். அவை பற்றி இனிக் காண்போம்.

  3.3.1 இறைவன் பெருமை

  திரு ஆலவாய் என்ற இடத்தில் இருக்கும் செல்வர்; தேவி ஆகிய உமை அம்மையின் ஓர் பாகத்தில் தழைத்து மகிழ்ந்தவர்; எட்டுத் தெய்வ யானைகள் சுமக்கும் விமானத்தைக் கொண்ட கோயிலில் எழுந்தருளியுள்ளவர்; இந்திரன் வந்து வணங்கும்படி கடம்ப வனத்தில் வாழும் இறைவன் என இறைவன் பெருமைகள் கூறப்படுகின்றன. இங்கு மதுரையின் வேறு பெயர்களான ஆலவாய், கடம்ப வனம் என்பன சுட்டப்படக் காணலாம்.

  3.3.2 நாயனார்கள் பெருமை

  இறைவன் பெருமைகளைத் தொடர்ந்து சொல்ல முற்படுகிறாள் தலைவி. இப்பகுதியில் பெரியபுராணம் குறிப்பிடும் சில அடியார்களின் தொண்டு கூறப்படுகிறது.

  பூசலார் நாயனார் மனத்தில் கோயில் அமைத்தார். கண்ணப்பர் உண்டு உமிழ்ந்து திருமஞ்சன நீராட்டினார். திருக்குறிப்புத் தொண்டர் பரிவட்டம் அளித்தார். மானக் கஞ்சாற நாயனார் பஞ்சவடி (அடியார்கள் அணிவது) சாத்தினார். மூர்த்தி நாயனார் தன் கை எலும்பைச் சந்தனமாக அரைத்தார். சிறுத்தொண்டர் தம் பிள்ளையைக் கொன்று கறி சமைத்து அளித்தார். அரிவாள் தாய நாயனார் மாவடு அளித்தார் என நாயன்மார்கள் இறைவனிடம் கொண்ட எல்லை இல்லாத அன்பின் காரணமாகச் செய்த செயல்கள் கூறப்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:33:12(இந்திய நேரம்)