தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4:2-குறவஞ்சி - செய்திகள்

  • 4.2 குறவஞ்சி - செய்திகள்

    இனி, சரபேந்திர பூபாலக் குறவஞ்சியில் காணப்படும் செய்திகளைச் சுருக்கமாகக் காண்போம்.

    4.2.1 சரபேந்திரர் உலா வருதல்

    குறவஞ்சி நூல்களில் இடம்பெறும் இன்றியமையாத பகுதிகளில் ஒன்று பாட்டுடைத் தலைவன் உலா வருதலைக் கூறும் பகுதி ஆகும். இப்பகுதியில் இடம்பெறும் செய்திகளைக் காண்போம்.

    • தஞ்சாவூரின் சிறப்புகள்

    கட்டியக்காரன் சரபோஜி மன்னன் உலா வருவதை அறிவிக்கின்றான். அப்போது, சரபோஜி மன்னனின் தலைநகர் ஆகிய தஞ்சாவூரை வருணிக்கின்றான். தென் பாரத நாட்டில் உள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் ஒரு பகுதி சோழ நாடு. சோழ நாட்டில் அமைந்த ஊர் தஞ்சாவூர். இந்த ஊர் செல்வச் செழிப்பில் அளகாபுரி நகரை ஒத்துள்ளது. அளகாபுரி என்பது செல்வத்தின் அதிபதி ஆகிய குபேரனின் நகரம் ஆகும். மக்களின் மனம் மகிழ்ச்சி அடையும் நிலையில் அது தேவர் உலகத்தை ஒத்துள்ளது. தஞ்சாவூரில் வானம் வரை உயர்ந்த மதில்கள் உள்ளன. பாதாளம் வரையிலும் செல்லும் அகழிகள் உள்ளன. மாட மாளிகைகள் பல காணப்படுகின்றன. யானைகள், குதிரைகள் நிற்கும் இடங்கள் உள்ளன. இத்தகைய சிறப்புகள் நிறைந்த தஞ்சாவூரின் தெருக்களில் தலைவன் உலா வருகின்றான் எனக் காட்டப்படுகின்றது.

    • உலா வரும் தலைவன்

    சிறப்புகள் நிறைந்த தஞ்சாவூரில் வளம் நிறைந்த போசல குலத்தில் வந்த துளசி மன்னனின் மகன் ஆகிய சரபோஜி என்ற பெயர் உடைய மன்னன் உலா வருகின்றான் என்கின்றார்.

    விளங்குஎழில் தஞ்சை வியன்பதி இடத்து
    வளம்கொள்போ சலகுல வரோதயன் ஆகிய
    மருவுசீர்த் துளசி மன்னவன் புத்திரன்
    சரபோஜி என்னத் தகும்இயற் பெயரினோன்

    (வரிகள் 19-22)

    (வியன்பதி = அகன்ற ஊர்; வரோதயன் = வரத்தினால் பிறந்தவன்; சீர் = சிறப்பு; என்னத்தகும் = என்று கூறத்தக்க)

    • மன்னனின் சிறப்புகள்

    உலா வரும் தலைவன் ஆகிய சரபோஜி மன்னன் ஆகமம், கலைகள், மறைகள், புராணங்கள் ஆகியவற்றைக் கற்றவன். கொடை கொடுப்பதில் வல்லவன். மன்மதனைப் போன்ற அழகு உடையவன். உயிர்களிடத்து இரக்கம் உள்ளவன். பிற மன்னர்கள் வந்து வணங்கத் தக்க பெருமை உடையவன். காசி நகருக்குச் சென்று அங்குள்ள இறைவன் ஆகிய விஸ்வநாதனை வணங்கியவன் என்று போற்றப்படுகின்றான்.

    • உலாவில் உடன் வருவோர்

    சரபோஜி மன்னன் உடன் வருவோர் பற்றிய செய்திகளும் இடம் பெறுகின்றன. மன்னர்கள், அமைச்சர்கள், படைத்தலைவர்கள், தேர்கள், யானைகள், குதிரைகள் சூழ்ந்து வர உலா வருகின்றான். உலாவில் பல்வேறு இசைக் கருவிகள் முழங்குகின்றன. பெண்கள் நடனம் ஆடுகின்றனர்.

    • உலா வரும் வாகனம்

    பாட்டுடைத் தலைவன் மன்னன் ஆகையால் யானை மீது ஏறி உலா வருவதாகக் காட்டப்படுகிறது.

    கண்கொடு கண்டோர் களிக்கப்
    பண்புஉறு யானைமேல் பவனி வந்தனனே (51-52)

    (கொடு = கொண்டு; களிக்க = மகிழ; பவனி = உலா)

    4.2.2 மதனவல்லி வருதல்

    இவ்வாறு உலா வரும் தலைவன் ஆகிய சரபோஜி மன்னனைக் காண மதனவல்லி என்ற பெண் வருவதாகக் காட்டப்படுகிறது.

    • மதனவல்லியின் அழகு

    உலாவைக் காணவரும் மதனவல்லியின் அழகு ஆசிரியரால் வருணிக்கப்படுகிறது.

    வண்டு வெட்கப்பட்டு ஓடும்படி செய்யும் கூந்தல்; காந்தள் மலர்களை மலை ஏற வைத்த கைகள்; பொன்னைப் பணி செய்யச் செய்யும் உடம்பு; முலை ஆகிய பம்பரம்; துடியின் சாயலை ஒத்த இடை; தாமரையைத் தோற்கச் செய்யும் முகம்; இளம் பிறைச் சந்திரனைக் களங்கம் உறச் செய்யும் நகம்; பார்ப்பவர் மனத்தைத் தன் சுழிக்குள் அழுத்தும் தொப்பூழ்; கரும்பைச் சாறு பிழியும் தோள்கள்; குமிழம் பூவைக் காட்டில் ஒதுக்கிய மூக்கு; அமிழ்தத்தை வானத்தில் ஒளிக்க வைத்த சொற்கள்; எமனைத் தருமன் என்று கூறும் படியாக அமைந்த கண்கள் என்று மதனவல்லியின் அழகு வருணிக்கப்படுகிறது.

    4.2.3 மதனவல்லி உலாவைக் காணுதல்

    இத்தகைய அழகு உடைய மதனவல்லி பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றாள். அப்போது சரபோஜி மன்னன் உலா வருவதைக் காண்கின்றாள். மதனவல்லி பந்து விளையாடுவது,

    ............................................ செங்கை வளை
    கல கல எனத் தனது கொங்கைச்
    சுந்தரம்கொள் கந்துகத்தை எடுத்து அடித்து
    விளையாடத் தொடங்கினாளே

    (வளை = வளையல்; கொங்கை = மார்பு; சுந்தரம் = அழகு; கந்துகம் = பந்து)

    என்று காட்டப்படுகின்றது.

    பந்து விளையாடும் மதனவல்லி,

    வாய்ந்தநெடு வீதிஉற்றாள் சரபேந்
    திரன்பவனி வரல்கண் டாளே

    (உற்றாள் = அடைந்தாள்; வரல் = வருவதை)

    என்கிறார்.

    4.2.4 மதனவல்லி மயங்குதல்

    உலாவரும் சரபோஜி மன்னனைக் கண்டு மதனவல்லி காதல் கொள்கிறாள். இது,

    வாகுபெறும் உயர்தஞ்சை சரபோஜி
    மன்னர்தமைக் கண்டுமுன்னம் மயல்கொண்ட
    மோகினி வந்தாள் - அதிரூப
    மோகினி வந்தாள்

    (மயல் = மயக்கம்; அதிரூப = மிக்க அழகு உடைய)

    என்று பாடப்படுகிறது.

    சரபோஜியின் அழகில் மயங்கிய மதனவல்லி மன்மதனையும், நிலவு, தென்றல், குயில், மாலைப்பொழுது ஆகியவற்றையும் பார்த்துக் காதல் துயரத்தால் வருந்திப் பலவாறு கூறுகின்றாள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலின் பாட்டுடைத் தலைவர் யார்?

    2.

    சரபோஜியை யார் தத்தெடுத்தார்?

    3.

    சரபோஜி மன்னர் எப்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்?

    4.

    சரபோஜி மன்னரின் தாய்மொழி எது?

    5.

    சரபோஜி மன்னர் தஞ்சாவூரில் நிறுவிய நூல் நிலையத்தின் பெயர் யாது?

    6.

    சரபேந்திர பூபாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 17:03:55(இந்திய நேரம்)