தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5:5-பெண்கள் மடல் ஏறுதல்

 • 5.5 பெண்கள் மடல் ஏறுதல்

  தமிழ் நூல் மரபின்படி பெண்கள் மடல் ஏறுதல் கூடாது. ஆனால், பெரிய திருமடலில் திருமங்கை ஆழ்வார் பெண் மடல் ஏறுவதாகக் காட்டுகின்றார். இதற்கு உரிய காரணம் இந்நூலில் கூறப்படுகிறது.

  ....................................................... மான்நோக்கின்
  அன்ன நடையார் அலர்ஏச, ஆடவர்மேல்
  மன்னும் மடல்ஊரார் என்பதுஓர் வாசகமும்
  தென்உரையில் கேட்டுஅறிவது உண்டுஅதனை
  யாம்தெளியோம்;
  மன்னும் வடநெறியே வேண்டினோம்
  (அடிகள் : 75-79)

  மான் போன்ற பார்வையையும் அன்ன நடையையும் உடைய பெண்கள் ஆண்கள் மேல் கொண்ட காதலினால் மடல் ஏற மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு மடல் ஏறுவது பழிக்கு இடம் ஆகும் என்பது தமிழ் மரபு. இத்தகைய தமிழ் மரபை நாம் ஏற்றுக் கொள்ளோம். ஆகவே வடநூல் மரபைப் பின் பற்றுகிறோம் என்று பெண்கள் மடல் ஏறுவதற்குக் காரணம் காட்டப்படுகிறது.

  தலைவியிடம் காதல் கொண்ட தலைவன் அவளை அடைவதற்காக மடல் ஏறப் போவதாக அல்லது மடல் ஏறுவதாகக் கூறுவது தமிழ் அகப்பொருள் மரபு. இந்த மரபைத் திருமங்கை ஆழ்வார் பக்தி நோக்கில் வெளிப்படுத்துகின்றார்.

  இறைவன் தலைவன், இறைவனிடம் பக்தி கொண்ட அடியார் தலைவனிடம் காதல் கொண்ட தலைவி. இதை நாயகன் நாயகி பாவம் என்பர். எனவே, இறைவனை அடைய, இறைவனின் அருளைப் பெற அடியார் ஆகிய தலைவி, மடல் ஏறப் போவதாகக் கூறும் வகையில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடலைப் பாடி உள்ளார் எனலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:36:53(இந்திய நேரம்)