தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கற்பியல்

  • 2.5 கற்பியல்

    களவு இன்பம் நீண்ட நாட்கள் தொடர முடியாது. களவிற்குப் பல்வேறு இடையூறுகள் உண்டு. அவை அம்பல், அலர் என இருவகைப்படும். அம்பல் என்பது பிறர் அறியாமல் இருவர் தமக்குள் தலைவன், தலைவியின் காதல் செய்தியைப் பரிமாறிக் கொள்வதாகும். அலர் என்பது பலரும் அறியக் காதல்செய்தியைப் பரிமாறிக் கொள்வது. இது விரிந்த மலரின் நறுமணத்தோடு ஒப்புமைப்படுத்தப்படும். ஊரில் அலர் தூற்றத் தொடங்கி விடுவார்கள். அலர் என்றால் ஊரில் உள்ள மக்கள் இந்தத் தலைவன்-தலைவி காதல் பற்றி ஆங்காங்கே பேசத் தலைப்படுதல் ஆகும். இத்தகு சூழல் வரும்போது காதல் வெளிப்பட்டு, பெற்றோரின் செவிகளுக்குச் செய்தி எட்டிவிடுவதும் உண்டு. பெற்றோரில் சிலர் இக்காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாட்டைச் செய்வர்.

    பெற்றோரே காதலை அறிந்து, திருமணத்தை முடிக்காமல் பெண்ணையோ, ஆணையோ காதல் நிலையில் இருந்து பிரிக்க நினைத்தால் இருவரும் சேர்ந்து யாருமறியாமல் ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிடுதலும் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று பெயர்.

    2.5.1 திருமணம் தோன்றிய சூழல்

    களவில் ஈடுபட்ட இளைஞர் சிலர், அக்களவு வெளிப்பட்ட பின் நான் இவளை அறிந்ததில்லை என்று பேசியும், காதல் மணம் கொண்டவளைக் கைவிட்டும் வந்தனர். இப்பழக்கம் பலரிடம் பரவாதிருப்பதற்காகக் களவு வெளிப்பட்ட பின் பலர் அறியத் திருமணம் நடத்தும் வழக்கம் வந்ததாகத் தொல்காப்பியர் கூறுவார்.

    பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரணம் என்ப

    (கற்பியல்,4)

    என்று விளக்கியுரைப்பார்.

    திருமணம் முடிந்த பின்னர் முதன் முதலில் தலைவன், தலைவியைக் கண்ணுற்ற நேரம், தலைவன்பால் உண்டான பெருமையும் உரனும், தலைவியிடம் உண்டான அச்சமும் நாணும், மடனும் நீங்கி இருவரின் நெஞ்சமும் அன்பு வயப்பட்டுக் கூடுவர்.

    2.5.2 அகத்திணையில் தோழி

    களவு, கற்பு என்ற இரு நிலைகளிலும் தலைவன், தலைவி ஆகிய இருவருக்கும் உற்ற துணையாய் இருந்து உதவுபவள் தோழியே ஆவாள். தலைவியின் உயிர்க்குயிராய் இருக்கும் தோழி காதலுக்கு உதவுவதிலும், இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்வதிலும், தலைவனைத் திருமணத்திற்கு உடனே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுவதிலும் களவியல் நிலையில் உதவியாக இருப்பாள்.

    திருமணம் முடிந்த பின்னர், மணம் முடித்து வைத்தமைக்காகத் தலைவன் தோழியைப் பாராட்ட, அது கேட்ட தோழி அது என் கடமை ஆதலின் என்னைச் சிறப்பித்தல் வேண்டாம் என்று கூறுவாள்.கிடைத்தற்கு அரியவளாகக் களவுக் காலத்தில் இருந்த தலைவி, திருமணத்திற்குப் பின் எளியவளாய் ஆனபின் அவளிடம் அன்பு காட்டுவதைக் குறைத்து விட்டாய் என்று தோழி கடிந்து கொள்ளுதலும் உண்டு.

    திருமணத்திற்குப் பிறகு தலைவியின் அழகை முழுமையாகத் துய்த்த தலைவன் இன்னொரு பெண்ணைத் தேடிப் பிரிதலும் உண்டு. இது பரத்தையிற் பிரிவு என்று அழைக்கப் பெறும். இத்தகு நேரங்களில் தலைவனுக்கு அறிவுரை கூறி அவனை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் தோழிக்கு உண்டு.

    2.5.3 பாங்கனின் பங்கு

    தலைவனின் நண்பன் பாங்கன் எனப்படுவான். தலைவன் களவுக்காலத்தில் தலைவியின் இருப்பிடம் அறிந்து, அவள் தலைவனிடம் கொண்டிருக்கும் காதலைத் தெரிந்து, தலைவனுக்கு உண்மை நிலையைத் தெரிவிப்பான். காதலுக்குத் துணை நிற்பான். மணம் முடிந்து, பரத்தையிற்பிரிவு நிகழும் போது இது நியாயமில்லை என அறிவுரை கூறுவான்.

    2.5.4 கூத்தர், பாணர் நிலைகள்

    ஆட்டமும், இசையும் வல்லார் சிலர் காதல் வாழ்வில் ஆங்காங்கே தலையிடுவர். தலைவன் எது செய்தாலும் அவனைப் புகழ்ந்துரைக்க வல்லார் கூத்தராவார்.

    தலைவன் பிரிந்து சென்ற போது தலைவியிடம் சென்று ஆறுதல் கூறுதலும், தலைவியின் நிலையைத் தலைவனுக்குக் கூறுதலும் கூத்தர், பாணர் செயல்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2018 18:39:01(இந்திய நேரம்)