தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சொல்லாட்சியில் நல்லாட்சி

  • 5.2 சொல்லாட்சியில் நல்லாட்சி

    மாணவர்களே ! நாட்டில் நல்லாட்சி செய்த மன்னரைப் பாராட்டி அவர்களுக்கு நல்ல வழி காட்டிய சங்கப் புலவர்களைப் பற்றி அறிந்தோம். நாக்கில் நல்ல தமிழ்ச் சொல்லாட்சி செய்வதில் அவர்கள் இணையின்றி விளங்கினர் என்பதையும் முன்பு கற்ற பாடங்கள் வழி அறிந்தீர்கள். காதலையும் இயற்கையையுமசிறப்பிக்கும் கவிதைகளில் வளமான கற்பனைகளும், நயமானஉணர்ச்சி மிக்க சொற்களும், தொடர்களும் அமைவது எளிது. ஆனால், போரையும் புகழையும், அரசியலையும், வாழ்வியல் உண்மைகளையும் கூறும் புறத்திணைப் பாடல்களில் அவ்வாறு அமைவது அரிது. ஆனால் புறநானூற்றுப் பாடல்களோ, சொல்லாட்சியிலும், உவமை முதலிய கற்பனை அழகுகளிலும் மற்றஇலக்கியங்களை விஞ்சும் அளவு சிறப்பில் உயர்ந்து நிற்கின்றன. சில எடுத்துக்காட்டுகளை இனிவரும் பாடப் பகுதியில் காண்போம்.

    5.2.1 ஓவியத் தொடர்கள்

    மிகக் குறைந்த சொற்களால் சிந்திக்கச், சிந்திக்கப் பல பொருள் நலம் சுரக்கும் பாக்களை இயற்றியவர் திருவள்ளுவர். அவரைப் பெற்றெடுத்த அன்னை ஆகிய தமிழின் பிள்ளைகள் தாமே சங்கப் புலவர்கள்? மின்னல் கீற்றுப் போன்ற சுருக்கமான சொற்றொடர்களால் மனக்கண்ணில் மறையாத சொல் ஓவியங்களைத் தந்துள்ளனர்.

    • சிறுகுடி கிழான் பண்ணன் என்ற வள்ளலின் பெருமையைச் சோழ மன்னன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடியுள்ளான் (173) இதில் மக்களின் பசி தீர்க்கும் அந்த வள்ளலைப் பசிப்பிணி மருத்துவன் என்ற அழகிய தொடரால் குறிப்பிடுகிறான்.

    • இளைஞனாய் இருந்த காலத்தில் தன் பேச்சின் இனிமையால் பெண்ணின் உள்ளம் கவர்ந்தான் ஒருவன். இப்போது துறவியாய் இருக்கிறான். அவனைக் கண்டு வியந்து மாரிப்பித்தியார் பாடிய இரு பாடல்கள் (251, 252) உள்ளன. அவனை,

    • இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
      சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே (252 : 4-5)

    என்று பாடுகிறார். வீட்டில் நடமாடும் அழகு மயிலாகிய பெண்ணின் உள்ளத்தைப் பிடித்து வசப்படுத்திக் கொள்ளும் சொல் ஆகிய வலையைக் கொண்ட வேட்டைக்காரனாய் முன்பு இருந்தான் என்பது பொருள். புலவர் நம் உள்ளங்களை வசப்படுத்தும் சொல்வலை பின்னியிருக்கிறார், இல்லையா?

    • புலிகடிமால் என்று அழைக்கப்பட்ட இருங்கோவேள் சிறந்த வள்ளல். அவன் பாணர் முதலிய கலைஞர்களைப் போற்றி ஆதரிப்பதைத் தன் கடமையாகச் செய்துவந்தான். இதைக் கபிலர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார் :

    ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய (201 : 14)

    (ஆண்கடன் = ஆண் மகனாகப் பிறந்தவனின் கடமை; பாண்கடன் = இசைக் கலைஞரை ஆதரித்தல் ஆகிய கடமை)

    கலைகளை ஆதரித்துப் பாதுகாப்பது வீரம் மிக்க ஆணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடமை என்ற கருத்துரையையும் உலகத்திற்குக் கபிலர் வழங்குகிறார் அல்லவா?

    • பல சொற்களால் கதைகளாய்ச் சொல்ல வேண்டிய செய்திகளை ஒருசில சொற்களில் கூறுவதில் சங்கப் புலவர்க்கு இணை எவரும் இல்லை. வள்ளல் கிள்ளிவளவனிடம் தாமும் சுற்றமும் முன்பு இருந்த வறுமை நிலையை நல்லிறையனார் ஒரே சொற்றொடரில் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறார் பாருங்கள் :

    ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் (393 : 10)

    (ஈர்ங்கை = ஈரக்கை; இரும்பேர் ஒக்கல் = மிகப்பெரிய சுற்றத்தார்)

    “உணவு உண்டு பல நாட்கள் ஆகிவிட்டன. அதனால், கை ஈரம் பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதே மறந்துவிட்டது” என்கிறார்.

    எவ்வளவு கொடுமையான வறுமை! “ஈர நெஞ்சம் கொண்டவர்களின் ஈகைப் பண்பு உடைய கைகளையும் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன” என்று இன்னொரு பொருளையும் இந்த மின்னல் தொடர் தருகிறது அல்லவா?

    5.2.2 உவமைகளுக்கு உவமையில்லை

    உவமை அணி என்பது கவிதைக்கு அலங்காரமாக அமைந்து அழகுபடுத்துகிறது என்பார்கள். ஆனால் கவிதையின் உறுப்பாகவே அமையும் உவமைகளே உண்மையில் அழகானவை; பொருத்தமானவை. சங்க இக்கியத்தில் உவமைகள் சிறப்பாக விளங்குவதற்கு இதுவே காரணம். புறநானூற்றில் அழகும் புதுமையும் மிக்க பல நல்ல உவமைகளைக் காணலாம். சில எடுத்துக் காட்டப்படுகின்றன.

    • கடைகோல் உள்ளிருக்கும் கடு நெருப்பு

    ஒரு நல்ல மன்னன் மிகக் கொடியவனாகவும் இருக்கிறான். பகைவரைக் கொன்று அவர்களின் நாட்டை நெருப்புக்கு இரையாக்கும் இரக்கம் இல்லாத செயல்களைச் செய்கிறான். அவனே தன் குடிமக்களை அருள்மிக்க தந்தையைப்போல் காக்கவும் செய்கிறான். இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். குளிர்ந்த நிழல்போல் பாதுகாக்கிறான். புலவர்க்கும் கலைஞர்க்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகிறான். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இந்த இரு மாறுபட்ட பண்புகளும் ஒரு சிறந்த தலைவனிடம் இருக்கின்றன. இது உலக இயற்கை. இதைத் தெளிவாக உணர்த்த ஞாயிறும் திங்களும் ஆகிய இரு சுடர்களின் தன்மையைப் புலவர்கள் உவமையாகக் காட்டுவார்கள். இது இப்பாடத்தில் முன்னால் விளக்கப்பட்டது அல்லவா?

    தலைவனின் இந்த இரட்டைப் பண்பை உணர்த்த ஒளவையார் கூறும் உவமை வியக்கத் தக்கது; புதுமையானது; பொருத்தமானது. அந்தக் காலத்தில் நெருப்பை உண்டாக்குவதற்கு ஒரு கருவி இருந்தது. ஒரு குழிவான மரத்துண்டின் மீது ஓர் உறுதியான மரக்கோலை அழுத்தமாய் நட்டு மிக விரைவாகக் கடைவார்கள். அதிலிருந்து நெருப்புப் பொறி வெளிப்படும். தீக்கடைகோல் என்பது அக்கருவியின் பெயர். சங்க காலத் தமிழர் அதை ஞெலிகோல் என்றனர். ஒளவையார் அதியமானுக்கு அந்தத் தீக்கடை கோலை உவமையாகக் கூறுகிறார்.

    “ஓலை வீட்டின் கூரையில் தீக்கடை கோல் செருகி வைக்கப் பட்டு உள்ளது. முறையாக அதைப் பயன்படுத்தும் போது உணவு சமைக்க, குளிர்காய, விளக்கு ஏற்ற என்று வீட்டாருக்குப் அது பயன்படும் கூரையை எரித்து விடுகிறதா? இல்லையே ! ஆனால் அதனை முறையின்றிக் கையாளும் போது, நெருப்பை உமிழ்ந்து மாடமாளிகையைக் கூடச் சுட்டு எரித்துவிடும் இல்லையா? அதியமான் பகைவரை அழிப்பதில் அத்தகைய கடும் சினம்மிக்க வீரனாம்.

    இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
    தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றுஅதன்
    கான்றுபடு கனைஎரி போலத்
    தோன்றவும் வல்லன்தான் தோன்றும் காலே
    (315 : 4-7)

    (இல்இறை = வீட்டுக்கூரை; கான்றுபடு கனை எரி = மூண்டு எரியும் பெருந்தீ)

    ‘அமைதியாய் இருந்தால் இருப்பான்; சினம் கொண்டு சீறினால் அழித்து விடுவான்’ என்பதை இந்த உவமை எவ்வளவு அழகாய் உணர்த்துகிறது !

    • வேலுக்கு ஒரு கூர்மையான உவமை

    இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனின் வேல் எப்படி இருக்கிறது தெரியுமா? மின்னலைப் பிடித்துப் பட்டடைக் கல்லில் வைத்து அடித்து அதன் நெளிவுகளை எல்லாம் போக்கி நிமிர்த்தினால் எப்படி இருக்கும்? அது போல் இருக்குமாம்.

    மின்னுநிமிர்ந் தன்னநின் ஒளிறுஇலங்கு நெடுவேல்  (57 : 8)

    விரைவானது, ஒளிமிக்கது, தாக்கிய பொருளை அழித்தொழிக்கும் ஆற்றல் கொண்டது என்று இரண்டிற்கும் பல பொருத்தங்களைக் காணலாம். ஒரு வேற்றுமை, மின்னல் கோணலானது, வேல் நேரானது. அதனால் தான் புலவர் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் திறமையாகக் கற்பனையால் மின்னலை நிமிர்த்தி நேர்செய்து புதுமை படைக்கிறார்.

    மின்னல் கோணலானது. அது தாக்கினால் நல்லவர் கெட்டவர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. ஆனால் உன் வேல் ‘நேரானது’ கெட்டவர்களை மட்டுமே அழிக்கும் என்ற குறிப்புப் பொருளையும் இந்த உவமை தருகிறது அல்லவா?

    சிறந்த உவமைகளின் களஞ்சியமாய் இருக்கும் புறநானூற்றில் ஒரு சிலவே இங்குக் காட்டப்பட்டன.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2018 16:51:11(இந்திய நேரம்)