Primary tabs
5.1 விளம்பரங்கள்
பொருட்களை விளம்பரப்படுத்த விளம்பரதாரருக்கும், புதிய பொருட்களைப் பற்றி அறிந்து, அவற்றை வாங்கிப் பயன்படுத்திட நுகர்வோருக்கும் விளம்பரங்கள் உதவுகின்றன. விளம்பரம் என்பது ஒரு வகையான கருத்தியல் வெளிப்பாடு ஆகும். அதன்மூலம் பரந்துபட்ட நிலையில் பொதுக் கருத்தியலை உருவாக்கிட இயலும். அரசின் நலத் திட்டங்கள், சமூகச் செயற்பாடுகள் விளம்பரங்கள் மூலமாகவே மக்களைச் சென்று அடைகின்றன. அரசின் அதிகாரம் பற்றிய சொல்லாடலுக்கு அப்பால், அரசு பற்றிய இணக்கமான கருத்தியலை விளம்பரம் வழியாக உருவாக்குதல் அரசியலின் முக்கிய அம்சம் ஆகும். இந்நிலையில் விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் மொழி மிகவும் முக்கியமானது. அது மக்களுக்குத் தெளிவாகத் தெரியக் கூடியதாகவும், எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் அவசியமானது.
நல்ல விளம்பரத்தின் இயல்புகள் பின்வருமாறு:
-
நுகர்வோருக்கு அறிவூட்டும் வகையில் இருத்தல் வேண்டும்.
-
நுகர்வோரிடம் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.
-
நம்பகத்தன்மை மிக்கதாக அமைய வேண்டும்.
-
நுகர்வோரின் மனவுணர்வுகளைத் தூண்டுவதாக அமைதல் வேண்டும்.
-
செயற்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
-
மேலோட்டமான நிலையிலும், நினைவில் பதியுமாறு அமைந்திருத்தல் வேண்டும்.
-
நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும்படி இருத்தல் வேண்டும்.
-
கருத்துத் தெளிவும் சொற்சிக்கனமும் மிகவும் அவசியம்.
வணிக நிறுவனங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்றன வணிக நோக்கில் விளம்பரங்களைத் தமிழில் வெளியிடுகின்றன. பொதுவாக, இன்று உலகமயமாக்கல் காரணமாக, தமிழ்நாட்டின் சந்தையானது உலக வணிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும் வட இந்தியாவிலுள்ள வணிக நிறுவனங்களும் பெரிய அளவில் தமிழகத்தில் தங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய, விளம்பரங்கள் உதவுகின்றன. இந்நிலையில் பிறமொழி பேசும் முதலாளிகள், விளம்பர நிறுவனங்கள் மூலம் பல்வேறு ஊடகங்களின் வழியாக இந்தியாவெங்கும் விளம்பரப்படுத்துகின்றனர். பரந்துபட்ட சந்தையைக் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும் விளம்பரங்கள் தனித்துவமான காட்சியமைப்பு, மொழி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பெரும்பாலான விளம்பரங்கள் முதலில் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் வடிவமைக்கப்படுகின்றன. அவை பின்னர்த் தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இத்தகைய பணியில், தமிழ்மொழியின் தொன்மை, தனித் தன்மைக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. விளம்பர நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களின் மனநிலைக்கு ஏற்ப, விளம்பரங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. பொருளைச் சந்தைப்படுத்துவதற்கு என்று உருவாக்கப்படும் மொழி நடையும், சொற்களும், தமிழின் சிறப்பினுக்கு ஏற்ப இல்லை. பல விளம்பரங்களின் மொழி பெயர்ப்புகள் இலக்கண வளமுடைய தமிழின் மரபினைப் புறக்கணிப்பதாக உள்ளன.
-