தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-கல்கியின் சிறுகதைகளில் கருப்பொருள்

  • 3.2 கல்கியின் சிறுகதைகளில் கருப்பொருள்

    இப்பகுதியில் படைப்பாளர் கல்கியின் சிறுகதைகளில் கருப்பொருள் அமைந்துள்ள விதத்தைப் பற்றிக் காண்போம்.

    • படைப்பாளர் வரலாறு

    கிருஷ்ணமூர்த்தி என்கின்ற கல்கி 09.09.1899இல் மயிலாடுதுறையை அடுத்த புத்தமங்கலத்தில் பிறந்தார். மயிலாடுதுறைப் பள்ளியிலும், திருச்சியிலும் கல்வி கற்றார். திருச்சியில் பள்ளியில் படிக்கும்போது படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு 1922ஆம் ஆண்டில் முதல்முறையும், 1930ஆம் ஆண்டில் இரண்டாம் முறையும், 1941ஆம் ஆண்டில் மூன்றாம் முறையும் சிறை சென்றார். சிறையிலிருந்து விடுதலையானதும் திரு.வி.க. நடத்தி வந்த நவசக்தி பத்திரிகையில் சேர்ந்தார். திருமணம் 1924இல் நடந்தேறியது. மனைவி பெயர் ருக்மணி. ராஜாஜி திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் இருந்து நடத்திய விமர்சனம் என்ற பத்திரிக்கையில் இவர் உதவியாசிரியராக இருந்தார். எஸ்.எஸ். வாசனின் ஆனந்த விகடனில் துணை ஆசிரியராக 1932இல் பணியாற்றினார். பின் ஆனந்த விகடனிலிருந்து விலகி, நண்பர் சதாசிவத்தோடு சேர்ந்து 1941இல் கல்கி இதழைத் தொடங்கினார். அன்று முதல் இவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியானார்.

    திரு.வி.க.வின் நவசக்தியில் பணியாற்றும்போது எழுத்துத்திறனை வளர்த்துக் கொண்டார்; ஒரு இதழைத் தொடங்கி நடத்துவதற்குரிய பயிற்சியையும் பெற்றார். இதில், திரு.வி.க. உறுதுணையாக நின்றார். அவரை நினைவு கொள்ளும் வகையில் கல்கி எனும் புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். திரு.வி.க.வின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துகளும், கிருஷ்ணமூர்த்தி எனும் பெயரில் உள்ள முதல் எழுத்தும் இணைந்து உருவானதே கல்கி என்ற புனைபெயர். பின்னர் இதுவே நிலைத்து விட்டது.

    • இவரது படைப்புகள்
    • சாரதையின் தந்திரம் - சிறுகதைத் தொகுப்பு - 1927
    • ஆனந்த விகடனில் முதல் தொடர் - கள்வனின் காதலி - 1937
    • பார்த்திபன் கனவு - தொடர் - 1941-43
    • சிவகாமியின் சபதம் - தொடர் - 1944-46
    • அலை ஓசை - தொடர் - 1948-49
    • பொன்னியின் செல்வன் - தொடர் - 1950-54
    • முதல் திரைக்கதை - தியாகபூமி - 1939
    • மீரா - திரைப்படம் - 1945
    • கள்வனின் காதலி - திரைப்படம் - 1955

    கர்நாடகம், தமிழ்மகன், விவசாயி, தமிழ்த்தேனீ, ராது, அகஸ்தியன் ஆகிய புனைபெயர்களிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன. இவர் 1954ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னையில் காலமானார். 1956ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது இவருடைய மறைவிற்குப் பிறகு இவரது 'அலைஓசை' நாவலுக்கு வழங்கப்பட்டது.

    • கதைகளில் கருப்பொருள்

    நடந்த சம்பவத்தையோ அல்லது நடக்காத சம்பவத்தையோ பிறர் ஆவலைத் தூண்டும்படி சொன்னால் அது கதையாகிறது என்கிறார் இந்தப் படைப்பாளர். இவ்வகைப்பட்ட கதைகளை நான்கு வகையில் அடக்குகிறார்.

    • கட்டுக்கதைகள் அல்லது பொய்க்கதைகள்

      நடக்காத கதைகளை நடந்ததாக எண்ணி ஆவலுடன் கேட்பது.

    • வேடிக்கைக் கதைகள்

      இவை வெறும் கற்பனைக் கதைகள். வேடிக்கைக்காக இக்கதைகள் கேட்டு அனுபவிக்கப்படுகின்றன.

    • காவிய ரசமுள்ள கதைகள்

      இவை மனித இனத்தின் வீரம், சோகம், காதல், நகைச்சுவை முதலிய நவரசங்களை வெளிப்படுத்தக் கூடிய வகையில் எழுந்தவையாகும்.

    • கருத்து அமைந்த கதைகள்

      இவை சமூக முன்னேற்றம், தேச முன்னேற்றத்தை நினைவில் கொண்டு, உயர்ந்த நோக்கங்களைப் பரப்புவதற்காக எழுந்த கதைகளாகும்.

      கல்கி அவர்களின் சிறுகதைகள் நவரசங்களை வெளிப்படுத்துகின்ற கருப்பொருள்களைக் கொண்டு உருப்பெற்றுள்ளன. இவற்றிற்கு அடிப்படையாக, குடும்ப முன்னேற்றம், சமூக முன்னேற்றம், தேசிய முன்னேற்றம் ஆகியவை அமைந்துள்ளன. வாழ்க்கைப்பயன், சமூகப்பயன் விளைவிக்கும் இவரது சிறுகதையின் கருப்பொருள் குறிப்பிடத்தக்கதாகிறது. நம் பாடப் பகுதிக்கு உரியதாகக் 'கேதாரியின் தாயார்' சிறுகதை இடம் பெறுகிறது. இதன் கருப்பொருள், வாழ்க்கைப்பயன், சமூகப்பயன் ஆகியவை விளக்கப்படுகின்றன.

      3.2.1 'கேதாரியின் தாயார்' சிறுகதையின் கதைப்பொருள்

      கேதாரியின் நண்பன் இக்கதையைக் கூறுவதுபோல் படைப்பாளர் அமைத்துள்ளார். இக்கதை சோகத்திற்கு இடம் கொடுப்பதாயுள்ளது. சமூகத்தைப் பிடித்திருக்கும் பல நோய்களில் ஒன்றாக இச்சிறுகதையின் கருப்பொருள் அமைந்துள்ளது. இக்கதை சற்று நீண்ட சிறுகதையாய் அமைந்துள்ளது.

      ''கேதாரியின் தந்தை அவன் மூன்று வயதாக இருக்கும்போதே ஒரு நாடகக்காரியின் மையலில் சிக்கி வீட்டை விட்டுப் போய்விட்டார். அதனால் கேதாரிக்கு அவன் தந்தையைப் பற்றிய ஞாபகமே கிடையாது. கேதாரிக்குத் திருமணப் பேச்சு நடந்தபொழுது தான் இது எல்லோருக்கும் தெரிய வந்தது. பெண்ணைப் போய்ப் பார்க்கச்சொல்லிப் பாகீரதி அம்மாமி எவ்வளவு வற்புறுத்திய போதிலும், 'நீ பார்த்து நிச்சயம் செய்தால் சரிதான் அம்மா. ஒரு மூளிப்பெண்ணைக் கலியாணம் பண்ணிக் கொள்ளச் சொன்னாலும் பண்ணிக் கொள்கிறேன்' என்றான் கேதாரி (மூளிப்பெண் - குறையுடைய அல்லது அழகற்ற பெண்). ஆனால் அம்மாமி, 'கேதாரி பெண்ணைப் பார்த்துப் பிடித்திருக்கிறது என்று சொன்னால்தான் நிச்சயம் பண்ணுவேன்' என்று கூறிவிட்டாள். அப்பொழுதுதான் கேதாரியின் தகப்பனாரைப் பற்றிக் கூறக் கேட்டேன்.

      'இப்படியெல்லாம் பெண்ணையும், பிள்ளையையும் கேட்காமல் கல்யாணம் பண்ணித்தான் பல குடும்பங்களில் கஷ்டம் ஏற்படுகிறது. கேதாரியின் தகப்பனார் என்னை விட்டு ஓடியதற்கு ஊரெல்லாம் அவரைத் திட்டித் தீர்த்தனர். எனக்கு அப்பொழுது கோபமும், ஆத்திரமும் வந்தது. நாற்பது நாள் படுத்த படுக்கையாகக் கிடந்தேன். பின்னர் ஆற அமர யோசித்துப் பார்த்ததில் அவர் மீது குற்றம் இல்லையென்று தோன்றியது. என்னைக் கல்யாணம் செய்து கொள்வதில் அவருக்கு இஷ்டமே இல்லையாம். இதைப் பெரியவர்களிடம் கூறவும் செய்தாராம். ஆனால் பெரியவர்கள் பலவந்தப்படுத்திக் கல்யாணம் செய்து வைத்துவிட்டனர். ஏதோ ஐந்தாறு வருடம் பல்லைக் கடித்துக்கொண்டு குடும்பம் நடத்தினோம். அப்புறம் கூத்தாடி வந்து சேர்ந்தாள். போய் விட்டார்' என்றாள்.

      இதனிடையே நானும் அம்மாமியிடம் பல கேள்விகளைக் கேட்டுச் சில விவரங்களை அறிந்தேன். கேதாரியின் தகப்பனார் சுந்தரராமையர் பார்ப்பதற்கு ஆள் வாட்டசாட்டமாக நன்றாய் இருப்பாராம். நன்றாகப் பாடுவாராம். திருமங்கலத்தில் தபால் ஆபீஸில் எழுத்தர் வேலை பார்த்துக் கொண்டிருந்தாராம். கேதாரியின் தகப்பனாருக்கு நாடகம் என்றால் பித்து. ஒரு நாள் ராஜபார்ட் வேடம் போடுகிறவன் வராத காரணத்தால் இவர் வேடம் போட்டு நடித்துக் காண்பிக்க, நாடகக்காரி ரங்கமணியும் நடிக்கச் சம்மதித்தாளாம். இப்படி வளர்ந்த அவர்களுடைய நெருக்கத்தைப் பற்றி ஊரில் உள்ளவர்கள் பேசிக்கொண்டபோது, அம்மாமி அதை நம்பவில்லையாம். கடைசியில் நாடகக் கம்பெனி ஊரை விட்டுப் போயிற்று. அதற்கு மறுநாள் சுந்தரராமையரையும் காணவில்லை. நாடகக் கம்பெனியுடன் இவரும் இலங்கைக்குப் போனது மட்டும் பின்னாளில் தெரிய வந்ததாம். அதன்பிறகு அவரைப் பற்றி ஒரு விவரமும் சரியாகத் தெரியவில்லையாம். பாகீரதி அம்மாமியும் அதற்கு மேல் அவரைப் பற்றி எண்ணுவதை விட்டு விட்டு, கேதாரி மீது அன்பைச் செலுத்த ஆரம்பித்தாள். சுந்தரராமையர் ஓடிப்போன செய்தியை அறிந்து அம்மாமியின் தாய், தந்தையர் அவளைக் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அம்மாமியைத் தவிர அவர்களுக்கு வேறு பிள்ளை குட்டி கிடையாது. கேதாரி வளர்ந்ததும் அவனைப் படிக்க வைக்கும் பொருட்டுத் திருச்சிக்குக் குடிவந்தார்கள்.

      அப்பொழுதுதான் எங்கள் எதிர்வீட்டிற்குக் குடிவந்த கேதாரியை நான் முதன் முதலில் பார்த்தேன். அந்தப் பையன் கையில் தங்கக் காப்புடன், தலையைப்பின்னிக் குல்லா வைத்துக்கொண்டு இருந்தான். அதை நான் வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றது என் நினைவிற்கு வருகிறது. அவனுடன் நான் முதல் தடவை பேசின உடனேயே எனக்குப் பிடித்துப் போயிற்று. ஓயாமல் 'அது என்ன? இது என்ன?' என்று கேட்டுக் கொண்டே இருப்பான். நானும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருப்பேன். நான் படித்த அதே பள்ளியில் அவனையும் சேர்க்க, நாங்கள் இணை பிரியாத நண்பர்கள் ஆனோம்.

      அவர்கள் திருச்சிக்கு வந்த மூன்று வருடத்திற்குள் தாத்தா இறக்க, அவர்கள் கையிலிருந்த பணமெல்லாம் செலவழிந்தது. சாப்பாட்டுக்கு விளைந்து வரும் நெல் போதுமானதாக இருந்தது. கேதாரி நன்றாகப் படித்ததால் உதவித்தொகை கிடைத்தது. ஆனால் வாடகைக்கு மட்டும் பணம் தேவைப்பட்டது. அம்மாமியும், பாட்டியும் அப்பளம் இட்டு விற்க ஆரம்பித்தனர். அம்மாமியை 'வாழாவெட்டி' என்று அக்கம்பக்கத்தவர்கள் அழைத்தாலும், என் தாயாரைக் காட்டிலும் அவர்கள் மீது எனக்குப் பிரியம் அதிகமாயிருந்தது. நானே அம்மாமியின் அப்பளங்களை ஏராளமாக விற்றுக் கொடுத்தேன். கொஞ்ச நாளில் பாட்டியும் இறந்து விட்டாள். கேதாரி தன் தாயார் பட்ட கஷ்டங்களுக்கு ஈடாக பி.ஏ. பரிட்சையில் சென்னையில் முதல்மாணவனாகத் தேறினான். கேதாரி காலேஜ் வகுப்புக்குப் போனபோதே பெண்ணைப் பெற்றவர்கள் கல்யாணப்பேச்சு எடுக்க அவன் பி.ஏ. முடிக்கும் வரை எதுவும் பேசக்கூடாது என்று அம்மாமி கூறிவிட்டாள். இப்பொழுது கேதாரி பி.ஏ. தேறியவுடன் அவன் கல்லூரியின் பழைய மாணவர் மணிப்புரம் பண்ணையார் கேதாரியின் தகுதிகளைக் கேள்விப்பட்ட நிலையில் தன் பெண்ணைக் கொடுக்க முன் வந்தார். பெரிய சம்பந்தம் கிடைத்துவிட்டது என்று அம்மாமி பணம், பவுன் வேண்டுமென்று கேட்காமல், பையனைச் சீமைக்கு அனுப்பி ஐ.சி.எஸ் படிக்கவைக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்றாள்.

      அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் சிலர் அதிசயப்பட்டனர். சிலர் அம்மாமியை வைதார்கள். 'என்ன நெஞ்சழுத்தம் இவளுக்கு. ஒரு பிள்ளை, அதைச் சீமைக்கு அனுப்புகிறேன் என்கிறாளே' என்றார்கள் (வைதார்கள் - திட்டினார்கள்; சீமை - வெளிநாடு). பண்ணையார் நரசிம்மய்யர் வைதிகப் பற்றுள்ளவர். முதலில் தயங்கி, பின்னர் சாஸ்திரி, தீட்சிதர்களோடு கலந்தாலோசித்து, சம்மதித்தார். இதன்பின்தான் கேதாரியை, பெண் பார்த்து விட்டு வரும்படி அம்மாமி அனுப்பியது. கேதாரி தன் தாயிடம் வைத்திருந்த நம்பிக்கை எவ்வளவு நியாயமானது என்று தோன்றிற்று. கிளி என்றால் கிளி. பெண் அவ்வளவு அழகாயிருந்தாள். பதின்மூன்று, பதினான்கு வயதிருக்கலாம். கல்யாணம் சிறப்பாக நடந்தது. அதன்பின் கேதாரி ஒரு வருடம் கழித்து இங்கிலாந்துக்குப் பயணமானான். பாகீரதி அம்மாமியைச் சம்பந்தி வீட்டினர் அவர்களுடனேயே தங்கச் சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்துவிட்டாள். அதன்பிறகு அவர்களின் கௌரவம் பாதிக்கப்படக்கூடாதென்று அப்பளம் இட்டு விற்பதை மட்டும் நிறுத்திக் கொண்டாள்.

      கேதாரி சீமைக்குச் சென்று ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு நரசிம்மய்யர் என்னைக் கூப்பிட்டனுப்ப, நான் சென்றேன். சுந்தரராமய்யரிடமிருந்து வந்த கடிதத்தைக் காட்டி, பணம் அனுப்பச் சொல்லி எழுதியிருக்கிறார். இது உண்மையா? என்று கேட்க, நான் அம்மாமியிடம் கேட்டு வருவதாகக் கூறிக் கடிதத்தை எடுத்துச் சென்றேன். அம்மாமி கையெழுத்தைப் பார்த்து விட்டு, சற்றும் அதிர்ச்சியடையாமல் இது அவர் கையெழுத்து தான் என்றாள். பிறகு மௌனமாய் யோசனையில் ஆழ்ந்தாள். அம்மாமி, 'நரசிம்மய்யர் பணம் அனுப்புவதாகச் சொல்கிறார்' என்று கூற, உடனே மாமி, நான் அப்பளம் இட்டுச் சேர்த்த பணத்தில் மீதி இது. இந்த வீட்டு விலாசம் கொடுத்து இங்கேயே வந்து சேரும்படி எழுது என்றாள். அப்பொழுது அவள் குரல் கம்மியிருந்தது, அவ்வளவு தான். மற்றபடி எனக்குத் தான் கண்ணில் ஜலம் வந்தது. பத்து நாளைக்கெல்லாம் மணியார்டர் திரும்பி வந்து விட்டது. சுந்தரராமையர் காலமாகிவிட்டதாகவும், அநாதைப் பிரேதமாக அடக்கம் செய்யப்பட்டதாகவும் எழுதப்பட்டிருந்தது.

      பதினெட்டு வருஷமாய்க் கண்ணால் காணாத புருஷனுக்காக, பாகீரதி அம்மாமி துக்கம் காத்தாள். பத்தாவது நாள் பிராமணச் சமூகத்திற்குரிய அலங்கோலங்கள் அம்மாமிக்கும் செய்யப்பட்டன. கேதாரிக்கு இதுபற்றி ஒன்றும் தெரிவிக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். காலம் எப்படியோ சென்றது. எதிர்பார்த்தது போலவே கேதாரி சிறப்புடன் ஐ.சி.எஸ். தேறினான். நான் நடந்தவற்றையெல்லாம் அவன் அதிர்ச்சியடையா வண்ணம் எழுதி, பம்பாய் வரும்போது அவனுக்குக் கிடைக்கும்படி ஒரு தபால் அனுப்பியிருந்தேன். ஆனால் அவனுக்கிருந்த அவசரத்தில் அவன் கப்பலிலிருந்து நேரே ரயிலுக்கு வந்துவிட்ட காரணத்தால் மேற்படி கடிதம் அவனுக்குச் சேரவில்லை. அவன் வரும் விவரத்தைத் தந்தியில் தெரிவித்திருந்த படியால், அந்த நாளன்று நான் வீட்டுவாசலில் தயாராய்க் காத்துக் கொண்டிருந்தேன்.

      கேதாரி வந்தான். என் கழுத்தைக் கட்டிக்கொண்டு உள்ளே இழுத்துக் கொண்டு அவசரமாய்ச் சென்றான். தாழ்வாரத்தில் உட்கார்ந்திருந்த அம்மாமியின் மீது அவன் பார்வை படவில்லையோ அல்லது அடையாளம் தெரியவில்லையோ நான் அறியேன். 'அம்மா! அம்மா!' என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே சென்றான். அம்மாமியின் கண்களில் கண்ணீர் வந்ததை நான் அப்பொழுது தான் முதன் முதலாகப் பார்த்தேன். 'அடே கேதாரி, என்னடா இது....... அம்மா இதோ இருக்கிறாள்.... எங்கேயோ தேடிக் கொண்டு போகிறாயே' என்றேன். கேதாரி திரும்பி வந்தான். வெள்ளைப்புடவை அணிந்து மொட்டைத்தலையை முக்காடால் மூடிக்கொண்டிருந்த பாகீரதி அம்மாமியை உற்றுப்பார்த்தான். 'ஐயோ, அம்மா!' என்று பயங்கரமாக ஒரு கூச்சல் போட்டுவிட்டு, தொப்பென்று கீழே உட்கார்ந்தான். தலையைக் கைகளால் பிடித்துக் கொண்டான்.

      கேதாரிக்கு அதுமுதல் கடுமையான சுரம். அவனுக்குச் சிகிச்சை செய்யாத டாக்டர் இல்லை. ஆனால் பயன்தான் ஒன்றுமில்லை. அவன் உடம்பைப் போலவே உள்ளமும் கொதித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு ஒரே நினைவு, ஒரே ஞாபகந்தான். 'சங்கரா! என்ன சாஸ்திரமடா அது? அநாதையாக விட்டுப் போய், பதினெட்டு வருடம் திரும்பி வராத புருஷன் செத்ததற்காக மொட்டையடிக்கச் சொல்லும் சாஸ்திரம். அதைக் கொண்டு வாடா தீயில் போட்டுக் கொளுத்துவோம். இதோ பார் சங்கர். என் தாயார் ரொம்பப் புத்திசாலி. இந்த முட்டாள்தனத்திற்கு ஒரு நாளும் உடன்பட்டிருக்க மாட்டாள். நான் பெரிய இடத்தில் கல்யாணம் செய்து கொண்டேன் அல்லவா? அவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்துதான் அம்மா சம்மதித்திருக்க வேண்டும்' என்பான். 'சங்கரா! என் தாயாரின் முகத்தில் விழித்தால் சகல பீடைகளும் நீங்கும் என்பார்களே. இப்பொழுது அவளும் அபசகுனந்தானே?' என்று புலம்பினான்.

      எவ்வளவு சொல்லித் தேற்றினாலும் அவன் அந்தப் பேச்சை விடுவதாய் இல்லை. 'இதைக்கேள் சங்கர். உத்தியோகமும் ஆயிற்று; பணமும் ஆயிற்று. நான் மட்டும் பிழைத்து எழுந்தால் பிராமணப் பெண்கள் புருஷனை இழந்தால் மொட்டையடிக்க வேண்டும் என்ற வழக்கத்தை ஒழிக்க ஒரு பெரிய கிளர்ச்சியை நடத்தப் போகிறேன். இந்தத் தனிக் கௌரவம் நம் சாதிக்கு மட்டும் வேண்டாம்' என்றான். இந்நிலையில் கேதாரி குணமடையாமலே சீமையிலிருந்து வந்த 21 ஆம் நாள் காலமானான்.

      இந்தப் பரிதாப வரலாற்றில் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான் பாக்கியிருக்கிறது. கேதாரியின் மாமனார் அவனுடைய புகைப்படம் ஒன்றைக் கேட்டிருந்தபடியால் அதை நான் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றேன். அப்பொழுது கேதாரியின் மனைவியைத் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. அவளைப் பார்த்ததும் என் உடம்பு நடுங்கிற்று; மயிர் சிலிர்த்தது. 'கிளி' என்று சொன்னேன் அல்லவா? அந்தக் கிளிக்கு இப்பொழுது தலையை மொட்டையடித்து முக்காடும் போட்டிருந்தார்கள்''. இத்துடன் கதை நிறைவடைகிறது.

    • கருப்பொருள்

    இக்கதையில் கருப்பொருள் ஆணித்தரமாய் அமைந்துள்ளது. கணவனை இழந்த பிராமணப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கத்தை ஒழிக்க வேண்டும். இந்தச் சாதிக்கு மட்டுமான தனி வழக்கமாக இது இருக்கக் கூடாது என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்தச் சாதிப்பழக்க வழக்கத்தால் ஓர் உயிர் இழப்பும், சமூகத்தினரின் மனக்குமுறலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

    3.2.2 'கேதாரியின் தாயார்' சிறுகதையின் வாழ்க்கைப் பயன்

    இச்சிறுகதையின் கதைமாந்தர்கள் பிறருக்குப் பயன்படக் கூடிய வாழ்க்கை வாழ்பவர்களாகக் காட்டப்படுகின்றனர். பாகீரதி அம்மாமி, கேதாரி, சங்கர், நரசிம்மய்யர் ஆகிய கதைமாந்தர்கள் வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொள்ள உதவுபவர்களாக உள்ளனர். சுந்தரராமையர் என்ற கதைமாந்தர் மூலம் பயனற்ற வாழ்க்கை அறியப்படுகிறது. குடும்ப, சமூக வாழ்வில் இத்தகைய மனிதர்களால் எவ்விதப் பயனும் விளைவதில்லை என்பது உணர்த்தப்படுகிறது. பின்வரும் அளவில் கதைமாந்தர்கள் மூலம் பெறப்படும் வாழ்க்கைப் பயனைக் காணலாம்.

    • பாகீரதி அம்மாமி

    இக்கதைப்பாத்திரம் மூலம் வாழ்க்கைப்பாடம் கற்பிக்கப்படுகிறது. வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொண்டு அதில் வெற்றிபெறும் பெண்ணாக இப்பாத்திரப் படைப்பு விளங்குகிறது. கணவன் தன்னை விட்டு ஓடிப்போன நிலையில் தன் வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதாமல் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்குவது என்பது, பெண்களுக்குத் தன்னம்பிக்கை தேவை என்பதைக் காட்டுவதாக உள்ளது. மகனை நன்கு படிக்கவைக்க வேண்டும் என்ற அவளின் நோக்கம் எல்லோரும் பின்பற்ற வேண்டிய கருத்தாகிறது. தாய்க்குத் தாயாக, தந்தைக்குத் தந்தையாக இருந்து குடும்பத்தைக் காப்பாற்றும் பாகீரதி பிறருக்கு வழிகாட்டியாகவும் விளங்குகிறார். மகனுக்கு வரதட்சணை வாங்கிக் கொண்டு, திருமணம் செய்வித்து, அதில் இன்ப வாழ்வு வாழலாம் என்று கருதாமல் மேலும் மேலும் மகனை முன்னேற்ற வேண்டும் என்ற நிலையில் செயல்படும் பாகீரதி 'தாய்' என்னும் நிலைக்குப் பெருமை சேர்ப்பவராகிறார். பையனின் சம்மதத்தின் பேரிலேயே மணம் செய்விக்க முற்படுவது முற்போக்குச் சிந்தனையைக் காட்டுவதாக உள்ளது.

    பதினெட்டு வருடங்கள் விட்டுப் பிரிந்த கணவனுக்காக, அவன் இறப்பிற்குப் பிறகு மனைவி என்ற முறையில், அதற்குரிய சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் போற்றுவது இப்பாத்திரத்தின் உயர்வை எடுத்துக்காட்டுகிறது. தன் கணவன் சம்பந்தியிடம் பணம் கேட்டு எழுதியிருந்ததை அறிந்த அவள், தன்னை விட்டு ஓடிப்போன கணவனுக்கு ஏன் உதவ வேண்டும் என்று கருதாமல் உடனடியாகத் தானே பணம் அனுப்பி, தன் வீட்டிற்கே வரச்சொல்வது அவளது சுயமரியாதைக்குரிய வாழ்க்கையைக் காட்டுகிறது. சுயதொழில் செய்து மகனை ஐ.சி.எஸ் படிக்கும் நிலைக்கு ஆளாக்கும் பாகீரதியின் முயற்சி பிறர் பின்பற்ற வேண்டிய பாடமாகிறது. இங்ஙனம் பயன்பட வாழ்ந்த கதைமாந்தரின் மூலம் நாமும் பயனுடைய பாடம் கற்றுக்கொள்ள முடிகிறது.

    • கேதாரி

    அம்மாவை மட்டுமே பிறந்தது முதல் அறிந்தவன் என்ற அளவில் அவன் அம்மா மீது கொண்டிருக்கும் நம்பிக்கை, பாசம் அளவற்று இருப்பது தெரிகிறது. அம்மாவின் துயரத்திற்கு ஈடாக அவன் நன்கு படித்து, நல்லவனாக உருவாவது என்பது எல்லோரும் பின்பற்ற வேண்டிய ஒன்றாகிறது. அவன் படித்ததனால் ஏற்பட்ட சிந்தனையின் விளைவாக அர்த்தமற்ற சாத்திரங்களை முட்டாள்தனமாகக் கருதி வெறுக்கிறான். இப்படிப்பட்ட மூடப்பழக்கத்தை ஒழிக்க 'நான் கிளர்ச்சி செய்யப் போகிறேன்' என்று கூறுவதும், வாழ்க்கை மற்றும் சமூகப் பிரச்சனைக்குத் தீர்வுகாண விரும்புவதும் அவனுடைய உயர்ந்த மனப்போக்கினைக் காட்டுவதாயுள்ளன. அம்மாவுக்கு நிகழ்ந்த அலங்கோலத்தை எண்ணி எண்ணி மனநோய்க்கு ஆளாகி உயிரை விடுவதும், அடுத்து அவன் மனைவிக்கும் இத்தகைய அலங்கோலம் நிகழ்வதும் ஆகியவை சமூக அவலங்களாகக் காட்டப்பட்டு, சமூகச்சிக்கல் வெளிப்படுத்தப்படுகிறது.

    • சங்கர்

    இந்தக் கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை எல்லோருக்கும் உதவக்கூடிய நல்ல மனம் கொண்ட  கதைப்பாத்திரமாக இவர் விளங்குகிறார். இக்கதைப்பாத்திரம் மூலமே படைப்பாளர் தம் கருத்தைக் கதையாகக் கூறியுள்ளார். இளம் வயதில் தான் நன்றாகப் படிக்காவிட்டாலும், கேதாரி நன்றாகப் படிப்பதைப் பார்த்துப் பெருமை கொள்வது,  அம்மாமிக்கு அப்பளம் விற்றுத்தர உதவுவது, ஊரே அம்மாமியை 'வாழாவெட்டி' என்று தூற்றியபோதிலும் அவன் தன் தாயை விட கேதாரியின் தாயை உயர்வாகக் கருதுவது, அம்மாமியின் துயர வாழ்க்கையை எண்ணி வேதனைப்படுவது, அம்மாமியின் உழைப்பையும், மனவுறுதியையும் பார்த்து மலைத்துப் போவது, கேதாரி ஐ.சி.எஸ். படிப்பதைப் பார்த்து ஆனந்தப்படுவது, அவன் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும்போது அவனுக்கு ஆறுதல், தேறுதல் சொல்வது, அம்மாமிக்கும் அவர் சம்பந்தி வீட்டாருக்கும் ஒரு பாலமாய் இருந்து உறவை வளர்ப்பது, இப்படி ஒரு சிறந்த மனிதனாக, நண்பனாக, மனித நேயம் கொண்டவனாகச் சங்கர் விளங்குவது கதைப்பாத்திரச் சிறப்பினைக் காட்டுவதாக உள்ளன. இக்கதையினை நம்மோடு பகிர்ந்து கொள்வதாலும், வாழ்க்கைக்கு வழிகாட்டும் அளவிலும் கதைமாந்தனாகிய சங்கர் நம் மனத்தைக் கவர்கிறான்.

    • நரசிம்மய்யர்

    இவர் ஜமீன் பரம்பரையைச் சார்ந்தவராக இருந்தாலும், சாதாரண நிலையிலிருக்கும் கேதாரி குடும்பத்தோடு நல்லுறவை வளர்த்துக் கொள்வது கதைமாந்தரின் சிறப்பினைக் காட்டுவதாய் உள்ளது. அம்மாமியே தைரியமாக மகனை வெளிநாடு அனுப்பிவைக்க விரும்பும்போது, அந்தக் காலகட்டத்தில் அதற்கிருந்த தடைகளைப் பொருட்படுத்தாதவராய்த் தானும் உடன்படுவது இவரது நல்ல மனப்பான்மையைக் காட்டுகிறது. கேதாரி சீமைக்குச் சென்ற பிறகு அம்மாமியைத் தங்களுடன் வைத்துக்கொள்ள அவர் விருப்பம் தெரிவிப்பதிலிருந்து அவரின் நல்ல மனம் வெளிப்படுகிறது. சம்பந்தி பணம் கேட்டு எழுதிய கடிதத்தைப் பார்த்து விட்டு அவருக்குப் பணம் அனுப்ப விரும்புவது அவரின் மனித நேயத்தைக் காட்டுவதாயுள்ளது. இங்ஙனம் இக்கதைப்பாத்திரம் தனக்கும், பிறருக்கும் நன்மை விளைவிக்கும் அளவில் வாழும் அவருடைய வாழ்க்கை பயனுடையதாய் வெளிப்படுகிறது.

    3.2.3 ‘கேதாரியின் தாயார்’ சிறுகதையின் சமூகப் பயன்

    இக்கதையின் படைப்பாளர் கல்கி அவர்கள் கதையின் தொடக்கத்திலேயே இது சமூக நோக்கம் கொண்ட கதை என்பதைத் தெளிவுபடுத்தி விடுகிறார். இச்சிறுகதையின் ஒவ்வொரு நிகழ்வும் சமூகப் பயனுக்கு இடமளிப்பதாகவே உள்ளது. இக்கதை கற்பிக்கும் சமூகப்பாடம் அனைத்து மக்களும் அறிய வேண்டிய ஒன்றாகவே உள்ளது. இக்கதையின் சமூகப் பயன்களைப் பின்வரும் அளவில் காணலாம்.

      • அர்த்தமற்ற சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது கூறப்படுகிறது.

      • கேதாரியின் தாயார் புத்திசாலியாக இருந்தும் கூட, பிராமணச் சாதியின் வழக்கங்களுக்கு உட்படுவது சமூகத்தின் போக்கிற்கு ஏற்ப நடக்க வேண்டிய கட்டாயத்தைக் காட்டுகிறது. இதைப் பற்றிச் சமூகம் சிந்திக்க வேண்டும் என்பது எடுத்துரைக்கப் படுகிறது.

      • சில வேளைகளில் சமூகப் பழக்க வழக்கங்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் பாதிப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

    எ.கா:

    தன்னம்பிக்கை கொண்ட, முற்போக்குச் சிந்தனையுடைய அம்மாமி சாஸ்திர, சம்பிரதாயங்களுக்கு உட்படுவது.

    ஐ.சி.எஸ் படித்த கேதாரி அம்மாவின் அலங்கோலத்தைப் பார்த்து மனம் பலவீனப்பட்டுப் போனது.

      • 18 வருடம் பிரிந்த கணவனுக்காக, அவன் இறந்த பிறகு அம்மாமிக்குச் சடங்குகள் செய்யப்படுவது, தேவையற்றதாகக் கருத இடமளிக்கிறது. எனினும் அது அந்தக் காலத்திலிருந்த ஒரு சமூக வியாதியாகப் படைப்பாளரால் சுட்டப்பட்டு, அது தவிர்க்கப்பட வேண்டும் என்பது உரைக்கப்படுகிறது.

      • கேதாரி தன் தாய்க்குச் செய்யப்பட்ட அலங்கோலத்தைச் சமூக அவலமாகக் கருதுவதால், சமூக மறுமலர்ச்சிக்கு வித்திடுபவனாகக் காட்டப்படுகிறான்.

      • அம்மாமி போன்றவர்களை 'வாழாவெட்டி' என்று இகழும் குறைபாடுடைய சமூகத்தின் போக்கு மாறவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

      • கேதாரியின் இளம் வயது மனைவிக்கும் இதே அவல நிலை ஏற்படுவதைக் காட்டிச் சமூகம் இத்தகைய சமூகச் சிக்கல்களிலிருந்து விடுவித்துக் கொள்ளப் பாடுபட வேண்டும் என்பது உணர்த்தப்படுகிறது.

      • 'மொட்டைப் பாப்பாத்தி முகத்தில் விழித்தால் பாவம்' என்னும் சமூகத்தின் போக்கு மாற வேண்டும் என்பது காட்டப்படுகிறது.

      • ஒரு சமூகத்தின் சாஸ்திரங்கள் அச்சமூகத்தினரின் மனநலத்தைப் பேண வேண்டுமே ஒழிய, மனநலம் பாதிப்பதற்குக் காரணமாகக் கூடாது என்பது இக்கதையின் சமூகப் பயனாக எடுத்துக் கூறப்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 22-09-2017 16:25:35(இந்திய நேரம்)