தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • 2.2 கவனத்தில் கொள்ள வேண்டியவை

    1)

    செய்திகளைப் புரியும்படி தருதல்,

    2)

    செய்திகளைச் சிதைத்தல் கூடாது.

    3)

    சிக்கல் ஏற்படும்போது கவனம்.

    4)
    பத்திரிகையின் மதிப்பு உயரக் கையாளும் நடவடிக்கை.
    5)
    ஐயமான செய்தியெனில் வெளியிடாமல் அகற்றிவிடல்
    6)
    செய்தி முக்கியத்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு.
    7)
    செய்தியின் மூல ஆதாரங்களை ஆராய்தல்

    முதலியன செம்மையாக்கம் செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டியவற்றுள் முக்கியமானவையாகும்.

    2.2.1 புரியும்படி தருதல்

    நீண்ட செய்திகளையும் மிகச் சுருக்கமாகக் குறைந்த சொற்களில் கூறி வாசகர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

    எட்டு, பத்துப் பக்கங்களில் மட்டுமே தமிழ் நாளிதழ்கள் செய்திகளை வெளியிடுவதால், முக்கியமான செய்திகள் அனைத்தையும் வெளியிட வேண்டியது இன்றியமையாததாகும்.

    செய்திகளை வாசகர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும், விறுவிறுப்பாக இருக்கும்படியும் வெளியிட வேண்டும்.

    2.2.2 சிதைத்தல் கூடாது

    ஒரு செய்தியைத் தொடர்ந்து ஆர்வமுடன் படிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    செய்திகளைத் தவறாகவோ, செய்தியின் நோக்கத்தைச் சிதைப்பதாகவோ ஒரு செய்தியை வெளியிட்டுவிடக் கூடாது. முக்கியமான செய்திகளை முக்கியப் பக்கங்களில் வெளியிட முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    செய்திகளில் சொற்களை எளிமையாகத் தரவேண்டும். செய்தித் தொடர்கள் ஒன்றுக்கொன்று கோர்வையாக இருக்க வேண்டும். செய்திகளுக்குத் துணைத் தலைப்புக்கள் கொடுத்து எளிதில் செய்தியை வாசகர் உள்வாங்கும்படி வெளியிட வேண்டும்.

    2.2.3 சிக்கலைத் தவிர்த்தல்

    சில நேரங்களில் செய்தியை வெளியிட்டவரின் பெயரை வெளியிடுவதால் சிக்கல் ஏற்படக்கூடும். அப்போது செம்மையாக்கம் செய்பவர் அவரது பெயரைக் குறிப்பிடாமல், ‘அரசு வட்டாரங்கள் கூறுகின்றன’, ’நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன’ என்று பொதுவாகக் குறிப்பிட்டு, செய்தியை வெளியிடுவதே சிறந்தது.

    செய்தியின் மொழிநடை எளிமையாகவும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருக்க வேண்டும். எழுத்துப் பிழைகள் நேரா வண்ணம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கலைச்சொற்கள் சிக்கலானவையாக இருந்தால் அவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் எளிமைப்படுத்தித் தர வேண்டும்.

    2.2.4 மதிப்பை உயர்த்தல்

    எந்தச் செய்திக்கு எந்த அளவு (Points-Font size) எழுத்துத் தேவை, எப்படிப் பத்திகளாகப் பிரித்து எழுதலாம் என்பதிலும் கவனம் தேவை.

    தேவையற்ற செய்திகளையும் தொடர்களையும் நீக்குதல், சுருங்கக் கூறி விளங்க வைத்தல், செய்தித் தலைப்பை ஈர்ப்புடையதாக அமைத்தல் முதலியன செய்திக்குச் சிறப்புத் தருபவை. இருபொருள்படும் நிலையிலோ மாறுபட்ட பொருள்தரும் வகையிலோ செய்திகளை வெளியிடக் கூடாது. குழப்பமில்லாத தெளிவான மொழிநடையால் செய்தி அமைய வேண்டும். இவற்றால் செய்தியின் மதிப்புக் கூடும்.

    செய்தியை ஆற்றல்மிக்க நடையில் கூறும்போது வாசகர் மனத்தில் அது கல்வெட்டாய்ப் பதிகிறது. சொல்லாட்சித்திறம் மிக்கவர்கள் சுவையாக, புதுமையாக, விறுவிறுப்பாகச் செய்திகளைத் தருகின்றனர். இதனால் பத்திரிகையின் மதிப்பு உயர்கின்றது.

    செய்திகள் சரியானவையா, உண்மையானவையா என்பதைக் கூர்மையாகக் கவனித்து வெளியிட வேண்டும். தவறான செய்தியை வெளியிட்டுவிட்டால் ஒரு பத்திரிகை கட்டிக்காத்து வந்த உயர்ந்த மதிப்பை இழக்க நேரிடும்.

    2.2.5 ஐயத்திற்குரியவற்றை அகற்றல்

    ஒரு செய்தி உண்மையா பொய்யா என்ற சந்தேகம் வந்தால் அந்தச் செய்தியை ஒதுக்கிவிடுவதே நல்லது. ‘சந்தேகம் வந்துவிட்டால் அதைப் போடாதே!’ (“When in doubt, Cut it out!”) என்பது இதழியல் பொன்மொழி. தினத்தந்தி நாளிதழ் நிறுவனரான சி.பா. ஆதித்தனார், “ஒரு செய்தியை வெளியிடலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஏற்பட்டால் அதை வெளியிடக் கூடாது; சந்தேகத்தை நீக்கிய பின்னரே வெளியிட வேண்டும். தவறான செய்தியை வெளியிட்டுக் கெட்ட பெயரெடுப்பதற்கு, அதை வெளியிடாமலிருப்பதே நல்லது” என்று தனது பத்திரிகை ஊழியர்களுக்குக் கூறியுள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.

    2.2.6 இட ஒதுக்கீடு செய்தல்

    ஒரு செய்தியின் முக்கியத்துவத்திற்கு ஏற்பப் பத்திரிகையில் முக்கியப் பக்கத்தில் செய்தி இடம்பெறவேண்டும்.

    பெரிய எழுத்துக்களில் முக்கியச் செய்தி அமைவதோடு, அதற்கு ஆதரவாகப் புகைப்படங்கள் செய்தியின் அருகில் இடம்பெறுவதும் செய்திக்குரிய முக்கியத்துவத்தைக் காட்டும். நாளிதழாயின் அன்றைய செய்திகளில் முக்கியமானதைச் சுவரொட்டியிலும், வார இதழாயின் அட்டையிலும் அதுபற்றிய தலைப்பினை அச்சிடுவது நல்லது.

    2.2.7 மூல ஆதாரங்களை ஆராய்தல்

    செய்தியின் அமைப்பு முறை வாசகர்களின் நினைவாற்றலுக்குத் துணைசெய்தல் வேண்டும். செய்தியைச் செம்மைப்படுத்துபவர் செய்தியின் மூல ஆதாரம் (Source) சரிதானா என்று கவனித்தல் நல்லது. செய்தியின் படத்தை எந்த இடத்தில் இடம்பெறச் செய்தால் வாசகருக்கு எளிதில் புரியும் என்பதையும் செம்மையாக்கம் செய்பவர் சுட்டிக்காட்ட வேண்டும்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.

    பத்திரிகையின் செய்திகளை யார் யாரெல்லாம் செம்மையாக்கம் செய்கின்றனர்?

    2.

    செய்தியை வெளியிட்டவரின் பெயரை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும் என்ற சூழலில் என்ன செய்ய வேண்டும்?

    3.

    செய்தியின் மதிப்பு எப்போது உயரும்?

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 13:16:57(இந்திய நேரம்)