தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செம்மையாக்கக் குறியீடுகளின் பயன்பாடு

  • 4.3 செம்மையாக்கக் குறியீடுகளின் பயன்பாடு

    ‘செம்மையாக்கமும் குறியீடுகளும்’ என்ற இயலில் நாளிதழ்களில் பயன்படுத்தப்படுகின்ற குறியீடுகள் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகிய நாளிதழ்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி இங்குக் கூறப்படுகின்றது. இந்த நான்கு நாளிதழ்களிலும் தலைப்புச் செய்திகளில் மட்டும் செம்மையாக்கக் குறியீடுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை 22.03.2004 தேதியிட்ட தினமணி, 20.03.2004 தேதியிட்ட மற்ற நாளிதழ்களைக் கொண்டு இங்கு விளக்கப்படுகின்றது.

    4.3.1 கேள்விக் குறியின் பயன்பாடு (?)

    கேள்விக்குறி இட்டுத் தலைப்புச் செய்திகளை நாளிதழ்கள் தொடர்ந்து வெளியிடுகின்றன. தினமணியில்

    உயர் பதவிக்கு வெளிநாட்டவர் வரலாமா?
    காங்கிரசுக்கு பா.ஜ.க. கேள்வி

    (22.03.04)

    என்னும் தலைப்புச் செய்தியில் உயர் பதவிக்கு வெளிநாட்டவர் வருவது நன்மை தருமா, தீமை விளைவிக்குமா என்ற தர்க்கத்தை முன்வைப்பதாக இந்தக் கேள்வி உள்ளது. ஒரு தேசியக் கட்சியை நோக்கி மற்றொரு தேசியக் கட்சி எழுப்பிய கேள்வியை அப்படியே கேள்வியாகத் தலைப்பில் அமைப்பது செய்தியை நேரடியாக ஊட்டும் உத்தியாகும். கேள்விக்குறி நாளிதழ்களில் இப்படி உண்மையை உள்ளவாறு உணர்த்துவதற்குச் சில இடங்களில் பயன்படுகின்றது.

    சில இடங்களில் இந்தச் செய்தி உண்மையா வதந்தியா என்ற வியப்பான குழப்பத்தை உணர்த்தவும் கேள்விக்குறி பயன்படுவது உண்டு. உதாரணமாக, தினமலரில்,

    திருப்போரூர் கோயில் ஆதீனம்
    திடீர் மாயம்?

    (20-03-2004)

    என்னும் தலைப்பில் ஆதீனம் மாயமானது உறுதியான செய்தியா என்ற சந்தேகத்தையே அந்தக் கேள்விக்குறி எழுப்புகின்றது. அல்லது மாயமான ஆதீனம் எங்கே போனார், என்ன ஆனார் என்ற மர்மத்தை ஆராய்வது போலவும் அந்தக் கேள்விக்குறி அர்த்தப்படுத்துவதாகக் கொள்ளலாம். மேல் விவரங்கள் முழுமையாகத் தெரியாததால் இங்கே கேள்விக்குறி பயன்படுத்தப்பட்டதாகக் கருதலாம். தினமலரில் (20-03-04) வேறொரு தலைப்புச் செய்தியில் இதே போல் கேள்விக்குறி இடப்பட்டுள்ளதையும் இங்கே குறிப்பிடலாம்.

    கோடை மழை காப்பாற்றுமா?
    10 ஆண்டுகள் நடந்தது என்ன?

    இவற்றுள் முதல் கேள்வி எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவதாகவும் இரண்டாவது கேள்வி கடந்த காலம் காட்டிய உண்மையை ஆராய்ந்து கூறுவதாகவும் அமைகின்றன. இயற்கையின் நிலை ஓராண்டு போலவே அடுத்த ஆண்டும் இருக்கும் என்று நம்ப முடியாது. இந்தக் கேள்விக்குறியின் பயன், சந்தேகத்தை உருவாக்குவதாகவே உள்ளது. முழுமையாகத் தெரியாத ஒன்றைச் செய்தியாக வெளியிடும்போது கேள்விக்குறி இடப்படுவதாகக் கூறலாம்.

    தினத்தந்தியில் கேள்விக்குறியிட்ட தலைப்புகள் அதிக அளவில் இடம்பெறவில்லை. செய்தியில் யாராவது கேள்வி கேட்டிருந்தால் அதைத் தலைப்பில் அப்படியே கேள்வியாகவே காட்டும் வழக்கம் தினத்தந்தியில் காணப்படுகிறது.

    அடுத்தவன் மனைவியைத் தன் மனைவி என்று
    எப்படி உரிமை கொண்டாட முடியும்?


    மலேசிய வாலிபர் கார்த்திகேயனிடம் நீதிபதி கேள்வி

    என்ற செய்தியில் கேள்விக்குறி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது நீதிபதி கேட்ட கேள்வியை அப்படியே நேரடியாகத் தந்த முறையாகும்.

    முழுமையான செய்தியாக இல்லாத, பிரபலங்களைப் பற்றிய சுவாரஸ்யமான வதந்திகள் செய்தி போன்ற முக்கியத்துவத்தைப் பெறுவதும் உண்டு. அப்போது கேள்விக்குறி பயன்படுத்தப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக,

    பின்லேடனின் தளபதி
    குண்டு வீச்சில் காயம்?

    என்ற செய்தி 20-03-2004 தினகரன் நாளிதழில் செய்தித் தலைப்பில் கேள்விக்குறி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

    1)

    செய்தியில் ஒரு பிரமுகரை அல்லது அமைப்பினை நோக்கி மற்றொரு பிரமுகர் கேட்ட கேள்வியை அப்படியே மேற்கோளாக எடுத்துக் கூறும்போது

    2)

    செய்தி முழுமையாகத் தெரியாமல் பாதி தெரிந்த நிலையில்

    3)

    ஒரு பிரபலம் பற்றிக் கசிந்துவரும் சுவையான வதந்தியைச் செய்தியாக்கும்போது.

    ஆகிய சூழல்களில் கேள்விக்குறிகள் செய்தி இதழ்களில் இடம்பெறுவதை அறிந்துகொள்ளலாம்.

    4.3.2 ஆச்சரியக் குறியின் பயன்பாடு (!)

    நாளிதழ்களில் ஆச்சரியக் குறிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வியப்பு மிகுந்த செய்திகளுக்கும், ஒரு நிகழ்ச்சி நடக்க வாய்ப்பு உள்ளதா என்று சந்தேகத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் செய்திகளுக்கும் ஆச்சரியக்குறி இடப்படுகின்றது.

    தினமணியில்,

    இன்று உலகத் தண்ணீர் தினம்
    மழைக்காக ஏங்கும் சிறுவாணி அணை!

    என்னும் செய்தித் தலைப்பில் ஆச்சரியக்குறி பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று எங்குப் பார்த்தாலும் தண்ணீர்ப்பஞ்சம் உள்ளது. இந்நிலையில் செழிப்பான சிறுவாணி அணை இப்படி வறட்சியாகக் காணப்படுகிறதே! மழை பெய்யுமா? இந்த அணையின் தண்ணீர் மட்டம் உயருமா? என்ற அடிப்படையில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

    தினமலரில் தலைப்புகள் ஓரிரு வார்த்தைகளில் தான் இப்பொழுது வெளியிடப்படுகின்றன. தலைப்புச் செய்திகள் ஓரிரண்டு தொடர்களில் கொடுத்த நிலைமை இன்று மாறிவிட்டது. ஓரிரு வார்த்தைகளில் தலைப்புச் செய்திகள் கொடுப்பது தினமலரில் மட்டும்தான் உள்ளது. சான்றாக,

    தயக்கம்!
    கோஷ்டி கானம்!

    (20-03-04)

    என்னும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளில் ஆச்சரியக்குறி பயன்படுத்தப் பட்டுள்ளது, இரண்டு தலைப்புகளும் வெவ்வேறு செய்திகளைக் கொண்டவை.

    தினத்தந்தியில் ஆச்சரியக்குறி தலைப்புச் செய்திகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. ஒரு நாளின் இதழில் ஓரிடத்தில் தான் ஆச்சரியக்குறி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் போட்டியை
    நேரில் காணமுடியவில்லையே!

    (20-03-04)

    என்னும் தலைப்புச் செய்தியில் மட்டும் தினத்தந்தி ஆச்சரியக்குறியைப் பயன்படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் செல்லமுடியவில்லையே என்பதைப் பற்றிய வருத்தத்தினை இச்செய்தி கூறுகிறது.

    தினகரனில் ஆச்சரியக்குறியிட்ட செய்தித் தலைப்புகள் கொடுக்கப்படவில்லை.

    4.3.3 கால்புள்ளியின் பயன்பாடு (,)

    ஒரு தலைப்பை நீண்டதாகக் கொடுக்கும்போது எளிதாகப் படிப்பதற்காகவும் தொடர்ப்பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் நாளிதழ்களில் கால்புள்ளி ( , ) பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக,

    ஜாதி, பணபலத்தை எதிர்க்க
    தலித்துகள் ஒன்றுபட வேண்டும், பெர்னாண்டஸ்

    என்று தினமணியில் கால் புள்ளி (,) பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

    தினகரனில் கால்புள்ளி எந்தத் தலைப்பிலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் செய்திகளின் இடையே தொடர் அமைப்பைச் சீர்படுத்தக் கால்புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. தினமணி, தினமலர், தினத்தந்தி ஆகிய நாளிதழ்களின் செய்திகளின் இடையேயும் கால்புள்ளி தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    4.3.4 அரைப்புள்ளியின் பயன்பாடு (;)

    அரைப்புள்ளியும் நாளிதழ்களில் தொடர் அமைப்புக்களைச் சீர்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது.

    தினமணியில்,

    வெற்றி, தோல்வி கவலை இல்லை;
    இத்தொடரில் நட்புக்கே முக்கியத்துவம்
    பாக். பரம ரசிகர் ‘சாச்சா’ ஜலீஸ்

    (22-03-04)

    எனும் கிரிக்கெட் தொடர்பான தலைப்புச் செய்தியில் இல்லை என்ற சொல்லின் இறுதியில் அரைப்புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தலைப்பின் நீண்ட தொடர் பிரித்துக் காட்டப்பட்டுள்ளதால் புரியும் தன்மை எளிதாக உள்ளது.

    தினமலரில் கட்சிகளின் பெயர் (தி.மு.க. ; அ.தி.மு.க.; காங்.;) படிப்புகளின் பெயர் இவற்றின் இறுதியில் அரைப்புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பார்வையற்ற மாணவருக்கு பிஎச்.டி; பட்டம்

    என்னும் தலைப்பில் பிஎச்.டி. பட்டத்தின் இறுதியில் அரைப்புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தினத்தந்தியில்,

    மின்சார மோட்டாரில் சிக்கியதில்
    இடது கை துண்டானது;
    கல்லூரி மாணவர் சாவு
    விடுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது
    பரிதாபம்!

    (20-03-04)

    என்னும் செய்தியில் அரைப்புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘துண்டானது’ என்னும் சொல்லின் இறுதியில் தொடர் ஒருங்கிணைப்பிற்காக அரைப்புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. தினகரனில் தலைப்புச் செய்திகளில் அரைப்புள்ளி பயன்படுத்தப்படவில்லை.

    4.3.5 முற்றுப்புள்ளியின் பயன்பாடு (.)

    ஒரு தொடரை முடிப்பதற்காக முற்றுப் புள்ளி பயன்படுத்தப்படுகிறது. ஆனால் செய்தித் தலைப்புகளில் தினமணி, தினமலர், தினத்தந்தி, தினகரன் ஆகிய நான்கு இதழ்களிலுமே முற்றுப் புள்ளி பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் ஒரு புள்ளியைக் கூடுதலாகச் சேர்ப்பது இவ்விதழ்களைப் பொறுத்தவரை கூடுதல் பணி மற்றும் இட அடைப்பு என்றே எண்ணுகின்றன. அத்துடன் தலைப்புச் செய்திகளின் இறுதியில் முற்றுப்புள்ளி தேவையில்லை. புள்ளி வைக்காவிட்டாலும் தலைப்புச் செய்திகள் ஓரிரு தொடர்களில் முடிந்த பொருளை உணர்த்திவிடுவதும் முற்றுப் புள்ளியைத் தவிர்ப்பதற்குக் காரணம் எனலாம்.

    4.3.6 முக்காற் புள்ளியின் பயன்பாடு - கோலன் (:)

    ஒரு செய்தியின் தொடர்ச்சியைக் குறிப்பதற்காக முக்காற் புள்ளி பயன்படுத்தப்படுகிறது.

    தினமணியில்,

    முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு:
    த.மு.மு.க. வலியுறுத்தல்

    பேரவைத் தேர்தல்:
    தெலுங்கு தேசம் வேட்பாளர் முதல் பட்டியல்

    (22-3-04)

    என்பன போன்ற தலைப்புச் செய்திகளைக் கூறலாம். தினமணியில் முக்காற் புள்ளிகள் தலைப்புகளில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட இருவேறு செய்திகளில் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவை என்பதை த.மு.மு.க கட்சி வலியுறுத்துவதை இச்செய்தி உணர்த்துகிறது. முதலில் இட ஒதுக்கீடும், அதன் தொடர்ச்சியாகக் கட்சியும் சொல்லப்பட்டுள்ளதால் இங்கே முக்காற் புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இரண்டாவது செய்தியில் பேரவைத் தேர்தலின் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்சிகளின் பட்டியல் பற்றிக் கூறிவிட்டுத் தெலுங்கு தேசம் கட்சி பற்றிய செய்தி முக்காற் புள்ளிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தினமணியில்,

    பேட்டிங் மோசம்: இந்தியா தோல்வி

    என்ற கிரிக்கெட் செய்தியில் செய்தியின் தொடர்ச்சியைப் புலப்படுத்த முக்கால் புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. தினத்தந்தியிலும் செய்தித் தொடர்ச்சியைத் தெரிவிப்பதற்காகவே இரட்டைப் புள்ளி பயன்படுத்தப் பட்டுள்ளது.

    தினகரனில்,

    மதுரையில் நடந்தது:
    ஐகோர்ட் கிளை அமைக்கப் பாடுபட்ட
    வழக்கறிஞர்களுக்குப் பாராட்டு விழா

    (20-3-04)

    என்னும் செய்தியைச் சான்றாகக் காட்டலாம். மதுரையில் கோர்ட் கிளை அமைக்கப் பாடுபட்டதால் பாராட்டு விழா என்ற இரண்டு செய்திகளை இணைக்க முக்காற் புள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    4.3.7 ஒற்றை மேற்கோளின் பயன்பாடு (‘ ’)

    தலைப்புச் செய்திகளில் ஒரு சொல்லை வித்தியாசப்படுத்திக் காட்டவோ ஒரு சிறப்புப் பெயரைச் சுட்டவோ ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்படுகிறது. சான்றாகத் தினமணியில்,

    மதுரை இளைஞர் தயாரித்த
    ‘அந்தி மழை’ வீடியோ படம்

    (23-3-04)

    என்னும் தலைப்புச் செய்தியைக் கூறலாம். இதில் ராஜேஷ்கன்னா என்பவர் தயாரித்த வீடியோ படம் ‘அந்தி மழை’ என்பதை, அதன் சிறப்புப் பெயரைத் தனித்து வேறுபடுத்திக்காட்ட ஒற்றை மேற்கோள் குறி பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தினமலரில்,

    மார்ச்சிலேயே வந்தது ‘ஏப்ரல்’

    (20-3-04)

    என்னும் தலைப்புச் செய்தியைச் சான்றாகக் கூறலாம். ஏப்ரல் மாதத்தில்தான் வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தொடும். ஆனால் அந்த அளவு வெயில் மார்ச் மாதத்திலேயே வந்துவிட்டது என்பதைக் குறிக்கவே ‘ஏப்ரல்’ ஒற்றை மேற்கோளில் தரப்பட்டுள்ளது.

    தினத்தந்தியில்,

    மதுரையின் ‘அறிவுக்கரசி’
    மாணவி ஜனனி பிரியா
    பல்கலைக்கழக விழாவில்
    தேர்ந்தெடுக்கப்பட்டார்

    (20-3-04)

    என்னும் செய்தியைச் சான்றாகக் கூறலாம். இதில் அறிவுப் போட்டியில் வென்ற மாணவிக்கு ‘அறிவுக்கரசி’ என்ற சிறப்புப் பட்டம் கொடுக்கப்படுவதைக் குறிப்பாகக் காட்டவே ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தினகரனில்,

    ‘ராமர் கோயில்’ கொள்கையை
    ஒருபோதும் கைவிட மாட்டோம்

    (20-3-04)

    என்று வெளியாகியுள்ள செய்தியைச் சான்றாகக் கூறலாம். ‘ராமர் கோயில்’ என்ற, எல்லோரும் அறிந்த சிக்கலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுக் காட்டவே இங்கே ஒற்றை மேற்கோள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    4.3.8 இரட்டை மேற்கோளின் பயன்பாடு (“ ”)

    நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளில் இரட்டை மேற்கோள் குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு தலைப்பின் ஆரம்பத்திலும் முடிவிலும் இரட்டை மேற்கோள் பயன்படுத்தப்படுகின்றது. ஒருவர் சொன்ன வாசகத்தை முழுவதும் மாற்றாமல் அப்படியே வெளியிட இரட்டை மேற்கோள் பயன்படுத்தப்படுகின்றது. தினமணியில் தலைப்புச் செய்திகளில் இரட்டை மேற்கோள் பயன்படுத்தப்படவில்லை.

    தினமலரில்,

    “அடுத்தவன் மனைவியைத் தேடி
    சென்னை வந்து தகராறு செய்கிறாயா?”
    மலேசியா வாலிபரிடம் நீதிபதி கேள்வி

    (20-3-04)

    என்ற செய்தியில், நீதிபதி கேட்ட கேள்வியை அவரது வாசகமாக அப்படியே வெளியிட்டிருப்பதால் இங்கே இரட்டை மேற்கோள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தினத்தந்தியில்,

    தமிழகத் தேர்தல் பாதுகாப்பிற்கு
    “65 கம்பெனி மத்திய போலீசார் வருவார்கள்” டி.ஜி.பி. தகவல்

    (20-3-04)

    என்று வெளியிட்டுள்ள செய்தியினைச் சான்றாகக் கூறலாம். டி.ஜி.பி. கூறும் தகவலை அப்படியே தந்துள்ளதால் அந்த வாசகம் இரட்டை மேற்கோள் குறிக்குள் தரப்பட்டுள்ளது.

    தினகரனின் தலைப்புச் செய்திகளில் இரட்டை மேற்கோள் பயன்படுத்தப்படவில்லை.

    4.3.9 சிறுகோட்டின் பயன்பாடு (-)

    நாளிதழ்களில் சிறுகோடுகள் இரண்டு பெயர்கள் அடுத்தடுத்து வருமிடங்களில் அவற்றின் இடையேயும், எண்களை அடுத்து இத்தனாவது என்று குறிப்பிடும்பொழுதும், இது இன்னாருடைய கருத்து அல்லது வாக்குமூலம் என்பதைச் சுட்டும்போதும் பயன்படுத்தப்படுகின்றன.

    தினமணியில்,

    வாஜ்பேயி பிரதமராக நீடித்தால்
    இந்தியா - பாக்கிஸ்தான் இணையும்
    வாய்ப்பு உண்டு
    இல.கணேசன் கருத்து

    (22-3-04)

    என்று வெளியிட்டுள்ள செய்தியைச் சான்றாகக் கூறலாம். இச்செய்தியில் இந்தியா-பாக்கிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் பெயர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்குச் சிறுகோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மூன்றாவது என்று குறிப்பிடும்போது, எண்ணை அடுத்தும் சிறுகோடு இடப்படும். அதற்குச் சான்றாக,

    மக்களவைத் தேர்தல்: 2-வது பட்டியலை வெளியிட்டது தேசியவாத காங்கிரஸ்

    (22-3-04)

    என்ற செய்தியைச் சான்றாகக் காட்டலாம்.

    தினமலரில்,

    புவனேஸ்வரி கைது செய்யப்பட்டது
    எப்படி? - பெண் போலீஸ் ஏட்டு சாட்சியம்

    (20-3-04)

    என்ற செய்தி வெளியிட்டுள்ளதைக் கூறலாம், இதில் ‘எப்படி?’ என்னும் சொல்லிற்கு அடுத்து சிறுகோடு பயன்படுத்தி, அக்கருத்தை விளக்கி சாட்சியம் சொன்னவர் இன்னார் (பெண் போலீஸ்) என்பதை அந்தச் சிறுகோடு குறிப்பதாக உள்ளது.

    தினத்தந்தியில்,

    பள்ளிக்கூடம் - பாலத்தில்
    தேர்தல் விளம்பரங்கள்
    அரசியல் கட்சியினர் 5 பேர் மீது வழக்கு

    (20-3-04)

    என்ற தலைப்புச் செய்தியில் சிறுகோடு பயன்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடம், பாலம் என்னும் இரண்டு சொற்களும் பெயர்ச் சொற்கள் என்பதால் அவற்றைப் பிரித்துக்காட்ட இங்கே சிறுகோடு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தினகரனில்,

    முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர்
    எம்.எஸ்.கில்-கருணாகரன்
    6 பேர் எம்.பி.யாகத் தேர்வு

    (20-3-04)

    என்று வெளியான செய்தியில் இரண்டு பெயர்களுக்கு இடையே சிறுகோடு பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.

    பல்வேறு செம்மையாக்கக் குறியீடுகள் நாளிதழ்களில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து இக்கட்டுரை விளக்கியுள்ளது.

புதுப்பிக்கபட்ட நாள் : 19-09-2017 18:25:47(இந்திய நேரம்)