தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A0111-காப்பியக் கட்டமைப்பு

4.2 காப்பியக் கட்டமைப்பு

    ஒரு கதையைக் காப்பியமாக வடிவமைப்பதில் அதன் கட்டமைப்பு முக்கிய இடத்தைப் பெறும். காப்பியக் கட்டமைப்புக் கூறுகளில் புறநிலைக் கட்டமைப்பும் அகநிலைக் கட்டமைப்பும் சிறப்பான இடத்தைப் பெறும். காப்பியத் தலைவனின் பிறப்பு முதல் அவன் மேற்கொள்ளும் தவ வாழ்க்கை வரையிலான செயல்பாடுகளை விளக்குவது, விவரிப்பது ஒரு வகை; மற்றொரு வகை அவனது வாழ்வின் முக்கிய நிகழ்ச்சியில் தொடங்கித் தேவைக் கேற்ப முன் பின் நிகழ்வுகளை நிரல்படுத்துவது மற்றொரு வகை; இவ்வகையில் சீவக சிந்தாமணி முதல் வகையில் அமைவது. சீவகன் பிறப்பு முதல் தொடங்கி அவன் பல்வேறு திருமணங்களைச் செய்து, கட்டியங்காரனை வென்று, தன் நாட்டு ஆட்சியை முறைப்பட நிகழ்த்தி, இறுதியில் அவன் துறவு மேற்கொள்வதையே காப்பியம் நிரல்படச் சொல்கிறது.

4.2.1 புறநிலைக் கட்டமைப்பு

புறநிலைக் கட்டமைப்பு என்ற நிலையில் தண்டியலங்காரம், சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும், காதை, படலம், காண்டம் முதலானவும் காப்பியப் பிரிவுகளாக அமைகின்றன. இவ்வகையில் சீவகசிந்தாமணி இலம்பகம் என்ற பிரிவில் நாமகள் இலம்பகம், கோவிந்தையார் இலம்பகம், காந்தருவ தத்தையார் இலம்பகம், குணமாலையார் இலம்பகம், பதுமையார் இலம்பகம், கேமசரியார் இலம்பகம், கனகமாலையார் இலம்பகம், விமலையார் இலம்பகம், சுரமஞ்சரியார் இலம்பகம், மண்மகள் இலம்பகம், பூமகள் இலம்பகம், இலக்கணையார் இலம்பகம், முத்தி இலம்பகம் எனப் பதின்மூன்று இலம்பகங்களைக் கொண்டுள்ளது. இப்பாகுபாட்டை நோக்க ஓர் உண்மை புலனாகிறதன்றோ? அது என்ன உண்மை? தெரியவில்லையா? இவை அனைத்தும் பெண்ணை மையமாகக் கொண்டு அமைகிறதல்லவா?

    சீவகன் எட்டு மகளிரை மணந்தது அவர் தம் பெயராலேயே எட்டு இலம்பகங்களாக அமைகின்றன. அவன் தோழன் பதுமுகன் கோவிந்தையை மணந்தது கோவிந்தையார் இலம்பகம்; சீவகன் கல்வி கேள்விகளில் சிறப்புற்றது நாமகள் (கலைமகள்) இலம்பகம்; தன் நாட்டை மீட்டது மண்மகள் இலம்பகம்; நல்லாட்சி நடத்தியது பூமகள் இலம்பகம்; துறவு மேற்கொண்டு வீடுபேறு பெற்றது முத்தி இலம்பகம்.

    இவற்றோடு, காவிய மரபுப்படி வாழ்த்து, வணக்கம், அவையடக்கம் எனத் தற்சிறப்புப் பாயிரமாக மூன்று பாடல்களுடன் காவியம் தொடங்குகிறது. பதிகம் பாடுகிற மரபு சிலம்பில் தொடங்கினாலும் அங்குக் காப்பிய ஆசிரியர்களே பதிகம் பாடுகிற மரபு இருந்ததாகத் தெரியவில்லை. சிலம்பிலும் மணிமேகலையிலும் உள்ள பதிகம் பிற்சேர்க்கை என்பது குறிப்பிடத் தக்கது. காப்பியப் பதிகம் ஆசிரியரால் முதன் முதல் பாடப்படுவது சீவக சிந்தாமணியிலேயே. இங்கு, 26பாடல்கள் காப்பியக் கதைச் சுருக்கமாக அமைகின்றன. காப்பியம் 3145 விருத்தப்பாக்களால் அமைந்துள்ளது. அவை பெரும்பாலும் நான்கு சீர்களாலான விருத்தப்பாக்களே. ஒரு சில இடங்களில், இரு சீர் அடிகளும், 5, 6 சீர் அடிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரு பொருள் மேல் மூன்றடுக்குக் கொச்சக ஒருபோகு என்ற பாவகைப் பாடல்கள் எட்டு இடங்களில் அமைகின்றன. ஒரே சொல், நான்கு அடிகளிலும் தொடர்ந்து, பொருள் வேறுபாட்டுடன் படைக்கப் பட்டிருப்பதும் சிந்தாமணியின் கவிதைச் சிறப்பினை எடுத்துக் காட்டும்.

4.2.2 அகநிலைக் கட்டமைப்பு

    காப்பிய அகநிலைக் கட்டமைப்புக் கூறுகள் சிலவற்றைத் தண்டியலங்காரம் குறிப்பிடும். இவற்றை வருணனை, நிகழ்ச்சிச் சித்திரிப்பு என வகைப்படுத்தலாம். மலை, கடல், நாடு, நகர், இருசுடர்த் தோற்றம் என வகைப்படுத்தும். இந்த இலக்கண மரபு அப்படியே பின்பற்றப்படுவது சிந்தாமணியில் தான். நாட்டுவளம், நகர் வளம், கோயிற் சிறப்பு (அரண்மனை) எனக் காப்பியத் தொடக்க வருணனை இங்குச் சிறப்புப் பெறுகிறது. அதோடு பொழில் வருணனை, மகளிர் வருணனை முதலான வருணனைக் கூறுகளும் சிறப்பிடம் பெறுகின்றன.

    நிகழ்ச்சி வருணனையில், பொது நிகழ்வுகளாகத் திருமணம், புதல்வர்ப் பேறு, புனல்-பொழில் ஆடல், கலவியில் கலத்தல், புலவியில் புலத்தல் முதலானவும் அரசியல் நிகழ்வுகளாக மந்திரம், செலவு, தூது, இகல், வெற்றி ஆகியனவும் சிறப்பாகப் பேசப்படுகின்றன. சிலம்பில் வீடு பேறு பற்றிப் பேசவில்லை. இங்கு அதற்கு என்றே முத்தி இலம்பகம் பாடப்பட்டுள்ளது. தவிரச் சுயம்வரம் நிகழ்த்துதல், இசைப்போட்டி பற்றிய செய்தி முதலான பெருங்காப்பிய இலக்கண மரபைப் பின்பற்றிப் பாடப்பட்டுள்ள தன்மை புலப்படுகிறது.

4.2.3 காப்பியக் கதைச் சுருக்கம்

    காப்பியத்திற்குக் கதை முக்கியம் என்பது குறிப்பிடத் தக்கது. அக்கதையைக் கட்டமைப்பதில் தான் கவிஞனின் திறன் வெளிப்படுகிறது என்பர். இத்திறன் சிலம்பில் மிகச் சிறப்பாக அமைவதைக் காணலாம். இங்குச் சச்சந்தன் வரலாறு முதல் சீவகன் துறவு வரையான ஓர் அரசனின் வாழ்வியல் நிகழ்வுகள் ஒரே சீராக- தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டுள்ளது. கதையைக் காண்போம்.

● நாமகள் இலம்பகம்

    ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம்; அதன் அரசன் சச்சந்தன், தன் மனைவி விசயையுடன் காம இன்பத்தில் அதிக கவனம் செலுத்தி, அரசாட்சியில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறான். சூழ்ச்சியால் அமைச்சன் கட்டியங்காரன், அரசனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொள்கிறான். கட்டியங்காரன் சூழ்ச்சியையும், தன் இறுதி முடிவையும் அறிந்த சச்சந்தன் கரு உற்றிருந்த தன் மனைவியை, மயிற்பொறியில் ஏற்றி அனுப்பி விடுகிறான். பொறியை இயக்கத் தெரியாததால் அது சுடுகாட்டில் இறங்க, அங்கு அவளுக்குச் சீவகன் பிறக்கிறான்.

    ஏதுமற்ற சூழலில் தன்மகனை எப்படிக் காப்பாற்றுவது என எண்ணிய போது, தெய்வ அருளால் கந்துக்கடன் என்ற வணிகன் குழந்தையை எடுத்துச் சென்று வளர்க்கிறான். பின்னர்க் கந்துக்கடனுக்கு நந்தட்டன், நபுலன், விபுலன் என்ற மகன்கள் பிறக்கின்றனர். சீவகன் தம்பியரொடும் தோழர்கேளாடும் சேர்ந்து அச்சணந்தி ஆசிரியரிடம் வித்தைகளைக் கற்றனர். ஆசிரியரே சீவகன் தந்தை சச்சந்தன் என்பதை அவனுக்குத் தெரிவித்துக் கட்டியங்காரனை வெல்லும் வழிவகைகளைச் சொல்கிறார் இவை நாமகள் இலம்பக நிகழ்வுகள்.

● கோவிந்தையார் இலம்பகம்

    இந்தச் சூழலில் கட்டியங்காரனின் அரசவைப் பசுக்களை வேடர்கள் கவர்ந்து செல்ல, ஆநிரை மீட்கக் கட்டியன் மக்களால் இயலாது போகிறது. இதனால் வருந்திய இடையர் தலைவன் நந்தகோபன் ஆநிரை மீட்போர்க்குத் தன்மகள் கோவிந்தையை மணம் செய்து தருவதாக அறிவிக்கிறான். சீவகன் ஆநிரைகளை மீட்டுக் கொடுக்கக் கோவிந்தையைத் தன் தோழன் பதுமுகனுக்குத் திருமணம் செய்கிறான்.

● காந்தருவ தந்தையார் இலம்பகம்

    வெள்ளி மலை வித்தியாதர அரசன் கலுழவேகன், தன்மகள் காந்தருவ தத்தையை மணப்பவன் இராசமாபுரத்தில் உள்ளான் என்பதைச் சோதிடத்தால் அறிந்து, தத்தையை அந்நகர் வணிகன் தத்தன் இல்லத்தில் தங்கச் செய்கிறான். அங்குத் தத்தையை இசைப்போட்டியில் வெல்வார்க்கு அவளை மணஞ்செய்து கொடுப்பதாக அறிவிக்கிறான். போட்டியில் பன்னாட்டு அரசர்களும், மேல்வருணத்தாரும் தோற்கச் சீவகன் தத்தையை மணக்கிறான். இதனை எதிர்த்த அரசர்களைச் சீவகன் போரில் வெல்கிறான்.

● குணமாலையார் இலம்பகம்

    இளவேனில் காலத்தில் பொழில் விளையாடச் சென்ற தோழியர் குணமாலை, சுரமஞ்சரி ஆகியோருக்கு இடையே சுண்ணப் போட்டி எற்படுகிறது. யார் இடித்த சுண்ணம் சிறந்தது என்பதே இங்குப் பிரச்சினை; இப்பிரச்சினை பலரால் தீர்க்கப் படாதிருக்க, சீவகனிடம் காட்டுகின்றனர். அவன் இருவரின் சுண்ணத்தை எடுத்து வானிலே வீச, குணமாலையின் சுண்ணத்தை வண்டுகள் உண்ணக் கண்டு, அதுவே சிறந்தது என்கிறான். சுரமஞ்சரி, சீவகன் தன் சுண்ணத்தை இகழ்ந்தான் என வருந்தித் ‘தன்னை வந்து சீவகன் கெஞ்சும்படி செய்வேன்’ என வஞ்சினம் கூறி ‘ஆடவரையே பார்க்கமாட்டேன்’ எனச் சூளுரைத்துக் கன்னிமாடத்தில் தவமிருக்கிறாள். அப்போது, அந்தணன் ஒருவனின் சோற்றை நாய் கவ்வ, அதனை அவன் அடித்துத் துன்புறுத்துகிறான். அதற்கு இரங்கிய சீவகன், அதன் காதில் பஞ்ச நமஸ்காரம் எனும் மந்திரம் ஓதினான். அது, சுதஞ்சநன் எனும் தேவனாக மாறுகிறது. தன்னை எப்பொழுது நினைத்தாலும் உடனே உதவிக்கு வருவதாகக் கூறித் தேவன் விண்ணகம் செல்கிறான்.

        

    அப்போது, கட்டியங்காரனின் பட்டத்து யானை அசனிவேகம் மதம் கொண்டு, குணமாலையைக் கொல்ல முற்பட, சீவகன் யானையை அடக்கிக் குணமாலையைக் காக்கிறான். அன்னத்தைத் தூது விட்டுக் குணமாலை தன் காதலைச் சீவகனுடன் பரிமாறிக் கொள்கிறாள். அவள் பெற்றோர் சம்மதத்துடன் சீவகன் அவளை மணக்கிறான். சீவகன் அடக்கிய அசனிவேகம் யானை நாணி உணவு கொள்ளாதிருக்க, அரசன் சீவகனைச் சிறைப்பிடிக்கிறான். ஓராண்டுக் காலம், தான் யார் என்பதை வெளிப்படுத்தக் கூடாது என்ற ஆசிரியர் ஆணையால் சிறைப்பட்ட சீவகனை மீட்கத் தத்தையின் ஏவலால் தெய்வங்கள் வருகின்றன. இதனால் நாணிய சீவகன், சுதஞ்சநனை நினைக்க, அவன் சீவகனை மீட்டுத் தேவலோகம் எடுத்துச் செல்கிறான். சீவகனைச் சிறைப்பிடித்த மதனன், கட்டியங்காரனுக்கு அஞ்சி, வேறு ஒருவனைக் கொன்று, சீவகனைக் கொன்றதாகக் கூறிப் பரிசு பெறுகிறான்.

● பதுமையார் இலம்பகம்

    சீவகன் பல நாடுகளைக் காணவேண்டும் என விரும்பியதை அறிந்த சுதஞ்சநன், அழகுமேனி பெறுதல், விடம் நீக்குதல், விரும்பிய உருவம் எடுத்தல் குறித்த மூன்று மந்திரங்களைச் சீவகனுக்குரைக்கிறான். அதோடு, சீவகன் செல்லும் வழி கூறி, நெறிப்படுத்துகிறான். அவ்வழி, சீவகன், பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடும் வேடனைத் திருத்தி, கொல்லாமை விரதம் ஏற்கச் செய்கிறான். பின் காட்டுத்தீயால் சூழப்பட்டு வருந்திய யானைகளை மீட்கிறான். அடுத்து அரணபாதம் மலையை அடைந்து, அருகனை வழிபடுகிறான். இறுதியில், பல்லவ நாடு அடைந்து, அதன் தலைநகர் சந்திராபம் சென்று, அந்நாட்டு அரசன் தனபதியின் மகன் உலோகபாலனுடன் நட்புக் கொள்கிறான். அங்கு, உலோகபாலன் தங்கை பதுமையைப் பாம்பு தீண்ட, அதன் விடம் நீக்கிப் பதுமையை மணந்து இரு திங்கள் தங்குகிறான்.

● கேசமரியார் இலம்பகம்

    பின், பதுமையைப் பிரிந்து சித்திர கூடம் எனும் தவப்பள்ளி அடைந்து அங்குள்ள தாபதர்களைத் திருத்தி, தக்கநாட்டின் தலைநகர் கேமமாபுரம் அடைகிறான். அங்கு, வணிகன் சுபத்திரன் வீடு செல்ல, வணிகன் மகள் கேமசரி சீவகனைக் கண்டு நாண, சோதிடப்படி அவனே தன் கணவன் என்பதறிந்து மணஞ்செய்கிறான். கேமசரியுடனும் இரு திங்கள் இருந்துவிட்டுப் பின் பிரிகிறான்.

● கனகமாலையார் இலம்பகம்

    தன் பயணத்தைத் தொடர்ந்த சீவகன், பல இடங்களைக் கடந்து மத்திம நாட்டின் தலைநகர் ஏமமாபுரத்தின் கோலையை அடைகிறான். அங்கு, தத்தை மற்றும் குணமாலையை எண்ணிக் கலங்கி இருக்க, அந்நாட்டு அரசன் மகன் விஜயன் வருகிறான். அவனால் எய்து வீழ்த்த முடியாத மாங்கனியைச் சீவகன் ஒரே அம்பில் வீழ்த்தித் தன் கைக்கு வரச் செய்கிறான். சீவகனின் வில்லாற்றலை அறிந்த விஜயன், தன் நாட்டுக்கு அழைத்துச் சென்றதுடன், அரசன் மக்களுக்கு வில் வித்தை கற்பிக்கும் ஆசிரியராக்குகிறான். மகிழ்ந்த அரசன், தன்மகள் கனகமாலையைச் சீவகனுக்கு மணம் முடித்து வைக்கிறான். சீவகன் பிரிவால் வருந்திய நந்தட்டன் தந்தையின் வித்தையால் சீவகன் இருப்பிடம் அறிந்து அவனைக் காண்கிறான். ஏனையத் தோழர்களும் அவனைக் காணச் சென்ற வழியில் உள்ள தவப் பள்ளியில் சீவகன் தாயைக் கண்டு, சீவகன் அரச குமாரன் என்பதை அறிகின்றனர். பின்னர் சீவகனைக் கண்டு அவன் தாயின் இருப்பிடத்தை அறிவிக்கின்றனர். சீவகன் தோழர்களுடன் தாயைக் காணப் புறப்படுகிறான்.

● விமலையார் இலம்பகம்

    சீவகன் தண்டகாரணியம் சென்று தாயை வணங்கி அறிவுரை பெறுகிறான். அங்கு ஆறு திங்கள் தங்கி, பின் தாயின் ஆணைப்படி, மாமன் கோவிந்தனைக் காண ஏமாங்கத நாட்டின் தலைநகர் இராசமாபுரம் செல்கிறான். அங்குப் பந்தாடிய விமலையைக் கண்டு காமுற்று, அவள் தந்தை சாகரதத்தன் கடையில் சென்று அமர, கடைப்பொருள் அனைத்தும் விற்பனையாகி விடுகிறது. சாதகப்படி, அவனே தன் மகளுக்குரிய மணாளன் என்பதை அறிந்து, சீவகனுக்கு விமலையைத் திருமணம் செய்து வைக்கிறான். அவளுடன் இருநாட்கள் தங்கிய சீவகன், மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

● சுரமஞ்சரியார் இலம்பகம்

    சீவகனைக் காம திலகன் என நண்பர்கள் பாராட்ட, புத்திசேனன், ‘இங்குச் சுரமஞ்சரி ஆடவரையே வெறுத்து வாழ்கிறாள்; அவளை மயக்கித் திருமணம் செய்தால்தான் அவனைக் காமத் திலகனாக ஏற்க முடியும்’ என்கிறான். சீவகன் முதிய அந்தணர் வடிவு கொண்டு, சுரமஞ்சரியின் அந்தப்புரம் அடைந்து அவளை மயக்கி மணக்கிறான். ஒருநாள் அவளுடன் தங்கி, பின்னர், வளர்ப்புத் தந்தை கந்துக்கடனை வணங்கி, தத்தை-குணமாலையார் துயரினை நீக்கி, ஏமாங்கத நாட்டைக் கடந்து செல்கிறான்.

● மண்மகள் இலம்பகம்

    விதேய நாடு சென்று, மாமன் கோவிந்தனின் படைத்துணை பெற்று ஏமாங்கத நாட்டுக்கு மீண்டும் வந்து, கட்டியங்காரனுடன் போரிட்டு வென்று, இழந்த தன் நாட்டின் ஆட்சியைப் பெறுகிறான். மாமன் கோவிந்தன் அறிவித்த சுயவரம்படி திரிபன்றிப் பொறி போட்டியில் வென்று இலக்கணையைப் பெறுகிறான்.

● பூமகள் இலம்பகம்

    சீவகன் ஆட்சியைத் தொடங்குகிறான். கட்டியங்காரன் உறவினர்களுக்கு ஆறுதலும் பாதுகாப்பும் அளிக்கிறான். கட்டியங்காரனால் தன்புறுத்தப்பட்டவர்களுக்குச் சீவகன் வாழ்வளிக்கிறான்.

● இலக்கணையார் இலம்பகம்

    சீவகன் தன்தோழர் எல்லோரையும் வரவழைத்து, முறைப்படி இலக்கணையை மணம் செய்கிறான். பின், நகர்வலம் சென்று அருகனை வழிபடுகிறான். கந்துக்கடன்-சுநந்தைக்கு அரசு பட்டம் வழங்குகிறான்; நந்தட்டன் இளவரசனாகிறான். மற்றைத் தோழர்களுக்கும் உரிய சிறப்புகளைச் செய்கிறான். சுதஞ்சநனுக்குக் கோயில் எழுப்புகிறான்; தான் இளமையில் விளையாடிய ஆலமரத்துக்குச் சிறப்புச் செய்கிறான்.

● முத்தி இலம்பகம்

    தவப் பள்ளியில் விசையை அருகனுன்கும் தன்னைப் பாதுகாத்த தெய்வங்களுக்கும் கோயில் எடுக்கிறாள். தன்னையும் மனனையும் காப்பாற்றத் துணை செய்த மயிற்பொறியை அரண்மனை மாடத்தில் இடம்பெறச் செய்கிறாள். சீவகன் பிறந்த சுடுகாட்டை அன்னதானச் சாலையாக்கி நாளும் 505 குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குகிறாள்.. பின்னர் ‘பிறவிக்கடல் நீந்த’ச் சுநந்தையுடன் தவப்பள்ளி அடைந்து தன் துறவைத் தொடர்கிறாள். சீவகன் தேவியர்க்கு எட்டு மகன்கள் பிறக்கின்றனர். சீவகன் தேவியர் எண்மருடன் பொழில் வளம் காணச் செல்கிறான். அங்குக் கடுவன் - மந்தி (குரங்குகள்) பெற்ற பலாப்பழத்தை வேடன் கவர்ந்து செல்வதைக் கண்டு செல்வம் நிலையாமையை உணர்கிறான். பின் நகரை அடைந்து அருகனை வழிபட்டுச் சாரணர் மூலம் பிறவிப் பெருங்கடல் நீந்தும் முறையைத் தெரிந்து கொள்கிறான். அவர் மூலம் தன் முற்பிறப்பு வரலாற்றையும் அறிகிறான். பின் அரண்மனை சென்று தன் துறவை அறிவிக்கிறான்; தன் மகன் சச்சந்தனை அரசனாக்கித் தேவியர் எண்மரோடும் துறவு மேற்கொள்கிறான். வர்த்தமானரைத் தரிசித்து, விபுலகிரியில் தவம் செய்து சித்த சேத்திரம் அடைந்து வீடுபேறு அடைகிறான்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

‘சீவக சிந்தாமணி’ காப்பியம் என்ன சிறப்புப் பெயரால் அழைக்கப் படுகிறது? அதற்கான காரணம் என்ன?

2.

தேவர் பற்றி எழுந்த பழமரபுக் கதை என்ன? அக்கதை எழுந்ததற்கான காரணம் யாது?

3.

காப்பியக் கட்டமைப்பு என்றால் என்ன? சீவக சிந்தாமணி எவ்வாறு கட்டமைக்கப் பட்டுள்ளது?

4.

சீவகனைக் கட்டியங்காரன் சிறைப்பிடித்ததற்கான காரணம் என்ன?

5.

சீவகன் மனதில் துறவுச் சிந்தனை எழக் காரணம் என்ன?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:55:33(இந்திய நேரம்)