Primary tabs
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம், பத்தினியின்
சிறப்பைக் கூறும் காப்பியம், சீர்த்திருத்தக் கொள்கை உடைய
காப்பியம், பசிப்பிணியின் கொடுமையை எடுத்தியம்பிய காப்பியம்,
பண்பாட்டுப் பெட்டகமாகத் திகழும் காப்பியம், கற்பனை வளம்
மிகுந்த காப்பியம் என்ற பெருமைகளெல்லாம் மணிமேகலைக்கு
உண்டு.
தமிழில் தோன்றிய பழைய இலக்கியமான சங்க இலக்கியம்
சமயச் சார்பற்றது. சிலப்பதிகாரத்தில் பல சமயச் சிந்தனைகள்
சொல்லப்பட்டாலும், எச்சமயத்தையும் பரப்பும் நோக்கம் அதன்
ஆசிரியர்க்கு இல்லை. ஆனால் மணிமேகலை, பௌத்த
சமயத்தைப் பரப்புதலையே முதன்மை நோக்கமாகக் கொண்டது.
இத்தகைய சிறப்புப் பெற்ற முதல் நூல் மணிமேகலை.
சாத்தனார் தம் காலத்தில் தமிழகத்தில் அறிமுகமாகியிருந்த
பல்வேறு சமயத் தத்துவ மரபுகள் அனைத்தையும் இந்நூலில் பதிவு
செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மரபுகளாவன சைவம்,
வைணவம், வைதீகம், ஆசீவகம், நிகண்டம், சாங்கியம்,
வைசேடிகம், பூதவாதம் ஆகியனவாகும்.
இக்காப்பியம் முழுவதும் நாம் காணலாம்.
ஐந்தாம் காதையும் பதினோராம் காதையும்
இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.
இவ்விரு காதைகளிலும் அவர் அருளறம்
பூண்டவர், அறவழியை ஊட்டியவர்,
காமனைக் கடந்தவர், தனக்கென
சொற்களைக் கேட்க விரும்பாதவர் என்று பலவாறு
புகழப்பட்டுள்ளார்.
யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை
நிலையாமை ஆகியவற்றை இக்காவியம் ஆழமாகக் கற்பிக்கின்றது.
சக்கரவாளக் கோட்டத்தை இதற்காகவே புலவர் அறிமுகம்
செய்தார்.
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது
(மணிமேகலை, சிறைசெய் காதை, வரிகள் : 135 - 138)
என்பது சாத்தனார் அறிவுரை.
கண்ணகி வாயிலாகப் பத்தினிப் பெண்ணின் தெய்வீக
ஆற்றலை இளங்கோவடிகள் காட்டினார். அவள் தீயை ஏவ, அத்தீ
மதுரையை எரித்தது. ஆனால் சாத்தனார் படைத்த ஆதிரையைத்
தீயும் நெருங்க அஞ்சிற்று. இது சாத்தனார் வெளிப்படுத்தும்
கற்பின் மாண்பு. அரசர் முறை செய்யவில்லையேல், பெண்களுக்குக்
கற்பு சிறக்காது என்றும் கூறுகின்றார். கணவன் இறந்தவுடன் உயிர்
விடும் தலையாய கற்புடையாரையும், உடன்கட்டையேறி உயிர்விடும்
இடையாய கற்புடையாரையும், கைம்மை நோன்பு இயற்றி
மறுமையிலும் கணவனைக் கூடத் தவம் புரியும் கடையாய
கற்புடையாரையும் இவர் அறிமுகப்படுத்துகின்றார்.
மணிமேகலை மாபெரும் சீர்திருத்தக் காப்பியமாகும். சங்க
காலத்தில் பெருவழக்காக இருந்த கள்ளும், ஊன் உணவும் சமண
பௌத்த சமயங் களால் பெரிதும் கண்டிக்கப்பட்டன. இவ்வகையில்
திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாகச் சிறந்து நிற்பவர் சாத்தனாரே.
சாதுவன், நாகர்குருமகனுக்குக் கூறிய அறிவுரைகள் பல. அவற்றுள்
இன்றியமையாதவை கள்ளும் ஊனும் கைவிடத்தக்கவை
என்பதாகும்.
கயக்கு அறு மாக்கள் கடிந்தனர்
(ஆதிரை பிச்சையிட்டகாதை, வரிகள் : 84-85)
என்றும்,
தீத்திறம் ஒழிக,
(மேற்படி வரிகள்: 116-117)
என்றும் கூறிய சாதுவன்,
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டென உணர்தலின் உரவோர் களைந்தனர்
(மேற்படி வரிகள்: 88-90)
என்று அதன் பலனையும் எடுத்துக் கூறினான்.
பரத்தையாகப் பிறந்தவளும், உலகம் போற்றத்தக்க
பத்தினியாக
வாழமுடியும் என்பதனை மாதவியின் வாழ்வின் மூலம் நிறுவினார்
சாத்தனார். அவ்வாறே பரத்தைக்கு மகளாகப் பிறந்தவளாலும்
உலகம் போற்றும் அறச் செல்வியாக வாழ முடியும் என்று
மணிமேகலை வாயிலாக உணர்த்தினார். ஒழுக்கம் இல்லாத
பெண்ணின் மகன் ஆபுந்திரன் பசிப்பிணி மருத்துவனாக உயர்ந்து
நிற்றலைச் சாத்தனார் காட்டுகின்றார். பிறப்பால் உயர்ந்தவன்
அல்லாத ஆபுத்திரன், வேதம் பயின்ற அந்தணர்கட்கு
உண்மையையும் ஒழுக்கத்தையும் உணர்த்துகின்றான். பரத்தைமை
யொழுக்கம் மேற்கொண்ட ஆடவர்கள் தம் செல்வம் இழந்து
சிறப்பிழந்து அவலம் உறுவர் என்பதனைச் சாதுவன் வாயிலாக
உணர்த்தியுள்ளார்.
மணிமேகலைக் காப்பியம்,
வசியும் வளனும் சுரக்க
(மணிமேகலை, பதிகம், வரிகள்: 116-117)
என வாழ்த்தித் தொடங்குகின்றது.
மறவாது இது கேள், மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்
(பாத்திரம் பெற்ற காதை, வரிகள்: 116-117)
என்பது சாத்தனார் கோட்பாடாகும். எனவே தான் ‘மண்திணி
ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டிகொடுத்தோர் உயிர்
கொடுத்தோர்’ (பாத்திரம் பெற்ற காதை, வரிகள் 95-96) என்ப
தனையே பாவிகமாகக் கொண்டு காவியம் பாடினார் சாத்தனார்.
அவர் பசியின் கொடுமையைப்
பின்வருமாறு விளக்குவார்.
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண்அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி
(பாத்திரம் பெற்ற காதை, வரிகள்:76-80)
இக்கொடுமையை ஒழித்தலே உலகிலுள்ள அறத்திலெல்லாம்
சிறந்தது என்பதனை,
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை
(மேற்படி வரிகள்: 92-94)
என்று வற்புறுத்துகின்றார். மேலும் பிறர் உதவியில்லாமல் வாழ
முடியாத குருடர், செவிடர், முடவர் முதலியவர்க்கு உதவுதலே
உயர்வு என்பார்.
பேணுநர் இல்லோர் பிணிநடுக் குற்றோர்
யாவரும் வருக என்று இசைத்து உடன் ஊட்டி
உண்டு ஒழி மிச்சில் உண்டு ஓடு தலைமடுத்துக்
கண்படை கொள்ளும் காவலன்
(ஆபுத்திரன் அறிவித்த காதை, வரிகள்: 111-115)
என்ற பகுதியில், ஆபுத்திரன், இயலாத மக்கள் உண்டது போக,
மிஞ்சியிருந்த உணவினை உண்டு
உறங்கினான் என்கின்றார்.
இங்ஙனம் பசியின் கொடுமையை எடுத்துக்காட்டி, அதை
ஒழிப்பதே பேரறம் என்று வற்புறுத்துதற்கு ஒரு காவியத்தைப்
படைத்த மாபெரும் புலவனை உலகில் வேறு எங்கும் காண
முடியாது.
தமிழ்ப்பண்பாட்டுக் கருவூலமாக மணிமேகலை விளங்குகின்றது.
புகார், வஞ்சி ஆகிய நகர்களின் பண்பாட்டுச் சிறப்பு அழகாகக்
காட்டப்பட்டுள்ளது. அறங்கூறவையம், ஐம்பெருங்குழு,
எண்பேராயம் முதலியவையும், பொற்கொல்லர், தச்சர், குயவர்,
மணித்தொழிலாளர்,ஓவியர் முதலான பல்வினைஞர் தம் இயல்பும்,
திறமும் விளக்கப்பட்டுள்ளன. மாதவியின் திறன் பற்றிக்
கூறுமிடத்தில் நாட்டியக் கலைஞர்க்குரிய அறுபத்து நான்கு
கலைகளும் விளக்கப்பட்டுள்ளன. பத்தினிப் பெண்டிரின்
வரலாறுகள் பல இடம் பெற்றுள்ளன. அரசியல் அறம் குறித்த
செய்திகளும், ஆன்மீகச் செய்திகளும் ஆங்காங்கே
விளக்கப்பட்டுள்ளன. திருவிழாக்கள், பொழுது போக்குகள்
முதலியனவும் விளக்கம் பெற்றுள்ளன.
மணிமேகலை, சிலம்பைப் போல் கலைத்தன்மை கொண்ட
நூலன்று. மாறாக, இது அறத்தன்மை கொண்ட நூல். ஆயினும்,
சாத்தனார் தம் கலையுணர்வையும், கற்பனை ஆற்றலையும்
ஆங்காங்கே காட்டத் தவறினாரல்லர். மலர் வனம் புக்க
காதையில், உவவனத்தின் அழகை விளக்குகையில், பின்வருமாறு
அதனை வருணிக்கின்றார்.
திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்துஅலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முடமுள் தாழையும்
குடகமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரிமலர் இலவமும் விரிமலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவ வனம்.
(மலர்வனம் புக்க காதை, வரிகள்: 160-169)
இந்நூலின் ஐந்தாம் காதை, புகார் நகரத்தையும் அந்திப்
பொழுதையும்
வருணிக்கும் அழகே அழகு. அந்திப் பொழுதை,
கணவனைப் போர்க் களத்தில் இழந்தபின், தாய்வீடு புகும் ஒரு
பெண்ணோடு ஒப்பிடும் சாத்தனாரின் புனைதிறனை எண்ணி
மகிழ்வோம்.