தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 2.6-தொகுப்புரை

2.6 தொகுப்புரை

பொதுவாக, பாவேந்தர் பாரதிதாசனால் இயற்றப்பட்ட பாடல்களில்
பெரும்பாலும் தமிழ் உணர்வும், சமுதாயச் சீர்திருத்த உணர்வும்
காணப்பட்டாலும், அழியாத இயற்கைக் காட்சிகளையும்,
பொழுதுகளையும், பொருள்களையும் பற்றிப் பாடும் பொழுது கூட,
தம் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும், இலையினுள்
மறைந்திருக்கும் காய்போல் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பாடத்தில், மலை, மழை, போன்றவை தரும் அழகுக்
காட்சிகளின் சிறப்பினைக் கூறுவதோடு, தம் கருத்துகளையும்,
அவற்றின்     மூலம்     வெளிப்படுத்துகிறார். இயற்கைப்
பொருள்களாகிய, வானம், கதிரவன், நிலவு ஆகியவற்றின்
இயற்கைத் தன்மையிலும், பாரதிதாசனின் பல வகையான
பார்வையையும் குறிப்பிடுகிறார். காலை, மாலை, இரவு ஆகிய
பொழுதுகளைப் பற்றிப் பாடும் பொழுதும், மயில், கிளி போன்ற
பறவைகளைப் பற்றிப் பாடும் பொழுதும், தம் கருத்துகளை
வெளியிடுவதற்குரிய     சாதனமாகவும்     அவற்றைப்
பயன்படுத்தியுள்ளார். எனவே இயற்கையைப் பற்றிய தம்
பாடல்களில், இயற்கையில் தமக்கு ஏற்பட்ட ஈடுபாட்டை
வெளிப்படுத்தியதோடு, தமது சிந்தனைகளையும் அவை மூலம்
எடுத்துரைத்தார்.


பயில்முறைப் பயிற்சி - II

பாரதிதாசனின் இயற்கை வருணனையில்

  • எளிய நடை

  • அன்றாட வழக்கில், மனிதர்க்கு மனிதன் பேசும் பேச்சில், பயன்படுத்தும் சொற்கள்

  • உள்ளதை உள்ளபடி சொல்லல்

  • தான் கண்டு ரசித்ததைத் தன் சமுதாயச்
    சிந்தனைகளுக்கு உகந்ததாகப்     பொருள்படப்
    புனைந்து கூறல்

போன்ற கூறுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
இவ்வணுகுமுறையில், இதோ, கீழ்க்காணும் எறும்பின்
தவம் என்ற கவிதையைப் படியுங்கள். அதில் காணும்
கவிதைநயம் பாராட்டி ஒரு குறிப்பு வரையுங்கள்.


எறும்பின் தவம்

தரையிற் கிடந்த தங்கத் துகள்கள் வரிசை மாறாது
நடந்தன. அவற்றை இரைக்குச் செல்லும் எறும்புகள்
என்றனர்.

அரிய போர்வீரர் அணிநடை பயில ஓராண்டு செல்லும்
ஊசிமுனை எறும்புக்கு ஈராண்டாயினும் வேண்டுமே
என்றேன் வரிசை, ஒழுங்கும், மாறு படாமை எறும்புகட்
கெல்லாம் இயல்பில் அமைந்தவை! மனிதன் ஒழுக்கநூல்
ஆர்ந்தான் ஆயினும் இனிஅவன் திருந்துதல் எந்நாள்
அறிகிலேம் என்றனர்! இதனைக் கேட்டஎன் உதட்டு
மன்றில் சிரிப்பு வந்து குதித்தது.

எறும்புகள் நடந்துகொண்டிருந்தன; வழியைச் சிறுகல்
தடுத்தது; ஏறி இறங்கி எறும்புகள் நடந்துகொண்டிருந்தன!
பெட்டி குறுக்கில் கிடந்தது; சுற்றிக் கொண்டு போகும்
மனிதரின் மனநிலை பெறாமல் வழிகோணாமல்,
வரிகோணாமல் பெட்டிமேல் ஏறிப் பின்புறம் இறங்கி
எறும்புகள் நடந்துகொண்டிருந்தன; சுவரொன்று நடுவில்
நின்றது; நடுங்க வில்லை, மலைக்க வில்லை, வலிகுன்ற
வில்லை, நடையின் விரைவு தடைபட வில்லை; எறும்புகள்
நடந்துகொண்டிருந்தன! அரிசிநொய்க் குவியலை
அடைந்தன. ஒவ்வொன்று தூக்கித் தாவி முடித்தன
தம்புற்று மீண்டே.


தன் மதிப்பீடு: வினாக்கள் - II

  1. காலைப் பொழுதைக் கவிஞர் எவ்வாறு
    விளக்குகிறார்?
  1. அந்திப் பொழுதில் இருள் முழுமையாக
    வரவில்லை என்பதனை எவ்வாறு சுவையாக
    விளக்குகிறார்?
  1. இரவு வந்தமையை எவ்வாறு குடைசாய்ந்த
    வண்டியோடு கவிஞர் ஒப்பிடுகிறார்?
  1. கிளியைப் பற்றிக் கூறிய பாரதிதாசன், அதன்
    மூலம் வெளிப்படுத்தும் கருத்து யாது?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)