Primary tabs
3.2 செய்தி மூலங்கள் (sources of news)
செய்தியாளர் எது செய்தி என்பதை அறிந்து கொள்ளும்
ஆற்றல் பெற்றிருப்பதைப் போல, அது எங்கே கிடைக்கும்
என்பதை அறிந்திருக்க வேண்டும். பொதுவாக எப்பொழுதும்
எங்கும் செய்திகள் கிடைக்கலாம். என்றாலும் சில குறிப்பிட்ட
இடங்களுக்குச் சென்றால் செய்திகளை எளிதாகவும்
மிகுதியாகவும் பெற இயலும். அப்படிப்பட்ட இடங்களைச்
செய்தி மூலங்கள் என்று கூறலாம்.
3.2.1 செய்திகள் கிடைக்கும் இடங்கள்
நடைமுறையில் செய்தியாளர்கள் செய்திகளைப் பெறும்
இடங்களைக் கீழே உள்ளபடி வரிசைப் படுத்திக் காட்டலாம்.
• அரசுச் செய்திகளைப் பெறும் இடங்கள்
குடியரசுத் தலைவர், தலைமை அமைச்சர் (PrimeMinister)
அலுவலகங்கள், அமைச்சகங்கள், அரசுத் துறைகள், முதல்
அமைச்சர் அலுவலகம், மாநில அரசுத் துறைகள்.
• அரசியல் செய்திகள்
கட்சித் தலைமை அலுவலகங்கள், அரசியல்
கூட்டங்கள், அரசியல் மாநாடுகள் ஆகியன.
• குற்றச் செய்திகள்
காவல் நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், குற்றவியல்
நீதி மன்றங்கள், சிறைச்சாலைகள்
• சமுதாய நடவடிக்கைகள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், போக்குவரத்து
நிலையங்கள், பொதுக்கூட்டங்கள், பொருட்கள் பகிர்வு
இடங்கள்.
• வழக்குகள் தொடர்பானவை
உயர் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள்
• வாணிபச் செய்திகள்
அங்காடிகள், பங்கு அங்காடி மையங்கள், வீட்டுப்
பயன் பொருட்கள் விற்குமிடங்கள், கண்காட்சிகள்.
• விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்
• அரசு விருந்தினர் விடுதிகள், பெரிய உணவகங்கள்
• சுற்றுலா மையங்கள்
• தட்ப வெப்பநிலை, மழை அறிவிப்பு நிலையங்கள்
• துறைமுகங்கள்
• சமய நிறுவனங்கள், கோயில்கள்
• திரைப்படம் எடுக்கும் நிலையங்கள் மற்றும்
வெளிப்புறங்கள்
• புகைவண்டி நிலையங்கள்
• பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள்.
• தொழிலாளர் சங்கங்கள்.
• பொதுநிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்
• சமுதாய நலப்பணி நடைபெறும் இடங்கள்
• முகாம்கள்
• அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள்
• மற்றைய இதழ்கள்
• நண்பர்கள்
• விழாக்கள்
• பெரிய தலைவர்களின் நேர்முகங்கள்
ஆகியனவும் செய்தி மூலங்களாக விளங்குகின்றன.
3.2.2 வானொலியும் தொலைக்காட்சியும்
வானொலியும் தொலைக்காட்சியும் அரசு சார்ந்த
நிறுவனங்கள் ஆகும். செய்திகளை உடனுக்குடன் வெளியிட
வேண்டியிருப்பதால் இவை தமக்கெனச் செய்தியாளர்களைப்
பணியில் அமர்த்தியிருக்கின்றன. தங்கள் செய்தியாளர்களை
மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு அனுப்பி, அங்குக் கிடைக்கும்
செய்திகளை வானொலியிலும் தொலைக்காட்சியிலும்
வெளியிடுகின்றன. எனவே, சில செய்திகள் வானொலியிலும்
தொலைக்காட்சியிலும் முன்னதாக வர வாய்ப்புகள்
இருக்கின்றன. அவற்றைச் செய்தித்தாள்கள் பெற்று
வெளியிடுகின்றன.