தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாட்டுப்புறக் கலைகள்

  • நிகழ்த்து கலைகள்

        நிகழ்த்து கலைகளை மேலும் இரண்டாகப் பிரித்து,

        1) சமூகச் சார்புக் கலைகள்
        2) சமயச் சார்புக் கலைகள்

    எனலாம். இந்நிகழ்வுகள் குறிப்பிட்ட கலைஞர்களால் நிகழ்த்தப்படுவன.

  • நாட்டுப்புற நாடகம்


        விழாக்களின் போது நடத்தப்படும். பெரும்பாலும் இரவில்
    தொடங்கி விடிய விடிய நடைபெறும். வள்ளி் திருமணம்
    போன்ற நாடகங்கள் நாட்டுப்புற மக்களிடையே சிறப்புற்றவை.
    இந் நாடகங்கள் தற்காலச் சமுதாயத்திற்கு ஏற்பவும்
    வசனங்களில் சில மாற்றங்களை உள்வாங்கிப் பேசும். இதைப்
    பெரும்பாலும் நகைச்சுவைப் பகுதியில் காணலாம். நாட்டுப்புற
    நாடகக் கூறுகளாகத் தற்போது சமூக விழிப்புணர்வு, தேர்தல்
    பிரச்சாரம், மக்கள் தொகைக் கட்டுப்பாடு போன்ற கருத்துகளும்
    உள்ளடங்கியுள்ளன எனலாம்.

  • நாட்டுப்புற இசை


        நாட்டுப்புற இசையினை வில்லுப் பாட்டில் காணமுடியும்.
    இதில் வில்லுடன். இசைக் கருவிகளாக உடுக்கு, குடம், தாளம்,
    கட்டை என்பனவற்றையும், பம்பை, உறுமி, தக்கை, துந்துபி
    என்ற நான்கு கருவிகளையும் சேர்த்து எட்டு வகையான பக்கக்
    கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்த வில்லுப்பாட்டும்
    தற்பொழுது சமுதாயக் கருத்துகளை மக்களிடையே கொண்டு
    சேர்க்கப் பயன்படுத்தப் படுகின்றது.

  • நாட்டுப்புற நடனம்


        நாட்டுப்புறவியலில் நடனம் என்று குறிக்காமல் ஆட்டம்
    என்று தான் வழங்கப்படுகிறது. கரகாட்டம், மயிலாட்டம்,
    ஒயிலாட்டம், கணியான் ஆட்டம்
    போன்ற ஆட்டங்களைக்
    குறிப்பிட்டுச் சொல்லலாம்.

  • கூத்து


        கூத்து என்பது பழமையின் சின்னமாக, பண்பாட்டின்
    எச்சமாக விளங்குகின்றது. தெருக்கூத்தின் வளர்ச்சிதான்
    நாடகம் என்றும் கூறலாம்.

  • கூத்தின் வகைகள்


    1) பாவைக் கூத்து, 2) கழைக் கூத்து, 3) தெருக்கூத்து
    எனப்படும்.

  • நிகழ்த்தாக் கலைகள்


        இக்கலைகளை நாட்டுப்புற மக்களின் தொழில் சார்ந்த
    கலைகள் என்று தான் குறிப்பிட வேண்டும். இத்தொழில்கள்,
    மக்களால் மக்களுக்காக உருவாக்கப் பட்டவை. கோயில்கள்,
    தெய்வங்கள் இவற்றை அழகு படுத்துவதற்காகச் செய்யப்
    படுவன எனலாம்.

  • மண்பாண்டக் கலை


        நாட்டுப்புற மக்களிடையே மண்பாண்டக் கலை மிகவும்
    சிறப்புப் பெற்றது. கலையழகுடன் கைத்திறனையும் காட்டி
    மண்பாண்டம் செய்வதையே பெரும் கலையாக்கிவிட்டனர்.
    பல நிறங்களுடன், உருவ அமைப்பில் மாற்றமும் செய்து
    கலையழகுடன் பொருந்திய பொருட்களை உருவாக்குகின்றனர்.
    கிராமங்களில் காணப்படும் ஐயனார் சிலைகள் இவர்களின்
    கைவண்ணத்திற்குச் சான்றாகும்.

  • பாய் பின்னுதல்


        பாய் பின்னும் தொழில் நம்மிடையே பல தலைமுறையாக
    நடைபெற்று வருகிறது. பத்தமடைப் பாய் நெசவும், பனை
    ஓலையால் கூடை முடைதலும் கைத்தொழிலின் சிறந்த
    சான்றாகும்.

  • சிற்ப வேலைப்பாடு


        மரத்திலும், உலோகத்திலும், கல்லிலும் சிற்பங்கள்
    செதுக்கப் படுகின்றன.     கோவில் தேர்களில் அழகான
    சிற்பங்களைக் காணலாம்.     உலோகங்களில் தெய்வச்
    சிலைகளும், பாவை விளக்குகளும் செய்யப் படுகின்றன.
    உலோகத்தால் செய்வது போன்று கல்லிலும் சிற்பங்கள்
    செதுக்குவர்.

  • நாட்டுப்புற ஆடைகள்


        நாட்டுப்புற மக்களின் ஆடைகள். பருத்தியால் ஆனவை,
    எளிமையானவை.ஆனால் வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்ப
    அவர்களுடைய ஆடைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு
    வருகின்றன. அப்படியென்றால் அவர்களுக்கென்ற தனிப்பட்ட
    அடையாளத்தை அங்கு எதில் காணலாம் என்றால்,
    அம்மக்களின், நம்பிக்கை சார்ந்த சடங்குகளிலும், தெய்வ
    வழிபாடுகளிலும் காணலாம். அந்த நிகழ்வின் போது எவ்வகை
    ஆடை அணிகின்றனர், நிறம் என்ன? போன்றவற்றைக்
    கொண்டு அவர்களின் பண்பாட்டின் தனித் தன்மைகளை
    அறிய முடியும்.

3.3.3 நாட்டுப்புற அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

இப்பகுதியில், 1) நாட்டுப்புற மருத்துவம்
     2) நாட்டுப்புறத் தொழில் நுட்பவியல்
     3) நாட்டுப்புறக் கட்டடக் கலை

என்று மூன்று வகைகளைப் பார்க்கலாம்.

  • நாட்டுப்புற மருத்துவம்

        நாட்டுப்புற மக்கள் கையாளும் மருத்துவ முறைகளை
    நாட்டுப்புற மருத்துவம் என்கிறோம்.

        நாட்டுப்புற மருத்துவத்தை     இரண்டு வகையாகப்
    பிரிக்கலாம். அவை,

        1) மந்திர சமய மருத்துவம்
        2) இயற்கை மருத்துவம்

  • மந்திர சமய மருத்துவம்


        இவ்வகை மருத்துவம் மந்திரம், சடங்கு போன்றவற்றோடு
    தொடர்பு உடையதாக இருக்கும்.நாட்டுப்புற மக்களின் மருத்துவ
    மந்திரச் சடங்குகள் மந்திரித்தல், திருநீறு போடல், கோடாங்கி
    கேட்டல், பார்வை பார்த்தல், நேர்த்திக் கடன் செய்தல்,
    பேயோட்டல், செய்வினை செய்தல் போன்ற பல பெயர்களால்
    அழைக்கப்படுகின்றன. இந்த மருத்துவர்களை அம்மக்கள்
    பூசாரி, பேயோட்டி, பாம்புக்கடி மருத்துவர், எலும்பு முறிவு
    வைத்தியர், மந்திரவாதி, சாமியாடி, அருளாடி, நாட்டு
    வைத்தியர் எனப் பல பெயர்களால் அழைக்கின்றனர்.
    மக்களது நோயினைத் தீர்ப்பதற்கு மத மந்திரத்தைத் தழுவி
    நிற்பதனை மந்திர சமய மருத்துவம் (Magio - religious
    medicine)
    எனலாம்.

  • இயற்கை மருத்துவம்


        மூலிகை, தாது போன்ற பொருட்கள், மருந்துகள்
    முதலியவற்றை இயற்கை நாட்டுப்புற மருத்துவம் என்பர்.
    மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உட்கொள்ளும் மருந்து,
    வெளிப்பூச்சு மருந்து என இருவகையுண்டு. இயற்கை
    நாட்டுப்புற மருத்துவம்     மனித     இனம் தோன்றிய
    காலத்திலிருந்தே உள்ளது. பண்டைய மனிதனின் மருத்துவ
    அறிவை, நம்பிக்கையை இதன் மூலம் அறியலாம்.

    சான்று : மஞ்சள் காமாலை நோய்

        1) கீழாநெல்லி, மஞ்சள் கரிசலாங் கண்ணியை அரைத்து
        மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வேண்டும்.
        உப்பில்லாத பால்சோறு சாப்பிட வேண்டும்.
    2) சித்திர மூலம் மஞ்சள் காமாலையைக் குணமாக்கும்.

  • நாட்டுப்புறத் தொழில் நுட்பவியல்


        நாட்டுப்புற மக்கள் மரபு வழியாகக் கடைப் பிடித்து
    வரும் முறைகளைக்     கையாண்டு     பொருட்களைத்
    தயாரிக்கின்றனர்.அந்தந்த இடத்திலுள்ள மூலப் பொருள்களைக்
    கொண்டு கைவினைப் பொருட்களாகக் கலை அம்சம் கொண்ட
    பொருட்களை மட்டுமின்றி, மனித வாழ்வுக்குப் பயன்படுத்தும்
    செக்கு, கலப்பை, மாட்டுவண்டி போன்ற பொருட்களையும்
    தயாரித்து, அதிலும் அவர்களின் தொழில் நுட்பத்தை
    வெளிப்படுத்துகின்றர்.

  • கட்டடக் கலை


        நாட்டுப்புறக் கட்டடக் கலையில் மரபு வழிப்பட்ட திட்டம்
    மேற்கொள்ளப் படுகின்றது. கட்டடம் கட்டுபவரே வீட்டின்
    அமைப்பைத்     தீர்மானிப்பார். அவ்வீட்டின் அமைப்பு
    பெரும்பாலும் அப்பகுதியிலுள்ள மற்ற வீடுகளின் அமைப்பு
    போன்றிருக்கும். முன்னோர் கட்டிய கட்டட அமைப்பின்
    மாதிரியாகவும் இருக்கும். நாட்டுப்புறக் கட்டடக் கலையில்
    பயன்படுத்தும் பொருட்கள், கருவிகள், தொழில் நுட்ப
    முறைகள்     மற்ற     கட்டடக்     கலைகளிலும்
    பயன்படுத்தப் படுகின்றன. நாட்டுப்புற மக்கள் வசிக்கும்
    வீடுகளைத் தரையமைப்பு, கூரை ஆகியவற்றின் அடிப்படையில்
    மூன்றாக வகைப்படுத்தி உள்ளனர்.


        1) நீண்ட சதுரத் தரை அமைப்பும் மட்டமான கூரையும்
        2) நீண்ட சதுரத் தரை அமைப்பும் சாய்வான கூரையும்
        3) வட்டமான தரை அமைப்பும் கூம்பு வடிவக் கூரையும்.



    புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)