Primary tabs
-
3.4 ஆகுபெயர்
ஒன்றன் பெயர் தனக்குரிய பொருளை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) உலகம் சிரித்தது. என் பள்ளி வென்றது.
இவற்றில் உலகம், பள்ளி என்னும் இடப்பெயர்கள் இடத்தை உணர்த்தாமல் உலகில் உள்ள மக்களையும் பள்ளியில் உள்ள மாணவர்களையும் உணர்த்துகின்றன. எனவே இவை ஆகுபெயர் எனப்பட்டன.
ஆகுபெயரை எண்ணிக்கை அடிப்படையில் பலவாகக் கூறலாம். அவற்றை இங்கே காண்போம்.
1) பொருளாகு பெயர்2) இடவாகு பெயர்3) காலவாகு பெயர்4) சினையாகு பெயர்5) பண்பாகு பெயர்6) தொழிலாகு பெயர்7) அளவையாகு பெயர்8) சொல்லாகு பெயர்9) தானியாகு பெயர்10) கருவியாகு பெயர்11) காரியவாகு பெயர்12) கருத்தாவாகு பெயர்13) உவமையாகு பெயர்
3.4.1 பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள்
பொருள்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப் பெயர், தொழில்பெயர் என்னும் அறுவகைப் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு வரும் ஆகுபெயர்களைப் பொருள் முதல் ஆறு ஆகுபெயர்கள் என்பர்.
பொருளாகு பெயர்
முதற்பொருளின் பெயர் அதன் சினைப் பொருளுக்கு ஆகி வருவது பொருளாகுபெயர் எனப்படும். இது முதலாகு பெயர் என்றும் வழங்கப் பெறும்.
(எ.கா) முல்லை மணம் வீசியது.
இதில் முல்லை என்பது முல்லைக் கொடியின் பெயர். இங்கே மணம் வீசியது என்னும் குறிப்பால் இது சினைப் பொருளாகிய முல்லைப் பூவுக்கு ஆகி வந்துள்ளது.
இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஊர் கூடியது.
இதில் ஊர் என்னும் இடப்பெயர் கூடியது என்னும் குறி்ப்பால் ஊரில் உள்ள மக்களுக்கு ஆகி வந்துள்ளது.
காலவாகு பெயர்
ஒரு காலத்தின் பெயர் அந்தக் காலத்தோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது காலவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) கார் அறுவடை ஆயிற்று.
இதில் கார் என்பது காலப்பெயர். இங்கே அறுவடை ஆயிற்று என்னும் குறிப்பால் இது கார்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்துள்ளது.
சினையாகு பெயர்
ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதற்பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) தலைக்குப் பத்து ரூபாய் கொடு.
இதில் தலை என்னும் சினைப் பொருளின் பெயர், பத்து ரூபாய் கொடு என்னும் குறிப்பால் அந்தத் தலையை உடைய மனிதனுக்கு ஆகி வந்துள்ளது.
முதலாகு பெயர்
சினையாகு பெயர்
முதற்பெயர் சினைப் பொருளுக்கு ஆகி வரும்.சினைப்பெயர் முதற்பொருளுக்கு ஆகி வரும்.பண்பாகு பெயர்
ஒரு பண்பின் பெயர் அப்பண்புடைய பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது குணவாகு பெயர் என்றும் வழங்கப்பெறும்.
(எ.கா) இனிப்பு உண்டான்.
இதில் இனிப்பு என்னும் சுவைப் பண்பின் பெயர் அச்சுவை கொண்ட பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
தொழிலாகு பெயர்
ஒரு தொழிலின் பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எ.கா) சுண்டல் உண்டான்.
இதில் சுண்டல் என்னும் தொழிற்பெயர் அத்தொழிலால் அமைந்த பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
3.4.2 அளவை ஆகு பெயர்கள்
எண்ணல் எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலிய அளவைப் பெயர்கள் ஆகுபெயர்களாக வரும்.
எண்ணல் அளவையாகு பெயர்
ஓர் எண்ணல் அளவையின் பெயர் அந்த எண்ணி்க்கையில் உள்ள பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஒன்று பெற்றால் ஒளி மயம்.
இதில் ஒன்று என்னும் எண்ணல் அளவைப் பெயர் அந்த எண்ணுள்ள பொருளுக்கு (குழந்தைக்கு) ஆகி வந்திருப்பதால் எண்ணல் அளவையாகு பெயர் எனப்பட்டது.
எடுத்தல் அளவையாகு பெயர்
ஓர் எடுத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) மூன்று கிலோ வாங்கி வா.
இதில் கிலோ என்னும் எடுத்தல் அளவைப் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
முகத்தல் அளவையாகு பெயர்
ஒரு முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது முகத்தல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) ஐந்து லிட்டர் வாங்கி வா
இதில் லிட்டர் என்னும் முகத்தல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
நீட்டல் அளவையாகு பெயர்
ஒரு நீட்டல் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) இரண்டு மீட்டர் கொடுங்கள்.
இதில் மீட்டர் என்னும் அளவையின் பெயர் அந்த அளவுள்ள பொருளுக்கு ஆகி வந்துள்ளது.
3.4.3 சொல்லாகு பெயர்
சொல்லைக் குறிக்கும் பெயர் சொல்லுடைய பொருளுக்கு ஆகி வருவது சொல்லாகு பெயர் எனப்படும்.
(எ.கா) இந்த உரை எனக்கு மனப்பாடம்.
இதில் உரை என்னும் சொல், அச்சொல்லின் பொருள் அமைந்த நூலுக்கு ஆகி வந்துள்ளது.
3.4.4 தானியாகு பெயர்
ஓர் இடத்தில் உள்ள பொருளின் பெயர் (தானி) அது சார்ந்திருக்கும் இடத்திற்கு (தானத்திற்கு) ஆகி வருவது தானியாகு பெயர் எனப்படும்.
(எ.கா) அடுப்பிலிருந்து பாலை இறக்கு.
இதில் பால் என்பது அது சார்ந்திருக்கும் பாத்திரத்தைக் குறிக்கிறது. பாலை இறக்கு என்றால் பால் இருக்கும் பாத்திரத்தை இறக்கு என்றே பொருள் கொள்ளப்படுகிறது.
3.4.5 கருவியாகு பெயர்
ஒரு கருவியின் பெயர் அக்கருவியால் ஆகும் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகு பெயர் எனப்படும்.
(எ.கா) நான் குறள் படித்தேன்.
இதில் குறள் என்பது குறள் வெண்பாவைக் குறிக்கும் சொல். ஆனால் இங்கே குறள் வெண்பாவால் ஆக்கப்பட்ட பாக்களைக் குறிக்கிறது.
3.4.6 காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர் அதன் காரணத்திற்கு (கருவிக்கு) ஆகி வந்தால் காரியவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) நான் அலங்காரம் கற்றேன்.
இதில் அலங்காரம் என்னும் சொல் அலங்காரத்தைக் (அணியை) கற்பிக்கும் நூலுக்கு ஆகி வந்துள்ளது.
3.4.7 கருத்தாவாகு பெயர்
ஒரு கருத்தாவின் பெயர் அக்கருத்தாவால் செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவது கருத்தாவாகு பெயர் எனப்படும்.
(எ.கா) இவருக்கு வள்ளுவர் மனப்பாடம்.
இதில் வள்ளுவர் என்னும் சொல் வள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் நூலுக்கு ஆகி வந்துள்ளது.
3.4.8 உவமையாகு பெயர்
ஓர் உவமையின் பெயர் அதனால் உணர்த்தப் பெறும் உவமேயத்திற்கு ஆகி வருவது உவமையாகு பெயர் எனப்படும்.
(எ.கா) காளை வந்தான்.
இதில் காளை என்னும் சொல், காளை போன்ற வீரனுக்கு ஆகி வந்துள்ளது.
காளை- உவமைவீரன்- பொருள்பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதைத்
தொல்முறை உரைப்பன ஆகுபெயரே(நன்னூல் : 290)
பொருள்பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், பண்புப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப் பெயரை அடிப்படையாகக் கொண்டவையும், எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் முதலான அளவைப் பெயர்களும், சொல், தானி, கருவி, காரியம், கருத்தா முதலானவையும் தம்மோடு தொடர்புடைய வேறு பொருளுக்குப் பெயராகிப் பழங்கால முதல் சொல்லப்பட்டு வருவன ஆகுபெயர் என்பது இதன் பொருள்.