Primary tabs
-
3.0 பாட முன்னுரை
அலுவலகங்களில் ஆவணங்களைக் கையாளுதல் எவ்வளவு முக்கியமான பணியோ அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணி அன்றாடக் கணக்கு வழக்குகளைப் பிழையின்றித் துல்லியமாகப் பராமரிப்பதாகும். அலுவலகப் பயன்பாட்டுக் கூட்டுத் தொகுப்பில் அதற்கென உள்ள மென்பொருள் ‘விரிதாள்’ (Spreadsheet) ஆகும். விரிதாள் என்பது கிடக்கைகளும் (Rows) நெடுக்கைகளும் (Columns) கொண்ட மிக விரிந்த தாள் பரப்பாகும். அட்டவணைகளில் விவரங்களைப் பதிவு செய்வதுபோல கிடக்கைகளும் நெடுக்கைகளும் சந்திக்கும் கலங்களில் (Cells) தரவுகளை உள்ளிட வேண்டும்.
பொதுவாக எண்வகைத் தரவு (Numeric Data) மதிப்புகளைக் கையாள்வதற்கு விரிதாள் மென்பொருள் ஏற்றது. குறிப்பாக நிதி மற்றும் கணக்கியல் (Finance and Accounting) பணிகளுக்கு மிகவும் உகந்தது. ஊதியக் கணக்குகள் (Salary Accounts), வரவு-செலவுத் திட்டம் (Budget), இலாப-நட்டக் கணக்கு (Profit and Loss Account), விற்று-வரவுக் கணக்கு (Balance Sheet), முதல¦ட்டுப் பகுப்பாய்வு (Investment Analysis), பணப் புழக்கம் (Cash Flow), வரிக் கணக்கீடுகள் (Tax Calculations), பங்குச் சந்தை (Share Market), முன்கணித்தல் (Forecasting) போன்ற பணிகளுக்கு விரிதாள் மென்பொருளைப் பயன்படுத்த முடியும்.
அலுவலகங்களிலும் வணிக நிறுவனங்களிலும் அன்றாடக் கணக்கு வழக்குகளைப் பராமரிக்கவும், புள்ளி விவரங்களை ஆய்வுசெய்து உகந்த முடிவுகள் மேற்கொள்ளவும், நிலைமைகளை எளிதில் மதிப்பீடு செய்ய ஏதுவாக விவரங்களை வரைபட (Graph) வடிவில் முன்வைக்கவும் இந்த மென்பொருள் உதவுகிறது.
உலக அளவில் பெருமளவில் பயன்படுத்தப்படும் விரிதாள் மென்பொருள் ‘மைக்ரோசாஃப்ட் எக்செல்’ ஆகும். இது மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் கூட்டுத் தொகுப்பின் ஓர் அங்கமாக விளங்குகிறது. இதில் நிதியியல் மற்றும் கணக்கியல் பணிகளைக் கையாள்வதற்கென ஏராளமான வசதிகள் உள்ளன. அவற்றுள் உடனடித் தானியங்கிக் கணக்கீடுகளும், உள்ளிணைந்த செயல்கூறுகளும், வரைபடங்களும், அட்டவணைச் செயல்பாடுகளும் மிகவும் குறிப்பிடத் தக்கவை. ‘மைக்ரோசாஃப்ட் எக்செல் 2003’ மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு, விரிதாள் வழங்கும் ஏராளமான வசதிகளுள் சிலவற்றைச் செயல்முறை அடிப்படையில் காண்போம்.