தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- கருத்துப் பரிமாற்றம்

  • 5.4 கருத்துப் பரிமாற்றம்

    மின்னஞ்சல், தொலைபேசி, உடனடிச் செய்திப் பரிமாற்றம் போன்றவை இரண்டு பேருக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்துக் உதவுகின்றன. அப்படி யில்லாமல் பலர் கூடி தமக்குள்ளே கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான சேவையையும் இணையம் வழங்குகிறது. இத்தகைய கருத்துப் பரிமாற்றம் அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற ஏதேனும் ஒரு துறை சார்ந்த குறிப்பிட்ட கருத்துருவைச் சுற்றியே நடைபெறும். இவ்வாறு ஏதேனும் ஒரு பொருள் பற்றித் தமக்குள்ளே விவாதம் நடத்தும் குழுக்கள் இணையத்தில் பல்வேறு வடிவங்களில் நிலவுகின்றன. விவாதக் குழுவின் தொடக்க கால வடிவம் செய்திக் குழு (News Group) எனப்பட்டது. கருத்துப் பரிமாற்றக் குழுக்களுள் தற்போது மிகவும் செல்வாக்குப் பெற்று விளங்குவது வலைப்பதிவுகள் (Blogs) ஆகும். இணையத்தில் வலைவாசி களிடையே நாள்தோறும் நடைபெறும் விவாதங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்தோட்டமுடைய புதிய புதிய சமூகக் குழுக்கள் உருவாகி வருகின்றன. இவை பற்றியெல்லாம் இப்பாடப் பிரிவில் அறிந்து கொள்வோம்.

    5.4.1 செய்திக் குழுக்கள் (News Groups)

    1970-களில் டியூக் (Duke) பல்கலைக் கழகத்தில் பயின்றுவந்த இரண்டு மாணவர்கள், பல்கலைக் கழக மாணவர்களும் ஆசிரியர்களும் தமக்குள்ளே பாடங்களைப் பற்றி விவாதித்துக் கொள்ள ஒரு புதுவகையான கணிப்பொறிப் பிணையத்தை உருவாக்கினர். வடக்குக் கரோலினா பல்கலைக் கழகத்தின் சேப்பல் ஹில் வளாகத்துடன் தங்கள் பிணையத்தை இணைத்து, விவாதப் பிணையத்தை விரிவுபடுத்தினர். இப்பிணையம் ’யூஸ்நெட்’ (Usenet) என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் யூஸ்நெட்டில் ஏராளமான பல்கலைக் கழகங்கள் இணைந்தன. யூஸ்நெட் உலகம் முழுவதும் பரவியது. இறுதியில் யூஸ்நெட் இணையத்தின் ஓர் அங்கமாய் இணைந்தது. அவ்வாறு இணைந்தபோது யூஸ்நெட் ‘செய்திக் குழு’ (News Group) எனப் பெயர்மாற்றம் பெற்றது. ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமின்றிச் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்கெடுத்துக் கொண்டு பல்வேறு கருத்துகளையும் விவாதிக்கத் தொடங்கினர்.

    இணையத்தின் செய்திக் குழுக்கள் தொடக்கத்தில் net.* என்னும் தலைப்பின் கீழேயே செயல்பட்டன. 1986-இல் அவை ஏழு உயர்நிலைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. (1) கணிப்பொறி (comp.*) - கணிப்பொறியியல் தொடர்பான விவாதங்கள். (2) யூஸ்நெட் (news.*) - செய்திக் குழுக்களைப் பற்றியது. (3) அறிவியல் (sci.*) - அறிவியல் தொடர்பான தலைப்புகளில் விவாதிப்பது. (4) பொழுதுபோக்கு (rec.*) - விளையாட்டு போன்ற பொழுபோக்குகளைப் பற்றியது. (5) சமூகம் (soc.*) - சமூகப் பிரச்சனைகளை விவாதிப்பது. (6) பேச்சு (talk.*) - அரசியல், மதம், போன்ற கருத்து மோதல்களுக்கு இடம்தரும் அனைத்தும். (7) பல்வகை (misc.*) - பிறவற்றில் அடங்காத ஏனைய தலைப்புகள். இவை ஒவ்வொன்றும் பல உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். உட்பிரிவுக்குள் உட்பிரிவுகளும் இருக்கலாம். comp.software, comp.sys.windows, misc.education, misc.kids, rec.music, rec.arts.movies, sci.physics, sci.maths.research, soc.cultute.india, talk.religion, talk.politics.democracy என்றெல்லாம் செய்திக் குழுக்களின் பெயர்கள் அமையும். 1995-இல் humanities.* என்னும் புதிய குழு உருவாக்கப்பட்டது. எட்டுக் குழுக்களும் சேர்ந்து ‘பெரியன 8’ (Big 8) என்று அழைக்கப்படுகின்றன. தொடக்க காலங்களில் பண்பாட்டுக்குப் புறம்பான விவாதங்கள் செய்திக் குழுக்களில் அனுமதிக்கப்படவில்லை. காலப்போக்கில் அத்தகைய கருத்துகளை விவாதிப்பதற்கென alt.* என்னும் குழு உருவாக்கப்பட்டது. alt என்பது ‘மாற்று’ (alternate) என்பதைக் குறிக்கும். தற்போது aus.*, uk.*, hp.*, microsoft.* என நாடுகள், நிறுவனங்களின் பெயர்களிலும் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இணையச் சேவைகளை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் செய்திக் குழுக்களையும் நடத்துகின்றன. ஏதேனும் ஒரு செய்திக்குழு வலையகத்தில் நுழைந்தால் ஏற்கெனவே இணையத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் செய்திக்குழுக்களின் பட்டியல் தோற்றமளிக்கும். அவற்றுள் நீங்கள் விவாதிக்க விரும்பும் குழுவில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே அக்குழுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை நீங்கள் பார்வையிடலாம். உங்கள் கருத்தினைத் தெரிவிக்கலாம். விவாதம் அத்தோடு முடிந்து விடாது. தொடர்ந்து நடைபெறும். எப்போது வேண்டுமானாலும் அக்குழுவில் நீங்கள் கலந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்குப் பதில் கருத்துகள் வந்திருக்கும். அவற்றைப் பார்வையிடலாம். அவற்றுக்கு உங்கள் பதிலைத் தெரிவிக்கலாம். இவ்வாறு விவாதம் தொடர்ந்து கொண்டே போகும். ஒருவரே பல செய்திக்குழுக்களில் உறுப்பினராய் இருக்கலாம்.

    5.4.2 வலைப்பதிவுகள் (Blogs)

    இணையத்தில் தமது கருத்துகளைப் பதிவு செய்வதற்கு அண்மைக் காலத்தில் உருவாகியுள்ள புதிய சேவை ‘வலைப்பதிவு’ (Blog) ஆகும். வலைப்பதிவு எனப் பொருள்படும் weblog என்னும் ஆங்கிலச் சொல் சுருங்கி blog ஆயிற்று. வலைப்பதிவுத் தொழில்நுட்பத்தை 1993-இல் உருவாக்கியவர் டாக்டர் கிளென் பேரி. இணையத்தின் முதல் வலைப்பதிவை வனப் பாதுகாப்பு தொடர்பான ஆவணக் காப்பகமாக 1995 ஜனவரியில் தொடங்கினார். இன்றுவரை அவ்வலைப்பதிவு (www.forests.org/blog) தொடர்கிறது. ஆனால் weblog என்னும் சொல்லை முதலில் 1997-இல்தான் ஜோர்ன் பெர்கர் என்பார் பயன்படுத்தினார். 1999-இல் பீட்டர் மெர்ஹோல்ஸ் என்பார் அச்சொல்லை we blog என இரண்டாகப் பிரித்து blog என்னும் சொல்லை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து blog என்னும் சொல்லைப் பெயர்ச் சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் பயன்படுத்தியவர் பைரா ஆய்வுக்கூடத்தின் (Pyra Labs) ஈவான் வில்லியம்ஸ் ஆவார். வலைப்பதிவர் எனப் பொருள்படும் blogger என்னும் சொல்லையும் அவரே உருவாக்கினார்.

    மைக்ரோசாஃப்ட், யாகூ, கூகுள், ஆட்டோமேட்டிக் (Automattic) போன்ற நிறுவனங்கள் இணையத்தில் உங்களுடைய சொந்த வலைப்பதிவகத்தை உருவாக்கிக் கொள்ளும் வலைப்பதிவு சேவையை வழங்கி வருகின்றன. அவற்றின் வலையக முகவரிகள்:

    (1) லைவ் ஸ்பேசஸ் - www.spaces.live.com(மைக்ரோசாஃப்ட்)
    (2) பிளாக்கர் - www.blogger.com(கூகுள்)
    (3) 360 டிகிரி - 360.yahoo.com (யாகூ)
    (4) வேர்டுபிரஸ் - www.wordpress.com (ஆட்டோமேட்டிக்)

    பைரா ஆய்வுக்கூடம் வழங்கிவந்த www.blogspot.com என்ற புகழ்பெற்ற வலைப்பதிவு சேவையைக் கூகுள் நிறுவனம் 2003-இல் விலைக்கு வாங்கி ’பிளாக்கர்’ என்ற பெயரில் நடத்தி வருகிறது. மேற்கண்ட வலையகங்களில் நுழைந்து, உங்கள் பெயரிலோ அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு பெயரிலோ உங்கள் சொந்த வலைப்பதிவகத்தை உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் வலைப்பதிவகத்தின் பெயர் musivalingam.spaces.live.com, musivalinagm.blogspot.com, tamilnadu.wordpress.com என்பதுபோல அமையும்.

    உங்கள் வலைப்பதிவகத்தில் உங்கள் எண்ணங்கள், கருத்துகள், கொள்கைகள், கோட்பாடுகளை வெளியிடலாம். ஒளிப்படங்கள், இசைப்பாடல்கள், நிகழ்படங்களும் வெளியிடலாம். உங்கள் வலைப்பதிவைப் படிப்பவர்கள் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்வார்கள். அந்த விமர்சனங்களுக்கான உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். உங்கள் வலைப்பதிவகம் ஒரு விவாதக் குழு போலவே செயல்பட முடியும். உங்கள் எழுத்து வன்மை மூலம் சமூக உணர்வுமிக்க ஒரு சிறந்த குழுவை உருவாக்க முடியும்.

    5.4.3 மின்வெளிச் சமூகக் குழுக்கள் (Cyber Communities)

    நாட்டில் நிலவும் அரசியல் கட்சிகள், சமயக் குழுக்கள், மக்கள் நலச் சங்கங்கள், பண்பாட்டுப் பேரவைகள், பொழுதுபோக்கு மன்றங்கள் போல இணையத்தில் நிலவும் சமூகக் குழுக்கள் ‘மின்வெளிச் சமூகக் குழுக்கள்’ எனப்படுகின்றன. இத்தகைய குழுவமைப்புகளைச் ‘சமூகப் பிணையமாக்கம்’ (Social Networking) என்றும் கூறுவர். வலைப்பதிவகங்களும் சமூகப் பிணையமாக்கத்தின் ஒரு வடிவமே. இதுதவிர வேறுபல சமூகப் பிணையமாக்கக் குழுக்களும் இணையத்தில் நிலவுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சில:

    (1) ஃபேஸ்புக் (www.facebook.com)
    (2) ஆர்க்குட் (www.orkut.com)
    (3) மைஸ்பேஸ் (www.myspace.com)
    (4) ஃபிரண்ட்ஸ்டர் (www.friendster.com)

    இவற்றுள் ஃபேஸ்புக், ஹார்வார்டு பல்கலைக் கழக மாணவர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் அவரது சக மாணவர்களும் உருவாக்கியது. ஆர்க்குட் கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமானது. கூகுள் பணியாளர் ஆர்க்குட் பூயூக்கோக்டன் உருவாக்கியது. ஒரே மாதிரியான எண்ணங்கள், கருத்துகள், விருப்பங்கள், ஆர்வங்கள் கொண்டவர்கள் குழுவாக அமைந்து தமக்குள்ளே கருத்துகளையும், படங்கள், நிகழ்படங்களையும் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையிது. முதலில் உங்கள் நண்பர்களையும், பிறகு நண்பர்களின் நண்பர்களையும், பிறகு அவர்களின் நண்பர்களையும் உள்ளடக்கிக் குழு வளர்ந்துகொண்டே செல்லும். மின்வெளிச் சமூகக் குழுக்கள் நாடு, இனம், மதம் கடந்து பல்வேறு மக்களையும் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

    இத்தகைய குழுக்கள் பெருகுவதன் காரணமாய் நாடுகளின் எல்லைகளைக் கடந்த ஒரு புதிய மின்-நாடு (e-State) உருவாகி வருகிறது எனலாம். வலைவாசிகள் (Netizens) என்னும் புதிய குடிமக்கள் உருவாகி வருகின்றனர். மின்-சமூகம் (e-Community), மின்-பண்பாடு (e-Culture) என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டனர். புதிய மின்வெளிச் சட்டங்களும் இயற்றப்பட்டுள்ளன. உலகெங்கும் இணையம் வியாபிக்கும்போது மக்கள் மின்-வாழ்க்கையை (e-Life) வாழ்ந்து கொண்டிருப்பர். வாழ்க்கைமுறை மாறும்போது மனிதர்களின் சிந்தனையோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்படும். சாதி, மதம், நாடு, இனம், மொழி இவையனைத்தையும் கடந்த புதியதோர் உலக சமூகம் எதிர்காலத்தில் உருவாக இணையம் வழிவகுக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

     

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:25:44(இந்திய நேரம்)