Primary tabs
5.0 பாட முன்னுரை
தொடக்க காலங்களில் கணிப்பொறிப் பிணையங்கள் மிகக் குறுகிய அளவிலான தேவைகளுக்கே பயன்பட்டு வந்தன. பல்கலைக் கழகங்களில் ஆய்வாளர்கள் மின்னஞ்சல்களைப் பரிமாறிக் கொள்ளவும், வணிக நிறுவனங்களில் பணியாளர்கள் அச்சுப்பொறிகளைப் பகிர்ந்து கொள்ளவுமே கணிப்பொறிப் பிணையங்கள் பயன்பட்டன. முக்கியமான தகவல் பரிமாற்றங்கள் நடைபெறவில்லை. எனவே ‘பாதுகாப்பு’ (Security) என்பதன் தேவையும் முக்கியத்துவமும் அதிகமாக உணரப்படவில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில், முக்கியமான தகவல் பரிமாற்றங்களுக்கு வணிக நிறுவனங்கள் கணிப்பொறிப் பிணையங்களைப் பரந்த அளவில் பயன்படுத்துகின்றன. சாதாரணப் பொதுமக்களும் தகவல் பரிமாற்றத்துக்கு இணையத்தைப் பெருமளவு பயன்படுத்துகின்றனர். எனவே கணிப்பொறி முறைமை மற்றும் கணிப்பொறி வழியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் பாதுகாப்புக்கான தேவை முன்னெப்போதைக் காட்டிலும் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கணிப்பொறி முறைமையின் பாதுகாப்புக்கு இரண்டு வகையில் ஆபத்து ஏற்படுகிறது. முதலாவது, கணிப்பொறி முறைமையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் தொடுப்போரால் ஏற்படும் இழப்புகள். இரண்டாவதாக, தீங்குநிரல் மென்பொருள்களால் (malware) கணிப்பொறி முறைமைக்கும், சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் ஏற்படும் ஆபத்துகள். இத்தகைய ஆபத்துகளையும் இழப்புகளையும் எதிர்கொள்ளக் கறாரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கையான தடுப்பு நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்கக் கடவுச்சொல் மேலாண்மையும் (Password Management), தீச்சுவர்ப் (Firewall) பாதுகாப்பும் பயன்படுகின்றன. தீங்குநிரல், நச்சுநிரல்களுக்கு எதிராக நச்செதிர்ப்பி மென்பொருள்கள் பாதுகாப்பு வழங்குகின்றன.
இணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களில் தீங்கெண்ணம் கொண்டோர் இடையிட்டு மோசடி செய்யாமல் தடுக்கப் பல்வேறு மறையாக்க, மறைவிலக்க முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. எவரும் உடைக்க முடியாத மறையாக்க, மறைவிலக்க நுட்பங்களை உள்ளடக்கிய நவீன மறைக்குறியீட்டியல் (Cryptography) தொழில்நுட்பம் இணையத் தகவல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. குறிப்பாகப் பொதுத்திறவி மறையாக்கமும் (Public-key Encryption), துடிமக் கையொப்பமும் (Digital Signature) பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்துக்குத் துணை நிற்கின்றன. கணிப்பொறி முறைமை மற்றும் தகவல் பரிமற்றத்துக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் அவற்றுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் இப்பாடத்தில் விரிவாகக் காண்போம்.