தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU


xviii

உரிச்சொல்     இசை,  பண்பு,  குறிப்பு என்பனவற்றுள் ஒன்றன்
அடிப்படையிற்றோன்றுவதாதலின்   அஃது  உணர்த்தும்  பொருளும்
அம்  மூன்றனுள்  ஒன்றாகவே  அமையும்.  ‘உறு’ எனும் உரிச்சொல்
உணர்த்தும் பொருள் ‘மிகுதி’ என்பது. மிகுதி என்பது இன்னது எனக்
காட்ட   இயலாதது;   மனத்தால்  குறித்து  உணரப்படுவது.  ‘மல்லல்’
என்னும்  உரிச்சொல்  ‘வளம்’  என்னும்  பொருள்  தருவது. ‘வளம்’
என்பதும்  இன்னது  எனக்  காட்ட  இயலாதது:  மனத்தாற்  குறித்து
உணரப்படுவது.   ‘இரங்கல்’   என்னும்  உரிச்சொல்  ‘ஒலி’  என்னும்
பொருள்  தருவது.  ‘ஒலி’  என்பது  பொருள்,  இடம், காலம், சினை,
குணம்,  தொழில் என்பனவற்றுள் அடங்காதது; தொழிற்பண்பில் நாம்
அடக்கலாம்;  அவ்வளவே.  ‘இரங்கல்’  என்பது வருந்துதல் என்னும்
பொருட்கும்   உரியது.  வருத்தம்  உள்ளத்தைப்  பொறுத்த  பண்பு;
உள்ளத்தால்     குறித்து     உணரப்படுவது     இப்படியே   பிற
உரிச்சொற்களுக்கும் கொள்க.

உரிச்சொற்கள்     வெளிப்படையாகப்  பொருள்  உணர்த்துவன,
வெளிப்படையாகப்  பொருள்  உணர்த்தாதன  என  இருவகைப்படும்.
மிகுதி,  வளம்  முதலியன  வெளிப்படையாகப்  பொருள் உணர்த்தும்
உரிச்சொற்கள்.  உறு,  மல்லல் முதலியன வெளிப்படையாகப் பொருள்
உணர்த்தாதன.  ஆசிரியர்  தொல்காப்பியர் வெளிப்படையிற் பொருள்
உணர்த்துவனவற்றை  விட்டு  வெளிப்படையிற் பொருள் உணர்த்தாத
120     சொற்களுக்கு     உலகவழக்கு      செய்யுள்      வழக்கு
ஆகியவற்றைக்கொண்டு  பொருள்  உணர்த்தினார். எனினும் எல்லாச்
சொற்கும்    உணர்த்தினாரில்லை.    அதை   அவரே   புறனடைச்
சூத்திரத்திற்   கூறியுள்ளார்.   (உரியியல்  95).  அப்படிப்  பொருள்
உணர்த்தாத   சொற்களுக்குப்   பொருள்   உணருமாறு  யாங்ஙனம்
என்பதை  ஆசிரியர்,  உரிச்சொற்கள் வந்துள்ள இடங்களில் முன்னும்
பின்னும்  உள்ள  சொற்களைக்  கொண்டு உணர வேண்டும் என்றார்
(உரி.  92)  உதாரணமாகப்  ‘புரை’  என்னும் உரிச்சொல்லை எடுத்துக்
கொள்வோம்.  ‘புரை’  என்பது  ‘உயர்வு’  என்னும்  பொருள்  தரும்
என்றார்  ஆசிரியர்  (4).  அப்பொருளில்  ‘புரைபட  வந்த மறுத்தல்’
(களவியல்  16) என அவரே ஆண்டுள்ளார். ஆனால் ‘புரைதீர் கிளவி
தாயிடைப் படுப்பினும்’ (களவியல் 23) என்னுமிடத்தில் அப்பொருளில்
ஆளவில்லை.  அவர்;  ‘குற்றம்’  என்னும் பொருளில் ஆண்டுள்ளார்.
ஆசிரியர்  தாம்  உரிச்சொற்  பொருள்  உணர்த்திய  இடத்திற்கூறாத
பொருளைத்  தாமே யாண்டு தம் புறனடைச் சூத்திரத்துக்கு (உரி. 92)
உதாரணம் உடம்பொடு புணர்த்தலால் அமைத்தார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 22-08-2017 18:09:41(இந்திய நேரம்)