தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


ஆராய்ச்சி முன்னுரை
புலவர் இரா. இளங்குமரன்

யாப்பு :

‘யாப்பருங்கலம்’ என்பது யாப்பு இலக்கணத்திற்கு அமைந்த ஓர் அரிய அணிகலம் போன்ற நூல் என்னும் பொருள் உடையதாம். இனி, யாப்பு என்பதொரு விரிந்த கடல். அக்கடலைக் கடத்தற்கு அமைந்த அரிய கலம் போலும் நூல் என்றுமாம்.

தீபங்குடியில் வாழ்ந்த சமண சமயச் சான்றோர்களுள், ‘அருங்கலான் வயம்’ என்னும் ஒரு பிரிவினர் இருந்தனர் என்றும், அப்பிரிவினருள் ஒருவர் யாப்பருங்கலமுடையார் என்றும், அதனால்தான் தம் நூலுக்கு ‘யாப்பு அருங்கலம்’ என்று பெயர் சூட்டினார் என்றும் அறிஞர் சிலர் கூறுவர். ஆனால், அது வலிந்து பொருள் கோடல் என்பது வெளிப்படை. ‘அருங்கலான் வயம்’ என்பதைச் சுட்டுவது ஆசிரியர் கருத்தாயின், ‘அருங்கலான் வயயாப்பு’ என்றோ ‘அருங்கலான் யாப்பு’ என்றோ ‘அருங்கலான்வயம்’ என்றோ பெயர் சூட்டியிருப்பார் என்பதைத் தமிழ் நூற் பெயர்களோடு ஒப்பிட்டு நோக்குவார் எளிதில் அறிவர்.

 
‘‘யாப்பு என்பது கவிதை கட்டாம்’’

என்பது சூடாமணி நிகண்டு (11. பகரவெதுகை. 3). உறுதி என்னும் பொருளும் அதற்கு உண்டு.

யாக்க, யாக்குநர், யாக்கும், யாக்கை, யாத்த, யாத்தல், யாத்தற்று, யாத்தன்று, யாத்தனர், யாத்தார், யாத்து, யாத்தேம், யாப்ப, யாப்பர், யாப்பியல், யாப்பிற்று, யாப்புடைத்தாக, யாப்புற, யாப்புறவு முதலாகிய சொற்கள் பெருவரவினவாகப் பழந்தமிழ் நூல்களில் ஆளப்பெற்றுள.

நீர் நிறுத்துதற்கு வரம்பு கட்டி அமைக்கப் பெற்ற பாத்தியை ‘யாப்பு’ என்று வழங்குகின்றார் திருவள்ளுவர். கட்டுதல் என்னும் பொருளிலும் அவரே வழங்கியுள்ளார்.

  

‘‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்’’
‘‘சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து’’
(1093)

(777)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 15:17:59(இந்திய நேரம்)