தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தோல் குருதி, இறைச்சி, நரம்பு, எலும்பு முதலியவற்றால் யாப்புற்று நிற்கும் உடல் ‘யாக்கை’ என்னும் காரணப்பெயர் கொள்ளும். அவ்வியாக்கையை யாப்புடன் இணைத்துக் காட்டினார் நன்னூலார்.

xxi
  
‘‘பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல் போற்பல
சொல்லால் பொருட்கிட னாக உணர்வினின்
வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்’’ 
                 (268)

கூரை வேய்வார் தடுக்குகளை வரிச்சுடன் யாத்தற்குப் பயன்படுத்தும் கருவேல், புளிய வளார்களை ‘ஆக்கை’ என்று வழங்குவதை இன்றும் நாட்டுப் புறங்களில் கேட்கலாம். ஆக்கை என்பது ‘யாக்கை’ என்பதன் திரிபேயாம்.

யாப்பு, ‘கட்டுதல்’ என்னும் பொருளுடைய தாவது எப்படி? எழுத்தால அசையும், அசையால் சீரும், சீரால் தளையும், தளையால் அடியும், அடியால் தொடையும், தொடையால் பாவும் இனங்களும் கட்டுற்றுத் தொடர்ந்து செல்கின்றன. ஆதலால், யாப்பு என்பது ஆயிற்று. இது காரணங்கருதிய பெயராம்.

கலமும் காரிகையும் :

யாப்பருங்கலமும், யாப்பருங்கலக் காரிகையும் ஒரே ஆசிரியரால் யாக்கப் பெற்ற நூல்கள். யாப்பருங்கலத்தை முதற்கண் இயற்றிய ஆசிரியரே அதனினும் எளிமையும் தெளிவும் வரம்பும் உடையதாகத் தம் பட்டறிவு மிகுதியால் யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார். இஃது அவர்தம் பேரருள் பெருந்திறத்தை விளக்குவதாம்.

‘‘வேதத்திற்கு நிருத்தமும், வியாகரணத்திற்குக் காரிகையும், அவிநயர் யாப்பிற்கு நாலடி நாற்பதும் போல யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்ததாகச் செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து’’ என்னும் காரிகைப் பாயிர உரையால் காரிகை, யாப்பருங்கலத்தின் பின்னே எழுந்த நூல் என்பது தெளிவாம்.

யாப்பிற்கு அங்கமாய்ச் செய்யப்பட்ட நூல் காரிகை ஆதலின் அது யாப்பருங்கலப் புறநடை எனவும் வழங்கப் பெறுவதாயிற்று.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-08-2017 17:42:30(இந்திய நேரம்)