Primary tabs
தூரத்தில் இருக்கின்றது என்பதும் தொண்டைமண்டல சதக உரையினால்
தெரிகின்றன.
இந்நூலின் உரை, கருத்துரையும், பொழிப்புரையும், உதாரணமும்,
வினாவிடைகளும், சூத்திரத்தின் பொருள் நன்கு விளங்குதற்கு உரிய
உரைகளும், மேற்கோள்களும் உடையதாய் இருத்தலின், விருத்தி உரை
என்பதில் ஐயுறவில்லை.
இவ்வுரையில் தொல்காப்பியத்தினின்றும், பத்துப்பாட்டு,
எட்டுத்
தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்னும் தொகை நூற்களினின்றும்,
சிந்தாமணி, மணிமேகலை, திருவாசகம், காரிகை முதலிய நூற்களினின்றும்
மேற்கோள்களும் உதாரணங்களும் காட்டப்பட்டிருத்தலின், இவ்வுரை
யாசிரியர் பண்டைய இலக்கண இலக்கியங்களை நன்கு பயின்ற புலமை
உடையார் என்பது இனிது விளங்குகின்றது; ஆயினும் அவர் இன்னார்
என்பது விளங்கவில்லை.
இந்நூல் இப்பொழுது கிடைத்தல் அருமையாய் இருத்தலின், சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் இதனைப் பரிசோதித்துத் தரவேண்டும்
என என்னைக் கேட்டுக்கொண்டு இதன் பிரதி ஒன்றை என்னிடம் தந்தனர்.
அது, இராமநாதபுரம் சமத்தான மகாவித்துவான், பாஷா கவிசேகரர்.
உ.வே.ரா. இராகவ ஐயங்கார் அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பிற்
பார்வையிட்டு வெளியிட்ட இரண்டாம் பதிப்புப் பிரதியாகும். இது 1923 -ஆம் ஆண்டில்
வெளிவந்தது.
சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பேராசிரியரும்,
அக்கலாசாலையின் வெர்னாகுலர் சூபர்இன்டெண்டும் ஆகிய திருவாளர்
மோசூர். கந்தசாமி முதலியார் B.A., அவர்களை நேமிநாதப் பிரதி ஒன்று
தரவேண்டுமென்று கேட்டேன். அவர் ஒரு பிரதி தந்தனர். அதுவும்
மேற்கூறிய இரண்டாம் பதிப்புப் பிரதியே. இப்பிரதியின் ஈற்றில், மதுரைத்
தமிழ்ச் சங்கத்தில் தமிழ்நூற் பரிசோதகராய் விளங்கிய திரு ரா.
சுப்பிரமணியக் கவிராயர் அவர்கள் ஆராய்ச்சிக் குறிப்புக்கள் சில
இருக்கின்றன.