வீரமா முனிவர் சரித்திரச் சுருக்கம்
மான் கத்தோலிக்கு ஆலயமும் சபையு மிருந்தன. பெஸ்கி என்பவர் இந்தியாவுக்கு வந்தவுடன் கொஞ்சக் காலம் அங்கே தங்கி யிருந்தபடியால் தமது விருத்தாப்பியத்திலும் அங்கேயே வசிக்க வெண்ணினா ரென்றும் உத்தேசிக்கலாம். அமைதியற்ற உலகம் வேண்டா மென வெண்ணிய இவருக்கு அமைதியுள்ள அவ்வூர் தகுந்த இடமாயிற்று. எனவே இங்கு சில காலம் வசித்துப் பின் தேகவியோகமானார். அங்குள்ள ஆலயத்தின் பிராகாரத்தில் இவர் சேமிக்கப்பட்டா ரென்றாலும் இதைத் தெரிவிக்க அவ்விடத்தில் சமாதி முதலிய யாதொன்றும் கட்டி யிருக்கக் காணோம். இவ்வாறிருப்பது அவரது பெயர், குணம், தாம் செய்து வந்த சன்மார்க்கத் தொழில், முதலியவற்றிற்கு முழுமையும் தகாத காரிய மன்றோ? அங்குள்ள பரவர்கள் இவர் மேன்மையை யறியாமையினாலோ அல்லது தங்கள் வறுமையினாலோ இவர் மரணத்தைக் குறிக்கும் சமாதி முதலிய யாதொன்றும்கட்டாமற் போனார்களேனும் இவரது சற்குணம், ஆழ்ந்த அறிவு, பயனுறு தொழில், கீர்த்தி, பிரதாபம், முதலியவற்றை யறிந்தவர்களாவது ஏதேனு மொன்றைச் செய்திருக்க வேண்டுமன்றோ? இவரோ தமக்குப் பிறர்செய்வதை யெதிர் பாராமல் தாமே தம்முடைய பெயர் நீடூழி காலம் நிலைத்தோங்கும்படி சிறந்த பல நூல்க ளியற்றி யிருக்கிறா ரன்றியும் இவர் செய்து வந்த வேதியர் தொழிலும் போதுமான ஞாபகக் குறியாம். பெஸ்கி யென்பவர் தென்னாட்டுக்கு வந்த பிறகு தமது இயற்பெயராகிய கன்ஸ்டான்ஷியுஸ் என்பதின் பொருள்படும் தைரியநாதன் என்னும் நாம தேயத்தை வகித் துக்கொண்டா ரென்றும், தேம்பாவணி யெனு நூல் வெளிப்பட்ட பிறகு தமிழ்ப் புலவரால் இவர்க்கு வீரமாமுனிவர் என்னும் அபிதான மளிக்கப் பட்டது என்றும் சொல்வர்.