Primary tabs
உ
மாதி னாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயக னாதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.
இந்நூலின் முதற் பதிப்பு என் தந்தையாரவர்களால் 1918-ஆம் வருஷத்தில் வெளிவந்தது. இரண்டாம் பதிப்பை அவர்களே சில ஆண்டுகளுக்குமுன் வெளியிட எண்ணியும் வேறு பல வேலைகளால் அது நிறைவேறவில்லை.
இந்நூல், மயிலைநாதருரை முதலியவற்றின் அருமை பெருமைகள் அவர்களுடைய முகவுரையால் நன்கு விளங்கும்.
அவர்களுடைய கைப்புத்தகத்திலிருந்த குறிப்புக்களால், இப் பதிப்பில் ஆங்காங்கு சில திருத்தங்கள் அமைந்துள்ளன. விளங்கா மேற்கோள்களில் சில இப்போது விளங்கின. அரும்பத முதலியவற்றின் அகராதி விரிவடைந்துள்ளது.
முற்பதிப்பில் அடிக்குறிப்பாக இருந்த ஆகரங்கள் இதில் உரிய இடங்களில் அங்கங்கே சேர்க்கப்பெற்றுள்ளன.
112-ஆம் பக்கத்துள்ள ‘‘எழுபானிரண்டெழுத்து.....’’ என்னும் வெண்பாவால் பாயிரத்திலுள்ள 52 சூத்திரங்களும் பவணந்தி முனிவர் இயற்றியனவல்லவென்பது அறியப்படும். மயிலைநாதரே 51, 52-ஆம் சூத்திரங்களைப் பனம்பாரம் என்று கூறுவதாலும் இது வலியுறும்.
225-ம் பக்கத்தில் ‘கரையாட’ என்பது பிரதிபேதமாகக் காட்டப்பெற்றுள்ளது. அது பிரதிபேதமன்று. அதனை, 412-ஆம் சூத்திரத்தின் வரலாற்றின் ‘‘கரையாழ.......சுனை’’ என்னும் தொடர்மொழிக்கு அடுத்தாற்போல் (‘கரையாட’) என்று இருக்கவேண்டுமென்று இப்பால் தெரிந்தது. அவ்வாறு அமைத்துக் கொள்ளும்படி அன்பர்களை வேண்டுகிறேன்.
இப்பதிப்பு அச்சாகி வருகையில் ஒப்பு நோக்குதல்
முதலிய உதவிகள்புரிந்த
சென்னை, கிறிஸ்தியன் காலேஜ் ஹைஸ்கூல் முதல்
தமிழாசிரியர் ம-ள-ள-ஸ்ரீ வி.மு. சுப்பிரமணிய
ஐயர் B.O.L. அவர்களுக்கும், திருவல்லிக்கேணி
ஹிந்து ஹைஸ்கூல் தமிழாசிரியர் ம-ள-ள-ஸ்ரீ
வித்துவான் கோ. அரங்கசாமி ஐயங்காரவர்களுக்கும்,
நன்றாக விரைவில் அச்சிட்டுக் கொடுத்த கபீர்
அச்சுக்கூடத்தாருக்கும் என் மனமார்ந்த
நன்றியைச் செலுத்துகின்றேன்.
15-10 -’46.
S. கலியாணசுந்தரம்