தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xx

நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும்

 
 

சூத்திரங்களுள், பொருள் விளங்குவனவற்றிற்குச் சுருக்கமாகவும் ஏனையவற்றிற்கு விரிவாகவும் சிலவற்றிற்கு வினாவிடையாகவும் சிலவற்றிற்கு மோனை எதுகை முதலிய தொடை நயம் படவும் ஒவ்வொன்றைப் பிரித்துப் பிரித்துத் தனித்தனியாகவும் பலவற்றைத் தொகுத்து அவற்றின் இறுதியிற் பிண்டமாகவும் பொருளெழுதிச் செல்லுதல் இவர்க்கு இயல்பு.

இவ்வுரையிற் சிற்சில இடங்களில், ‘உரைப்பாருமுளர்’, ‘கூறுவாருமுளர்’ என்றுவந்துள்ள பகுதிகளைக்கொண்டு இவ்வுரைக்குமுன் நன்னூலுக்கு வேறு உரை இருந்திருக்க வேண்டுமென்று சிலர் ஊகித்தல் கூடும்; ஆயினும், அப்பகுதிகளிற் கண்டவை இப்போது வழங்கிவரும் பிற உரைகளிற் காணப் படாமையாலும், விருத்தியுரைகாரரால் மறுக்கப்பட்டவை இதிற் காணப்படுவதாலும் நன்னூலுக்கு இப்போது வழங்கிவரும் உரைகளுள் இதுவே பழமையானதென்று தெரிகிறது.

‘‘மிகத்தெளி கேள்வி யகத்தியனார்’’, ‘‘ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்’’, ‘‘அளவறு புலமை யவிநயனார்’’, ‘‘புவிபுகழ் பெருமை யவிநயனார்’’, ஆசிரியர் அகத்தியனார் ஆசிரியர் தொல்காப்பியனார் ஆசிரியர் அவிநயனாரென நூலாசிரியர்களையும், ‘‘உளங்கூர் கேள்வி யிளம்பூரணரெனு மேதமின் மாதவர்’’, ‘‘தண்டலங் கிழவன் றகைவரு நேமி யெண்டிசை நிறைபெய ரிராச பவித்திரப் பல்லவ தரையன்’ (அவிநயவுரையாசிரியர்) என உரையாசிரியர்களையும் இவர் பாராட்டிக் கூறியிருத்தலால், முன்னோர்களிடத்து இவருக்குள்ள அன்பும் மதிப்பும் நன்கு விளங்கும்.

இளம்பூரணர், அவிநயவுரையாசிரியர் இவர்களுடைய உரைகளை அங்கங்கே எடுத்தாண்டிருத்தலின் அவர்கள் காலத்திற்கும், ‘அன்’ என்பது, தன்மையொருமை வினைமுற்று விகுதியாக வருமென்பதற்குக் காரிகைக் கடவுள் வாழ்த்திலுள்ள ‘‘பாவினங் கூறுவன்’’ என்னும் பகுதியை மேற்கோள் காட்டியிருத்தலின் அமுத சாகரர் காலத்திற்கும் இவ்வுரையாசிரியர் காலம் பிற்பட்டதென்று தெரிகின்றது.

பாயிரவுரை, இறையனாரகப் பொருட்பாயிரவுரைக் கருத்துக் களையும் ஏனைய பாகங்களினுரைகள் தொல்காப்பிய இளம்பூரண ருரையையும் பெரும்பாலும் பின்பற்றிச் செல்லுகின்றன.

இவ்வுரையாசிரியர் தாமெடுத்துக்காட்டும் மேற்கோள்களுட் சிலவற்றை இன்னாரின்னார் வாக்கென்று புலப்படுத்தியிருத்தலும்,


புதுப்பிக்கபட்ட நாள் : 22-01-2019 18:28:53(இந்திய நேரம்)